பஸ் கட்டண உயர்வை கண்டித்து கல்லூரி மாணவ-மாணவிகள் போராட்டம் வலுக்கிறது


பஸ் கட்டண உயர்வை கண்டித்து கல்லூரி மாணவ-மாணவிகள் போராட்டம் வலுக்கிறது
x
தினத்தந்தி 25 Jan 2018 4:15 AM IST (Updated: 25 Jan 2018 12:30 AM IST)
t-max-icont-min-icon

பஸ் கட்டண உயர்வை கண்டித்து சிவகங்கை, காரைக்குடி மற்றும் பள்ளத்தூர் பகுதிகளில் கல்லூரி மாணவ-மாணவிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

காரைக்குடி,

பஸ் கட்டணத்தை உயர்த்தி தமிழக அரசு கடந்த 19-ந்தேதி அறிவித்தது. அதன்படி 20-ந்தேதி முதல் அரசு பஸ்களின் கட்டணம் உயர்த்தப்பட்டது. திடீர் பஸ் கட்டண உயர்வால் பெரும்பாலான மக்கள் மிகுந்த அவதிக்குள்ளாகினர்.

பஸ் கட்டண உயர்வுக்கு பொதுமக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில், பல்வேறு இடங்களில் கல்லூரி மாணவர்களும், சில அமைப்பினரும் பஸ் கட்டண உயர்வுக்கு கண்டனம் தெரிவித்தும், அதனை திரும்ப பெற வேண்டும் என்று வலியுறுத்தியும் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். சிவகங்கை மாவட்டத்தில் தேவகோட்டை, சிவகங்கை ஆகிய பகுதிகளில் கல்லூரி மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அவர்கள் வகுப்புகளை புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டதுடன், பஸ் கட்டண உயர்வை தமிழக அரசு திரும்ப பெற வேண்டும் என்று அவர்கள் வலியுறுத்தினர். மாணவர்களின் போராட்டம் தற்போது வலுப்பெற்றுள்ளது.

சிவகங்கை மன்னர் துரைசிங்கம் அரசு கலைக்கல்லூரி மாணவர்கள் கடந்த 2 தினங்களாக போராட்டத்தில் ஈடுபட்டனர். உள்ளிருப்பு போராட்டம், ஊர்வலம், ஆர்ப்பாட்டம் என்று தங்களது எதிர்ப்பை அவர்கள் தெரிவித்து வருகின்றனர். பஸ் கட்டண உயர்வை திரும்ப பெறும் வரை தங்களது போராட்டம் தொடரும் என்று அக்கல்லூரி மாணவர்கள் தெரிவித்தனர். போராட்டத்தின்போது, ‘பின்தங்கிய மாவட்டத்தில் உள்ள எங்களது பெற்றோர் வருமானமே ரூ.200 தான். அதில் பாதி பஸ் கட்டணத்திற்கு கொடுக்க வேண்டிய நிலை உள்ளது. இதனால் எங்களது பெற்றோர் குடும்ப செலவுக்கு என்ன செய்வார்கள்’ என்று அவர்கள் கேள்வி எழுப்பினர். பின்னர் தொடர் போராட்டம் காரணமாக சிவகங்கை மன்னர் துரைசிங்கம் அரசு கலைக்கல்லூரிக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

காரைக்குடியில் உள்ள அழகப்பா அரசு கலைக்கல்லூரி மாணவர்கள் நேற்று வகுப்புகளை புறக்கணித்து பஸ் கட்டண உயர்வுக்கு கண்டனம் தெரிவித்து உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதேபோன்று அழகப்பா அரசு பாலிடெக்னிக் கல்லூரி மாணவர்களும் வகுப்புகளை புறக்கணித்துவிட்டு கல்லூரி நுழைவு வாயில் முன்பு உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். காரைக்குடியை அடுத்த பள்ளத்தூரில் உள்ள சீதாலட்சுமி ஆச்சி மகளிர் கல்லூரியில் மாணவிகள் வகுப்புகளை புறக்கணித்து விட்டு, கல்லூரி முன்பு சாலையோரத்தில் அமர்ந்து ஆர்ப்பாட்டம் செய்தனர். தமிழக அரசு பஸ் கட்டண உயர்வை திரும்ப பெற வேண்டும் என்று அவர்கள் வலியுறுத்தினர்.

திருப்பத்தூர் அருகே பூலான்குறிச்சியில் உள்ள அரசு கலைக்கல்லூரியிலும் மாணவர்கள் வகுப்புகளை புறக்கணித்து உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். 

Next Story