பஸ் கட்டண உயர்வுக்கு எதிராக கல்லூரி மாணவர்கள் போராட்டம்


பஸ் கட்டண உயர்வுக்கு எதிராக கல்லூரி மாணவர்கள் போராட்டம்
x
தினத்தந்தி 25 Jan 2018 3:30 AM IST (Updated: 25 Jan 2018 1:23 AM IST)
t-max-icont-min-icon

பஸ் கட்டண உயர்வுக்கு எதிராக நெய்வேலியில் கல்லூரி மாணவர்கள் போராட்டம் செய்தனர்.

நெய்வேலி,

தமிழக அரசு பஸ் கட்டணத்தை உயர்த்தியது. பொதுமக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கும் இந்த கட்டண உயர்வுக்கு எதிராக பல்வேறு அரசியல் கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதற்கிடையே கட்டண உயர்வை கண்டித்து மாணவ, மாணவிகளும் தொடர் போராட்டம் நடத்தி வருகின்றனர். நேற்று தொடர்ந்து 3-வது நாளாக தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் மாணவர்கள் போராட்டம் செய்தனர்.

அந்த வகையில் கடலூர் மாவட்டம் நெய்வேலி வட்டம் 13-ல் உள்ள ஜவகர் அறிவியல் கல்லூரி மாணவ-மாணவிகள் நேற்று காலை கல்லூரி முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது அவர்கள் தமிழக அரசு அறிவித்துள்ள பஸ் கட்டண உயர்வை கண்டித்தும், இந்த கட்டணத்தை வாபஸ்பெற கோரியும் கோஷங்கள் எழுப்பினர். பின்னர் அவர்கள் சிறிது நேரம் கல்லூரி முன்பு அமர்ந்து தர்ணா போராட்டத்திலும் ஈடுபட்டனர். பின்னர் அவர்களாகவே கலைந்து மீண்டும் வகுப்பறைக்கு சென்றனர்.

இதற்கிடையே பஸ் கட்டண உயர்வுக்கு எதிராக கடலூர் அரசு பெரியார் கல்லூரியில் மாணவர்கள் உள்ளிருப்பு போராட்டம் நடத்த போவதாக நேற்று முன்தினமே தகவல் பரவியது. இது பற்றி தகவல் அறிந்ததும் கடலூர் தேவனாம்பட்டினம் போலீசார் கல்லூரி முன்பு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். ஆனால் மாணவர்கள் யாரும் போராட்டம் நடத்தவில்லை. கல்லூரி வழக்கம் போல் செயல்பட்டது.

இந்த நிலையில் நேற்றும் இவர்கள் போராட்டதை தொடங்க இருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதனால் தொடர்ந்து 2-வது நாளாக கல்லூரியில் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது. கல்லூரியில் மாணவர்கள் யாரும் போராட்டத்தில் ஈடுபடாமல், வகுப்புகளுக்கு சென்றனர். தொடர்ந்து கல்லூரி போலீஸ் பாதுகாப்புடனே இயங்கியது. 

Next Story