கலெக்டர் அலுவலகத்தை லாரி டிரைவர்கள் முற்றுகை


கலெக்டர் அலுவலகத்தை லாரி டிரைவர்கள் முற்றுகை
x
தினத்தந்தி 25 Jan 2018 3:30 AM IST (Updated: 25 Jan 2018 1:35 AM IST)
t-max-icont-min-icon

அரசு குவாரியில் மணல் வழங்காததை கண்டித்து கலெக்டர் அலுவலகத்தை லாரி டிரைவர்கள், உரிமையாளர்கள் முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.

விழுப்புரம்,

விழுப்புரம் மாவட்டத்தில் சித்தாத்தூர் திருக்கை, வடக்குநெமிலி ஆகிய இடங்களில் உள்ள தென்பெண்ணையாற்றில் அரசு மணல் குவாரி செயல்பட்டு வருகிறது. இங்கு லாரி மற்றும் மாட்டு வண்டிகளுக்கு ஆன்-லைன் பதிவு மூலம் மணல் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

சித்தாத்தூர் திருக்கையில் செயல்படும் மணல் குவாரியில் விழுப்புரம் மாவட்டம் மட்டுமின்றி சென்னை, காஞ்சீபுரம், மதுரை, வேலூர், திருவண்ணாமலை, திருவள்ளூர் உள்ளிட்ட வெளிமாவட்டங்களில் இருந்தும் ஏராளமான லாரிகள் மணல் ஏற்ற வருகின்றன.

இந்த நிலையில் கடந்த 4 நாட்களாக இந்த குவாரியில் மணல் விற்பனை செய்யப்படவில்லை என தெரிகிறது. இதனால் விழுப்புரம் மற்றும் வெளிமாவட்டங்களில் இருந்து வந்த நூற்றுக்கணக்கான லாரிகள் மணல் ஏற்றிச்செல்ல முடியாமல் நீண்ட வரிசையில் காத்துக் கிடக்கின்றன. இதன் காரணமாக மணல் ஏற்றிச்செல்ல வந்த லாரிகளின் டிரைவர்கள் மற்றும் உரிமையாளர்கள் குடிநீர், உணவு ஏதும் கிடைக்காமல் ஆற்றிலேயே மிகவும் தவித்து வருகின்றனர்.

இதுபற்றி மணல் குவாரியில் உள்ள அதிகாரிகளிடம் சென்று மணல் எப்போது ஏற்றப்படும் என்று கேட்டதற்கு உரிய பதில் அளிக்கவில்லை என கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த லாரி டிரைவர்கள் மற்றும் உரிமையாளர்கள் நேற்று காலை மாவட்ட கலெக்டர் அலுவலகத்திற்கு திரண்டு வந்து அங்குள்ள நுழைவுவாயிலை திடீரென முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதுகுறித்த தகவல் அறிந்ததும் விழுப்புரம் தாலுகா போலீசார் விரைந்து சென்று லாரி டிரைவர்கள், உரிமையாளர்களிடம் சமரச பேச்சுவார்த்தை நடத்தினர். பின்னர் அவர்களில் 5 பேரை மட்டும் பொதுப்பணித்துறை அதிகாரிகளை சந்தித்து முறையிட அனுமதித்தனர்.

அதன்பேரில் அவர்கள் பொதுப்பணித்துறை அதிகாரிகளை சந்தித்து முறையிட்டனர். அப்போது எந்தவித அறிவிப்பும் இன்றி திடீரென மணல் விற்பனை நடைபெறாததால் வெளியூர்களில் இருந்து வந்து 4 நாட்களாக மிகவும் கஷ்டப்பட்டு கொண்டிருப்பதாகவும், எனவே மணல் விற்பனையை உடனே தொடங்க வேண்டும் என்று வலியுறுத்தி விட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர்.

இதையடுத்து நேற்று மதியம் 1 மணிக்கு மேல் சித்தாத்தூர் திருக்கையில் உள்ள அரசு மணல் குவாரியில் லாரிகளுக்கு மணல் விற்பனை செய்யும் பணி தொடங்கியது. இதுகுறித்து மணல் விற்பனை கண்காணிப்பு அதிகாரி கணேசனிடம் கேட்டபோது அவர் கூறுகையில், குவாரியில் மணல் எடுப்பதில் வழி உள்ளிட்ட சில உள்ளூர் பிரச்சினைகள் இருந்து வந்ததால் மணல் விற்பனை செய்ய முடியவில்லை. தற்போது அந்த பிரச்சினையை சுமூகமாக பேசி தீர்வு கண்டுள்ளோம். அதன் அடிப்படையில் இன்று (அதாவது நேற்று) மதியம் 1 மணி முதல் மணல் விற்பனை மீண்டும் தொடங்கியுள்ளது என்றார். 

Next Story