பஸ் கட்டண உயர்வுக்கு எதிர்ப்பு: முதல்-அமைச்சர் வீட்டை முற்றுகையிட முயற்சி; 6 பேர் கைது


பஸ் கட்டண உயர்வுக்கு எதிர்ப்பு: முதல்-அமைச்சர் வீட்டை முற்றுகையிட முயற்சி; 6 பேர் கைது
x
தினத்தந்தி 25 Jan 2018 4:00 AM IST (Updated: 25 Jan 2018 2:36 AM IST)
t-max-icont-min-icon

பஸ் கட்டண உயர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி வீட்டை முற்றுகையிட முயற்சித்த 6 பேர் கைது செய்யப்பட்டனர். சட்டக்கல்லூரி மாணவர்களும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

சென்னை,

பஸ் கட்டணத்தை கடந்த 20-ந்தேதி முதல் அரசு உயர்த்தியது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து அரசியல் கட்சிகள் மற்றும் மாணவர்கள் அமைப்புகள் சார்பில் ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்று வருகின்றன.

சென்னையிலும் கடந்த 2 நாட்களாக பல்வேறு இடங்களில் ஆர்ப்பாட்டம் நடைபெற்று வருகிறது. சென்னை கிரீன்வேஸ் சாலையில் உள்ள முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி வீட்டை முற்றுகையிட போவதாக அனைத்து தமிழ்நாடு மாணவர் சங்கத்தினர் அறிவித்து இருந்தனர். இதையடுத்து கிரீன்வேஸ் சாலை பகுதியில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது.

முதல்-அமைச்சர் வீட்டை முற்றுகையிடுவதற்காக நேற்று காலை டி.ஜி.எஸ்.தினகரன் சாலையில் இருந்து கிரீன்வேஸ் சாலையை நோக்கி வந்த மாணவர் சங்கத்தினரை போலீசார் தடுப்பு வேலி அமைத்து தடுத்து நிறுத்தினார்கள்.

இருப்பினும், அதில் சிலர் தடுப்பு வேலியையும் தாண்டி, முதல்-அமைச்சர் வீட்டை நோக்கி ஓடினார்கள். போலீசாரும் அவர்களை துரத்தினர். அதன்பின்னர், முதல்-அமைச்சர் வீட்டை முற்றுகையிட முயற்சி செய்த 6 பேரை போலீசார் கைது செய்து வேனில் ஏற்றிச்சென்றனர். கைது செய்யப்பட்ட அந்த 6 பேரும் சென்னை பல்கலைக்கழக மாணவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

இதேபோல், பஸ் கட்டண உயர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து சட்டக்கல்லூரி மாணவர்கள் சென்னை பாரிமுனை பஸ் நிலையம் அருகே நேற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது பஸ் கட்டண உயர்வை எதிர்ப்பதை குறிக்கும் ஓவியத்தை வரைந்து கையில் பிடித்தபடி அரசுக்கு எதிராக கோஷங்கள் எழுப்பினார்கள்.

இதுகுறித்து சட்டக்கல்லூரி மாணவர்கள் இசக்கி, காவியா கூறும்போது, ‘பஸ் கட்டண உயர்வை அரசு உடனடியாக திரும்ப பெற வேண்டும். இல்லாவிட்டால், ஜல்லிக்கட்டுக்கு எப்படி போராட்டம் வெடித்ததோ? அதேபோல், பஸ் கட்டண உயர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடக்கும்’ என்றனர். 

Next Story