காரில் ‘சீட் பெல்ட்’ அணியாததால் போலீசார் தாக்கியதாக டிரைவர் தீக்குளிப்பு, பொதுமக்கள் சாலை மறியல்


காரில் ‘சீட் பெல்ட்’ அணியாததால் போலீசார் தாக்கியதாக டிரைவர் தீக்குளிப்பு, பொதுமக்கள் சாலை மறியல்
x
தினத்தந்தி 25 Jan 2018 4:45 AM IST (Updated: 25 Jan 2018 2:37 AM IST)
t-max-icont-min-icon

தரமணியில், காரில் ‘சீட் பெல்ட்’ அணியாததால் பொது இடத்தில் வைத்து போலீசார் தாக்கியதால் மனம் உடைந்த கார் டிரைவர், உடலில் பெட்ரோல் ஊற்றி தீக்குளித்தார்.

ஆலந்தூர்,

நெல்லையை சேர்ந்தவர் மணிகண்டன் (வயது 28). இவர் தாம்பரம் பகுதியில் தங்கி இருந்து, கிண்டியில் உள்ள தனியார் கால்டாக்சி நிறுவனத்தில் கார் டிரைவராக பணிபுரிகிறார். நேற்று மாலை வேளச்சேரிக்கு சவாரி சென்றுவிட்டு கிண்டிக்கு திரும்பி வந்து கொண்டு இருந்தார். சென்னை தரமணி எஸ்.ஆர்.பி.டூல்ஸ் பகுதியில் வேளச்சேரி போக்குவரத்து போலீசார் 4 பேர் வாகன சோதனையில் ஈடுபட்டு இருந்தனர்.

அப்போது அந்த வழியாக மணிகண்டன் காரில் ‘சீட் பெல்ட்’ அணியாமல் வந்ததாக தெரிகிறது. இதை கண்டதும் அவரது காரை போலீசார் நிறுத்தினார்கள். காரில் ‘சீட் பெல்ட்’ அணியாமல் வந்ததால் வழக்குப்பதிவு செய்ய வேண்டும் என்று கூறி அவரிடம் போக்குவரத்து போலீசார் பணம் கேட்டதாக கூறப்படுகிறது.

இதனால் போக்குவரத்து போலீசாருக்கும், மணிகண்டனுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. அப்போது போக்குவரத்து போலீசார், டிரைவர் மணிகண்டனை தாக்கியதாக கூறப்படுகிறது. மேலும் மணிகண்டனின் ஓட்டுனர் உரிமம், செல்போன் ஆகியவற்றையும் போலீசார் பறித்துக்கொண்டனர்.

பொது இடத்தில் வைத்து தன்னை போலீசார் தாக்கியதால் அவமானம் அடைந்த டிரைவர் மணிகண்டன், அருகில் உள்ள பெட்ரோல் பங்கில் இருந்து 1 லிட்டர் பெட்ரோல் வாங்கி வந்தார்.

தனது கார் முன் வந்த மணிகண்டன், போக்குவரத்து போலீசார் கண் எதிரேயே தனது உடலில் பெட்ரோலை ஊற்றி தீக்குளித்தார். அவரது உடல் முழுவதும் தீ பரவியது.

இதனால் அதிர்ச்சி அடைந்த போக்குவரத்து போலீசார், அங்கிருந்து ஓடி விட்டனர். ஒரே ஒரு போக்குவரத்து போலீஸ்காரர் மட்டும் ஓடி வந்து மணிகண்டன் உடலில் எரிந்த தீயை தண்ணீர் ஊற்றி அணைத்தார். இதில் மணிகண்டன் படுகாயம் அடைந்தார்.

இதை கண்டதும் அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள், கம்ப்யூட்டர் என்ஜினீயர்கள் அங்கு திரண்டு வந்தனர். எதற்காக தீக்குளித்தாய்? என மணிகண்டனிடம் விசாரித்தனர்.

அப்போது அவர், போக்குவரத்து போலீசார், காரில் ‘சீட் பெல்ட்’ அணியவில்லை என்று கூறி தன்னை தரக்குறைவான வார்த்தைகளால் திட்டி தாக்கியதால் மனமுடைந்து தீ்க்குளித்ததாக கூறினார். இதனால் அந்த போக்குவரத்து போலீஸ்காரரும் அங்கிருந்து சென்று விட்டார்.

இந்த தகவல் காட்டுத்தீ போல் பரவியது. நூற்றுக்கணக்கானவர்கள் அங்கு திரண்டு வந்தனர். அதற்குள் தரமணி போலீஸ் ரோந்து வாகனம் அங்கு வந்து, தீக்காயங்களுடன் உயிருக்கு போராடிய டிரைவர் மணிகண்டனை போலீஸ் வாகனத்தில் ஏற்றிக்கொண்டு சென்னை கீழ்பாக்கம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர்.

இதற்கிடையில் டிரைவர் மணிகண்டன், தீக்குளிக்கும் முன் தனது செல்போனில் வாக்குமூலம் அளித்து உள்ளார். அதில் அவர், “காரில் ‘சீட் பெல்ட்’ அணியாமல் வந்ததாக போலீசார் என்னை தடுத்து நிறுத்தினார்கள். இதில் வாக்குவாதம் ஏற்பட்டது. அதை நான் செல்போனில் புகைப்படம் எடுக்கும்போது என்னை போலீசார் தரக்குறைவாக பேசி அடித்தனர். இதனால் மனமுடைந்த நான், பெட்ரோல் ஊற்றி தீக்குளிக்கப்போகிறேன்” என கூறி உள்ளார்.

இதைதொடர்ந்து தரமணியில் போக்குவரத்து போலீசாரின் தொல்லை அதிகமாகிவிட்டதாக கூறி நூற்றுக்கணக்கான பொதுமக்கள் தரமணி ராஜீவ்காந்தி சாலையில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

போக்குவரத்து போலீசார் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். டிரைவர் மணிகண்டனை தாக்கிய போக்குவரத்து போலீசார் சம்பவ இடத்துக்கு வரவேண்டும் என்று கூறி கோஷங்களை எழுப்பினார்கள். இதனால் தரமணியில் இருந்து துரைப்பாக்கம் வரை ராஜீவ்காந்தி சாலையில் வாகனங்கள் செல்லமுடியாமல் தேங்கி நின்றன.

இது பற்றி தகவல் அறிந்ததும் அடையாறு போலீஸ் துணை கமிஷனர் ரோகித்நாதன், திருவான்மியூர் போலீஸ் உதவி கமிஷனர் சுப்புராயன், இன்ஸ்பெக்டர்கள் பாஸ்கர், ஜெயசீலன் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர்.

சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி அனைவரையும் அங்கிருந்து கலைந்து போகும்படி செய்தனர். இதனால் தரமணியில் இருந்து துரைப்பாக்கம் வரை சுமார் 2 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

தரமணி பகுதியில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது.

கீழ்ப்பாக்கம் அரசு பொது மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு உள்ள நெல்லை மாவட்டம் சங்கரன்கோவில் அருகே உள்ள பனைவடலிசத்திரம் கிராமத்தை சேர்ந்த மணிகண்டனை சென்னை மாநகர போலீஸ் கமிஷனர் ஏ.கே.விஸ்வநாதன் சென்று பார்த்தார்.

பின்னர் மணிகண்டனுக்கு தேவையான சிகிச்சைகளை அளிக்க வேண்டும் என டாக்டர்களிடம் கேட்டுக்கொண்டார். அவருக்கு உயர்தர சிகிச்சை அளிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழக சுகாதார துறை செயலாளரிடம் மாநகர போலீஸ் கமிஷனர் கேட்டுக்கொண்டார்.

இந்த சம்பவம் தொடர்பாக வேளச்சேரி போக்குவரத்து போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் தாமரைசெல்வன் உடனடியாக விடுவிக்கப்பட்டு காத்திருப்போர் பட்டியலில் வைக்கப்பட்டார். மேலும் இது பற்றி துறை ரீதியாக விசாரணை நடத்த சென்னை மாநகர போக்குவரத்து கூடுதல் கமிஷனர் அருணுக்கு மாநகர கமிஷனர் உத்தரவிட்டு உள்ளதாக போலீசார் தெரிவித்தனர். 

Next Story