கவர்னர் மீது ஜனாதிபதியிடம் புகார் செய்வேன் முதல்– அமைச்சர் நாராயணசாமி பேட்டி


கவர்னர் மீது ஜனாதிபதியிடம் புகார் செய்வேன் முதல்– அமைச்சர் நாராயணசாமி பேட்டி
x
தினத்தந்தி 25 Jan 2018 5:30 AM IST (Updated: 25 Jan 2018 3:01 AM IST)
t-max-icont-min-icon

தொடர்ந்து அரசு நடவடிக்கைகளில் கவர்னர் தலையிட்டு வருகிறார். இனியும் இதுதொடர்ந்தால் எம்.எல்.ஏ.க்களை அழைத்துச் சென்று ஜனாதிபதியிடம் புகார் செய்வேன் என்று முதல்–அமைச்சர் நாராயணசாமி கூறினார்.

புதுச்சேரி

புதுவை முதல்–அமைச்சர் நாராயணசாமி நேற்று நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:–

புதுவை பொதுப்பணித்துறை அலுவலகத்துக்கு சென்று கவர்னர் கிரண்பெடி ஆய்வு நடத்தி உள்ளார். நான் ஏற்கனவே அவருக்கு விதிமுறைகளை குறிப்பிட்டு கவர்னருக்கான அதிகாரம் குறித்து அரசியலமைப்பு சட்டம், யூனியன் பிரதேச சட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ளவற்றை சுட்டிக்காட்டி பல கடிதங்களை எழுதியுள்ளேன். அரசு அலுவலகங்களுக்கு சென்று ஆய்வு நடத்தவோ, அதிகாரிகளுக்கு நேரடியாக உத்தரவிடவோ கவர்னருக்கு எந்த அதிகாரமும் இல்லை.

அதை மீறி செய்யக்கூடாது என்று கவர்னருக்கு 9 மாதங்கள் கடிதம் எழுதியுள்ளேன். அன்றாட அரசு நிர்வாகத்தை நடத்த முதல்–அமைச்சர், அமைச்சர்களுக்கு அதிகாரம் உள்ளது. முதல்–அமைச்சர், அமைச்சர்களின் ஆலோசனைப்படிதான் கவர்னர் செயல்பட வேண்டும். முதல்–அமைச்சருடன் கலந்து ஆலோசித்துதான் கவர்னர் நடவடிக்கை எடுக்கவேண்டும்.

சில கோப்புகளை மத்திய அரசுக்கு அனுப்பி ஒப்புதல் பெற வேண்டும். ஆனால் தனிப்பட்ட அதிகாரம் கவர்னருக்கு கிடையாது. சட்டமன்றம், அமைச்சரவையை மீறி செயல்படும் அதிகாரம் அவருக்கு இல்லை. இதுதொடர்பாக நான் ஏற்கனவே ஜனாதிபதி, பிரதமர், உள்துறை மந்திரி ஆகியோருக்கு கடிதம் அனுப்பி உள்ளேன்.

இந்தியாவில் உள்ள மாநிலங்களில் தமிழகம், புதுச்சேரியை தவிர வேறு எந்த மாநிலத்திலும் கவர்னர்கள் ஆய்வுக்கு செல்வதில்லை. மத்தியில் பாரதீய ஜனதா அரசு உள்ளதால் அவர்கள் இதுபோன்ற நடவடிக்கைகளில் ஈடுபடுகின்றனர். டெல்லி கவர்னர்கூட அரசு அலுவலகங்களுக்கு சென்று ஆய்வு செய்வதில்லை. டெல்லியை பொறுத்தவரை நிலம், நிதி, சட்டம் ஒழுங்கு போன்றவை மத்திய அரசின் கட்டுப்பட்டிற்குள் உள்ளது.

புதுவையை பொறுத்தவரை மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசு இல்லாத நேரத்தில் ஜனாதிபதி நேரடியாக அதிகாரம் செலுத்தலாம். அரசு அமைந்துவிட்டால் ஜனாதிபதியால் நேரடியாக அதிகாரம் செலுத்த முடியாது. ஜனாதிபதிக்கே அதிகாரம் இல்லாத நிலையில் அவரால் நியமிக்கப்பட்ட ஏஜண்டான கவர்னருக்கு எங்கிருந்து அதிகாரம் வந்தது?

கவர்னர் கிரண்பெடி அதிகார துஷ்பிரயோகம் செய்து மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுக்கு களங்கம் கற்பிக்க ஆய்வு செய்கிறார். இதுதொடர்பாக அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்களுடன் கலந்துபேசி பல கடிதங்களை கவர்னருக்கு எழுதியுள்ளேன். அவர் எனக்கு பதில் எழுதும்போது, விதிப்படிதான் நடக்கிறேன் என்று கூறுகிறார். ஆனால் எந்த விதிப்படி என்று அவர் சுட்டிக்காட்டுவதில்லை.

அவர் தொடர்ந்து இதேபோல் செயல்பட்டால் அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்களை அழைத்துச் சென்று ஜனாதிபதியிடம் புகார் செய்வேன். மேலும் பிற கட்சி தலைவர்களையும் சந்தித்து இதுதொடர்பாக கூறுவோம். புதுவை மாநிலத்தை பொறுத்தவரை கவர்னர் நேரடியாக எந்த உத்தரவும் போடமுடியாது. கோப்புகளில் ஏதாவது விளக்கம் தேவை என்றால் சம்பந்தப்பட்ட துறை செயலாளருக்கு கடிதம் அனுப்பி பெறவேண்டும்.

அதிகாரிகளை அழைத்து தன்னிச்சையாக கூட்டம் போடுவது, மிரட்டுவது போன்றவை அவர் வகிக்கும் பதவிக்கு உகந்ததல்ல. அவர் தனது செயல்பாடுகளை மாற்றிக்கொள்ள வேண்டும். பொதுப்பணித்துறை அதிகாரிகளுடன் அமைச்சர் நமச்சிவாயம் ஏற்கனவே கூட்டம் நடத்தி சில உத்தரவுகளை பிறப்பித்துள்ளது. ஆனால் கவர்னருக்கு போட்டோ எடுத்து பிரதமருக்கு அனுப்புவதுதான் வேலை.

நியமன எம்.எல்.ஏ.க்கள் விவகாரத்தில் அரசு செயலாளர்கள் சில உத்தரவுகளை போட்டார்கள். அது செல்லாது என்று கூறி உள்ளேன். விதிமுறைகளை மீறி செயல்படும் அதிகாரிகள் மீதும் நடவடிக்கை எடுப்போம்.

இவ்வாறு முதல்–அமைச்சர் நாராயணசாமி கூறினார்.

Next Story