பெட்ரோல், டீசல் விலை உயர்வுக்கு நாராயணசாமி கண்டனம்


பெட்ரோல், டீசல் விலை உயர்வுக்கு நாராயணசாமி கண்டனம்
x
தினத்தந்தி 25 Jan 2018 5:00 AM IST (Updated: 25 Jan 2018 3:01 AM IST)
t-max-icont-min-icon

பெட்ரோல், டீசல் விலை உயர்வுக்கு முதல்–அமைச்சர் நாராயணசாமி கண்டனம் தெரிவித்தார்.

புதுச்சேரி

புதுவை முதல்–அமைச்சர் நாராயணசாமி நேற்று நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:–

இந்திய நாட்டில் பெட்ரோல், டீசல் விலை விண்ணை முட்டும் அளவுக்கு உயர்ந்துள்ளது. பெட்ரோல் லிட்டர் ஒன்றுக்கு மும்பையில் ரூ.80, சென்னையில் ரூ.76, புதுச்சேரியில் ரூ.72 என விற்பனை செய்யப்படுகிறது. அதேபோல் டீசல் விலையும் வரலாறு காணாத வகையில் உயர்ந்துள்ளது. மத்தியில் காங்கிரஸ் ஆட்சி இருந்தபோது கச்சா எண்ணெய் பீப்பாய் ஒன்றுக்கு 124 டாலராக இருந்தது. அப்போது பெட்ரோல் விலை ரூ.64 தான்.

ஆனால் இப்போது கச்சா எண்ணெய் பீப்பாய் ஒன்றுக்கு 69 டாலராக குறைந்து உள்ளது. ஆனால் பெட்ரோல், டீசல் விலை அதிகமாக உள்ளது. இது கண்டிக்கத்தக்கது. முன்பு 15 நாட்களுக்கு ஒருமுறை பெட்ரோல், டீசல் விலை நிர்ணயிக்கப்பட்டது. ஆனால் இப்போது நாள்தோறும் விலையை நிர்ணயிக்கிறார்கள். இதனால் சாதாரண, நடுத்தர மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.

பெட்ரோலிய பொருட்கள் மூலம் மத்திய அரசுக்கு சுமார் 2 லட்சம் கோடி வரி வருமானமாக வருகிறது. கச்சா எண்ணெய் விலை குறைந்து இருந்தாலும் பெட்ரோல், டீசல் விலையை உயர்த்தி மக்களுக்கு மத்திய அரசு இழப்பை ஏற்படுத்தி வருகிறது. புதுவையில் வாட் வரி குறைவு என்பதால் பெட்ரோல், டீசல் விலை கட்டுக்குள் உள்ளது. மத்திய அரசு தனக்கு கிடைக்கும் வருவாயை குறைத்து பெட்ரோல், டீசல் விலையை குறைக்கவேண்டும்.

பெட்ரோல், டீசல் விலை உயர்ந்தால் காய்கறி உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களின் விலையும் உயர்ந்துவிடும். ஒரு பக்கம் மக்கள் பஸ் கட்டண உயர்வுக்காக போராடிவரும் நேரத்தில் மத்திய அரசு பெட்ரோல், டீசல் விலையை உயர்த்துகிறது. இதுதொடர்பாக மக்களுக்கு மத்திய அரசு விளக்கம் அளிக்கவேண்டும். பெட்ரோல், டீசல் விற்பனையில் கார்பரேட் நிறுவனங்களும் ஈடுபட்டுள்ளன. அத்தகைய நிறுவனங்களுக்கு ஆதரவாக மத்திய அரசு செயல்படுகிறது.

இவ்வாறு நாராயணசாமி கூறினார்.

Next Story