திருச்செந்தூர் கடலில் குதித்து ஓட்டல் உரிமையாளர் தற்கொலை


திருச்செந்தூர் கடலில் குதித்து ஓட்டல் உரிமையாளர் தற்கொலை
x
தினத்தந்தி 25 Jan 2018 4:30 AM IST (Updated: 25 Jan 2018 4:02 AM IST)
t-max-icont-min-icon

திருச்செந்தூரில் கடலில் குதித்து கோவையை சேர்ந்த ஓட்டல் உரிமையாளர் தற்கொலை செய்து கொண்டார். உடல்நலக்குறைவால் மனமுடைந்த அவர் இந்த சோக முடிவை எடுத்துள்ளார்.

திருச்செந்தூர்,

கோவை சாஸ்திரி வீதி உருமாண்டம்பாளையத்தை சேர்ந்தவர் பாலசுப்பிரமணியம் (வயது 51). இவர் கோவையில் ஓட்டல் நடத்தி வந்தார். இவருடைய மனைவி சகுந்தலா (43). இவர்களுக்கு திவ்ய பிரசாத் (19) என்ற மகனும், பூரண அம்பிகா (13) என்ற மகளும் உள்ளனர். திவ்ய பிரசாத், சென்னையில் உள்ள என்ஜினீயரிங் கல்லூரியில் 2-ம் ஆண்டு படித்து வருகிறார். பூரண அம்பிகா, கோவையில் 8-ம் வகுப்பு படித்து வருகிறார்.

இந்த நிலையில் பாலசுப்பிரமணியத்துக்கு கடந்த சில நாட்களாக உடல்நலம் பாதிக்கப்பட்டது. இதனால் அவரால் ஓட்டல் தொழிலை சரிவர நடத்த முடியவில்லை. இதனால் அவர் மனமுடைந்த நிலையில் இருந்துள்ளார்.

கடலில் குதித்து...

நேற்று முன்தினம் காலையில் சகுந்தலா தன்னுடைய மகளை பள்ளிக்கூடத்துக்கு அழைத்து சென்றார். அப்போது வீட்டில் தனியாக இருந்த பாலசுப்பிரமணியம், திருச்செந்தூருக்கு புறப்பட்டு வந்தார். இரவு 11 மணி அளவில் திருச்செந்தூர் கோவில் கடற்கரைக்கு சென்ற அவர் திடீரென்று கடலில் குதித்தார். சிறிதுநேரத்தில் இறந்த அவருடைய உடல் கடற்கரையில் ஒதுங்கியது.

இதனைப் பார்த்து அதிர்ச்சி அடைந்த அக்கம்பக்கத்தினர் திருச்செந்தூர் கோவில் போலீஸ் நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனர். உடனே போலீஸ் இன்ஸ்பெக்டர் ஷீஜாராணி மற்றும் போலீசார் விரைந்து சென்று, அவருடைய உடலை மீட்டு பரிசோதனைக்காக திருச்செந்தூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

போலீசார் விசாரணை

அவர், சட்டைப்பையில் ஒரு தாளில் வீட்டின் முகவரி, செல்போன் எண்களை எழுதி வைத்து இருந்தார். அதன்மூலம் போலீசார் அவருடைய குடும்பத்தினருக்கு தகவல் தெரிவித்தனர். திருச்செந்தூர் அரசு ஆஸ்பத்திரியில் பிரேத பரிசோதனைக்கு பின்னர் நேற்று அவருடைய உடல் குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டது. இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

Next Story