உயர் அதிகாரி போல் கையெழுத்து போட்டு முறைகேடு அரசு ஊழியர் பணி இடைநீக்கம்


உயர் அதிகாரி போல் கையெழுத்து போட்டு முறைகேடு அரசு ஊழியர் பணி இடைநீக்கம்
x
தினத்தந்தி 25 Jan 2018 4:30 AM IST (Updated: 25 Jan 2018 4:30 AM IST)
t-max-icont-min-icon

பெங்களூருவில் உள்ள கிராம மேம்பாடு மற்றும் பஞ்சாயத்து ராஜ் துறையில் ஊழியராக பணியாற்றி வந்தவர் சுரேஷ். இவர் போலியாக, உயர் அதிகாரிகளின் கையெழுத்தை போட்டு முறைகேட்டில் ஈடுபட்டுள்ளதாக சொல்லப்படுகிறது.

பெங்களூரு,

சுரேஷ் மீது துறை ரீதியிலான விசாரணைக்கு நிர்வாக பிரிவு இணை இயக்குனர் காட்யாயிணி ஆல்வா உத்தரவிட்டார். விசாரணையில் அவர் உயர்அதிகாரிகள் போல் கையெழுத்து போட்டு போலி ஆவணங்கள் மூலம் முறைகேட்டில் ஈடுபட்டது தெரியவந்தது.

இந்த நிலையில் சமீபத்தில் அரசிடம் இருந்து விசாரணை அதிகாரிக்கு, காட்யாயிணியின் பெயரில் ஒரு உத்தரவு வந்தது. அதில், ‘சுரேஷ் மீது நடவடிக்கை எதுவும் எடுக்கவேண்டாம். அவர் அந்த பணியிலேயே தொடரட்டும்’ என கூறப்பட்டு இருந்தது. இதனால் சந்தேகம் அடைந்த விசாரணை அதிகாரி, காட்யாயிணியிடம் உத்தரவு குறித்து விசாரித்தார். அப்போது, அவர் எந்த உத்தரவையும் வழங்கவில்லை எனவும், சுரேஷ் தான் அவருடைய கையெழுத்தை போலியாக போட்டு முறைகேட்டில் ஈடுபட்டதும் தெரியவந்தது.

இதனால் அதிர்ச்சி அடைந்த இணை இயக்குனர் காட்யாயிணி, சுரேசை பணி இடைநீக்கம் செய்து உத்தரவிட்டார். மேலும், அவர் போலியாக கையெழுத்து போட்டு முறைகேட்டில் ஈடுபட்டது குறித்து அல்சூர் கேட் போலீசில் புகார் செய்யப்பட்டுள்ளது. போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். 

Next Story