முழுஅடைப்புக்கு அரசியல் சாயம் பூசுவது சரியல்ல வாட்டாள் நாகராஜ் பேட்டி


முழுஅடைப்புக்கு அரசியல் சாயம் பூசுவது சரியல்ல வாட்டாள் நாகராஜ் பேட்டி
x
தினத்தந்தி 25 Jan 2018 5:35 AM IST (Updated: 25 Jan 2018 5:35 AM IST)
t-max-icont-min-icon

பா.ஜனதா தனது தவறை மூடி மறைக்க முழுஅடைப்புக்கு அரசியல் சாயம் பூசுவது சரியல்ல என்று வாட்டாள் நாகராஜ் கூறினார்.

பெங்களூரு,

மகதாயி நதிநீர் பிரச்சினையில் பிரதமர் தலையிட வலியுறுத்தி கர்நாடகத்தில் இன்று (வியாழக்கிழமை) முழுஅடைப்பு போராட்டத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டு உள்ளது. இதுகுறித்து கன்னட சங்கங்களின் கூட்டமைப்பு தலைவர் வாட்டாள் நாகராஜ் பெங்களூருவில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தபோது கூறியதாவது:-

மகதாயி நதிநீர் பிரச்சினையை தீர்க்க கோரி வடகர்நாடக விவசாயிகள் கடந்த 2 ஆண்டுக்கும் மேலாக தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகிறார்கள். ஆயினும் இந்த பிரச்சினை தீரவில்லை. இதில் பிரதமர் தலையிட வேண்டும் என்று அந்த மக்கள் வலியுறுத்துகிறார்கள். அதனால் பெங்களூரு வரவுள்ள பிரதமரின் மோடியின் கவனத்தை ஈர்க்கும் வகையிலும், இதில் அவர் தலையிட வேண்டும் என்பதை வலியுறுத்தியும் நாங்கள் நாளை (அதாவது இன்று) முழு அடைப்புக்கு அழைப்பு விடுத்துள்ளோம்.

இதற்கு பா.ஜனதா தலைவர்கள் அரசியல் சாயம் பூசுவது சரியல்ல. நாங்கள் எதற்காக அரசியல் செய்ய வேண்டும். நாங்கள் அரசியலுக்கு அப்பாற்பட்டவர்கள். எங்களை அரசியலுக்குள் இழுக்க வேண்டாம். கர்நாடகத்தில் பா.ஜனதாவுக்கு தான் அதிக எம்.பி.க்கள் உள்ளனர். பிரதமராக பதவி ஏற்ற பிறகு மோடி கர்நாடகத்திற்கு 5 தடவை வந்தார். அவரிடம் அவருடைய கட்சியை சேர்ந்த எம்.பி.க்கள் மகதாயி நதிநீர் பிரச்சினை குறித்து எடுத்துக்கூறாதது ஏன்?.

மகதாயி நதிநீர் பிரச்சினையை தீர்ப்பதாக பா.ஜனதா வாக்குறுதியை அளித்தது. ஆனால் அதை நிறைவேற்ற அந்த கட்சி தவறிவிட்டது. இதை மூடிமறைக்கவே நாங்கள் நடத்தும் முழு அடைப்புக்கு அக்கட்சி அரசியலை தொடர்புபடுத்தி பேசுகிறது. இந்த போராட்டத்திற்கு களங்கத்தை ஏற்படுத்த அந்த கட்சி சதி செய்கிறது.

நாங்கள் நடத்தும் போராட்டத்திற்கு 2,000-க்கும் மேற்பட்ட கன்னட சங்கங்கள் ஆதரவு வழங்கியுள்ளன. அதனால் திட்டமிட்டப்படி கர்நாடகத்தில் முழு அடைப்பு நடந்தே தீரும். இதில் எந்த சந்தேகமும் இல்லை. மக்கள் இதற்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும். மக்களுக்கு தொந்தரவு கொடுக்க வேண்டும் என்ற எண்ணம் எங்களுக்கு இல்லை. வட கர்நாடக மக்களின் பிரச்சினை தீர வேண்டும்.

மருத்துவமனைகள் உள்பட அத்தியாவசிய தேவைகளுக்கு எந்த தொந்தரவும் இருக்காது. அடுத்த மாதம் (பிப்ரவரி) 4-ந் தேதி பிரதமர் மோடி பெங்களூரு வரவுள்ளார். அன்றைய தினம் 10 ஆயிரம் பேர் சேர்ந்து முற்றுகை போராட்டத்தை நடத்துவோம்.

இவ்வாறு வாட்டாள் நாகராஜ் கூறினார். 

Next Story