பா.ஜனதா- ஜனதாதளம் (எஸ்) கூட்டணி ஆதரவுடன் வெற்றி: அணி மாறிய பாக்கியவதி மைசூரு புதிய மேயராக தேர்வு


பா.ஜனதா- ஜனதாதளம் (எஸ்) கூட்டணி ஆதரவுடன் வெற்றி: அணி மாறிய பாக்கியவதி மைசூரு புதிய மேயராக தேர்வு
x
தினத்தந்தி 25 Jan 2018 6:11 AM IST (Updated: 25 Jan 2018 6:11 AM IST)
t-max-icont-min-icon

மைசூரு புதிய மேயராக காங்கிரசில் இருந்து விலகி அணி மாறிய பாக்கியவதி தேர்வானார். இவர் பா.ஜனதா- ஜனதாதளம் (எஸ்) கூட்டணி ஆதரவுடன் வெற்றி பெற்றுள்ளார்.

மைசூரு,

பா.ஜனதா-ஜனதா தளம் (எஸ்) கவுன்சிலர்கள், காங்கிரஸ் கவுன்சிலர்கள் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டு தள்ளுமுள்ளு உருவானது. முடிவில் காங்கிரஸ் வெளிநடப்பு செய்தது.

கர்நாடகத்தில் பெங்களூருவை அடுத்து பெரிய மாநகராட்சியாக மைசூரு மாநகராட்சி விளங்குகிறது. 65 வார்டுகளை கொண்ட மைசூரு மாநகராட்சிக்கு கடந்த முறை நடந்த தேர்தலில் எந்த கட்சிக்கும் தனிப்பெரும்பான்மை கிடைக்கவில்லை. அதாவது, காங்கிரஸ் கட்சி 22 வார்டுகளிலும், ஜனதாதளம் (எஸ்) கட்சி 20 வார்டுகளிலும், பா.ஜனதா 12 வார்டுகளிலும் வெற்றி பெற்றிருந்தன. மேலும் சுயேச்சைகள் 6 இடங்களில் வெற்றி வாகை சூடியிருந்தனர். அத்துடன் எஸ்.டி.பி.ஐ. கட்சி 3 இடங்களிலும், பி.ஆர்.எஸ். காங்கிரஸ் ஒரு இடத்திலும், கர்நாடக ஜனதா கட்சி (பா.ஜனதாவில் இருந்து விலகியபோது எடியூரப்பா தொடங்கிய கட்சி) ஒரு இடத்திலும் வெற்றி வாகை சூடியிருந்தன.

இதனால் மேயர், துணை மேயர் தேர்தலில் ஜனதாதளம் (எஸ்) கட்சியும், பா.ஜனதா கட்சியும் கூட்டணி அமைத்து போட்டியிட்டன. இதன் பலனாக கடந்த 4 ஆண்டுகளாக மைசூரு மாநகராட்சி மேயர், துணை மேயர் பதவி, ஜனதாதளம்(எஸ்)-பா.ஜனதா கூட்டணி கைப்பற்றி வந்தன. இதுவரை மேயர்களாக ராஜேஸ்வரி, ஆர்.லிங்கப்பா, பி.எல்.பைரப்பா, எம்.ஜே.ரவிக்குமார் ஆகியோர் இருந்துள்ளனர். இவர்கள் அனைவரும் ஜனதாதளம் (எஸ்) கட்சியை சேர்ந்த கவுன்சிலர்கள் ஆவார்கள். அதேப் போல் துணை மேயர்களாக பா.ஜனதாவை சேர்ந்த சைலேந்திரா, மகாதேவப்பா, வனிதா, ரத்னா ஆகியோர் வகித்தனர்.

இந்த நிலையில் மைசூரு மாநகராட்சி 5-வது ஆண்டுக்கான மேயர், துணை மேயர் தேர்தல் நேற்று நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டு இருந்தது. இதற்கிடையே மைசூரு மாநகராட்சி மேயர் பதவி, ஆதிதிராவிடர் மகளிருக்கும், துணை மேயர் பதவி பழங்குடியின மகளிருக்கும் இடஒதுக்கீடு செய்து கர்நாடக அரசு அறிவித்துள்ளது. இது ஜனதாதளம் (எஸ்)-பா.ஜனதா கூட்டணி கட்சியினர் இடையே கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. ஏனெனில் இந்த கூட்டணியில் யாரும் ஆதிதிராவிடர் வகுப்பை சேர்ந்த பெண் கவுன்சிலர்கள் இல்லை. இதனால் மேயர், பதவி அந்த கூட்டணியிடம் இருந்து பறிபோகும் நிலை ஏற்பட்டது.

காங்கிரஸ் கட்சி சார்பில் மேயர் பதவிக்கு கவுன்சிலர்களான கமலா அல்லது பாக்கியவதிக்கு வாய்ப்பு அதிகமாக இருந்தது. இதனால் காங்கிரசார் மைசூரு மாநகராட்சி மேயர் பதவி தங்களது கட்சிக்கு வந்துவிடும் என நினைத்து பெருமைப்பட்டு வந்தனர். காங்கிரஸ் கட்சி சார்பில் கமலா, மேயர் பதவி வேட்பாளர் என அறிவிக்கப்பட்டார். ஆனால் மேயர் பதவி வேட்பாளராக தான் அறிவிக்கப்படாததால் பாக்கியவதி அதிருப்தியில் இருந்தார்.

இதனை ஜனதாதளம் (எஸ்)- பா.ஜனதா கூட்டணி தங்களுக்கு சாதகமாக எடுத்துக்கொண்டு, உங்களை மேயர் ஆக்குகிறோம் என கூறி பாக்கியவதியிடம் பேச்சுவார்த்தை நடத்தின. அதற்கு அவரும் சம்மதம் தெரிவித்தார். அதைதொடர்ந்து மைசூரு மாநகர காங்கிரஸ் கவுன்சிலர்களிடம் இருந்து பாக்கியவதி விலகியே இருந்து வந்தார். இந்த நிலையில் நேற்று காலை மைசூரு மாநகராட்சி கூட்ட அரங்கில் மேயர், துணை மேயர் தேர்தலுக்கான ஏற்பாடு தேர்தல் அதிகாரி சிவயோகி பி கலசத் தலைமையில் நடந்தது. அப்போது காங்கிரஸ் கவுன்சிலர்கள், மேயர் வேட்பாளரான கமலாவுடன் வந்தனர். இவர்களுடன் மந்திரி தன்வீர்சேட், எம்.எல்.ஏ.க்கள் சோமசேகர், வாசு, மேல்-சபை உறுப்பினர் தர்மசேனா ஆகியோரும் வந்தனர்.

அதேப் போல் பா.ஜனதா கவுன்சிலர்கள் பிரதாப் சிம்ஹா எம்.பி. தலைமையில் கூட்ட அரங்கிற்கு வந்தனர். ஜனதாதளம் (எஸ்) கவுன்சிலர்கள், எம்.எல்.ஏ. எச்.டி.தேவேகவுடா, மேல்-சபை உறுப்பினர்கள் சந்தேஷ் நாகராஜ், ஸ்ரீகண்டே கவுடா, மரிதிப்பேகவுடா ஆகியோர் தலைமையில் கூட்ட அரங்கின் பின்பக்க வாசல் வழியாக வந்தனர். இவர்களுடன் காங்கிரசில் இருந்து அணி மாறிய பாக்கியவதி வந்தார். அப்போது அவருக்கு எதிர்ப்பு தெரிவித்து காங்கிரஸ் கவுன்சிலர்கள் கோஷங்களை எழுப்பினர்.

இதற்கு ஆட்சேபனை தெரிவித்து பா.ஜனதா, ஜனதாதளம் (எஸ்) கூட்டணி கவுன்சிலர்கள் கோஷம் போட்டனர். இதனால் இருதரப்பினருக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. இதனால் கூட்டத்தில் கூச்சல்-குழப்பம் நிலவியது. நீண்ட நேரம் நீடித்த அமளிக்கு மத்தியில் தேர்தல் அதிகாரி சிவயோகி பி. கலசத், மேயர் பதவிக்கு வேட்பு மனு தாக்கல் செய்யலாம் என அறிவித்தார்.

காங்கிரஸ் சார்பில் கமலாவும், ஜனதாதளம்(எஸ்)-பா.ஜனதா கூட்டணி சார்பில் பாக்கியவதியும் வேட்பு மனு தாக்கல் செய்தனர். இதனால் மீண்டும் காங்கிரஸ் கட்சியினர் பாக்கியவதிக்கு எதிராக கோஷங்கள் எழுப்பினர். இதனை கண்டித்து ஜனதாதளம் (எஸ்), பா.ஜனதா கவுன்சிலர்களும், பிரதாப் சிம்ஹா எம்.பி., எம்.எல்.ஏ. ஜி.டி.தேவேகவுடா, மேல்-சபை உறுப்பினர்கள் சந்தேஷ் நாகராஜ், ஸ்ரீகண்டே கவுடா, மரிதிப்பே கவுடா ஆகியோரும் எதிர் கோஷமிட்டனர். அப்போது மந்திரி தன்வீர்சேட், ஜி.டி.தேவேகவுடா எம்.எல்.ஏ. ஆகியோர் இடையே கடும் வார்த்தை போர் நிகழ்ந்தது. அத்துடன் இருதரப்பினர் இடையே தள்ளுமுள்ளுவும் ஏற்பட்டது. உடனே பாதுகாப்புக்காக நின்றிருந்த போலீசார் கூட்ட அரங்கினுள் நுழைந்து இருதரப்பினரையும் சமாதானப்படுத்தினர். ஆனால் இருதரப்பினரும் மாறி,மாறி கோஷமிட்டனர்.

இவ்வாறு பலத்த கூச்சல்-குழப்பத்துக்கு இடையே வேட்பு மனுக்களை வாபஸ் பெற 5 நிமிடம் காலஅவகாசம் வழங்கி தேர்தல் அதிகாரி அறிவித்தார். ஆனால் கமலாவும், பாக்கியவதியும் மனுக்களை வாபஸ் வாங்கவில்லை. இதனால் ஆத்திரமடைந்த காங்கிரஸ் கவுன்சிலர்கள் உள்பட 25 உறுப்பினர்களும் வெளிநடப்பு செய்தனர். அதைதொடர்ந்து மேயர் தேர்தல் நடந்தது.

இதில் பாக்கியவதிக்கு ஆதரவாக பா.ஜனதா, ஜனதாதளம் (எஸ்) கவுன்சிலர்கள், எம்.பி., எம்.எல்.ஏ., மேல்-சபை உறுப்பினர்கள் என மொத்தம் 43 உறுப்பினர்கள் வாக்களித்தனர். இதனால் பாக்கியவதி புதிய மேயராக தேர்வானார். காங்கிரஸ் சார்பில் போட்டியிட்ட கமலாவுக்கு ஒரு ஓட்டும் கிடைக்காமல் தோல்வி அடைந்தார். ஏனெனில் அவர் உள்பட காங்கிரசார் வெளிநடப்பு செய்திருந்தனர்.

ஆனால் வெளிநடப்பு செய்த காங்கிரஸ் கவுன்சிலர்கள், பாக்கியவதி கட்சிக்கு துரோகம் செய்துவிட்டதாக கூறி கடுமையான வார்த்தைகளால் திட்டி தீர்த்தனர். இதனால் பாக்கியவதி கண்ணீர் விட்டு கதறி அழுதபடி இருந்தார். பின்னர் அவரை, ஒரு சில பெண் கவுன்சிலர்கள் சமாதானப்படுத்தினர்.

அதைதொடர்ந்து துணை மேயர் தேர்தல் நடந்தது. இதில் ஜனதாதளம் (எஸ்) கட்சி சார்பில் வேட்பாளராக நிறுத்தப்பட்ட இந்திரா 43 ஓட்டுகள் பெற்று வெற்றி பெற்றார். இந்த தேர்தலில் 65 கவுன்சிலர்கள், எம்.பி. எம்.ஏ.க்கள், மேல்-சபை உறுப்பினர்கள் என மொத்தம் 74 பேர் வாக்களிக்க தகுதி உடையவர்கள் என அறிவிக்கப்பட்டு இருந்தது. இந்த தேர்தலை புறக்கணித்து காங்கிரஸ் கட்சி வெளிநடப்பு செய்ததால் 43 பேர் ஆதரவுடன் மேயர் தேர்தல் நடந்தது குறிப்பிடத்தக்கது.

இதையொட்டி மைசூரு மாநகராட்சி வளாகத்தில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது. 

Next Story