உளவாளிகளின் புள்ளிப்பட கேமரா!


உளவாளிகளின் புள்ளிப்பட கேமரா!
x
தினத்தந்தி 26 Jan 2018 4:30 AM IST (Updated: 25 Jan 2018 3:47 PM IST)
t-max-icont-min-icon

துப்பறிவதைப் போலவே உளவு பார்க்கும் வேலையும் சவாலானது.

துப்பறியும் கதைகள் படிக்க சுவாரஸ்யமாக இருக்கும். ஆனால் துப்பறியும் வேலை சுலபமானதல்ல. கொலை, கொள்ளை போன்ற குற்றங்கள், தவறுகள் எப்படி நடந்தன? யாரால் நடத்தப்பட்டது என்ற பின்புலத்தை தேடி அறிவது துப்புத் துலக்குதல் எனப்படுகிறது.

அண்டை நாடு, பகை நாட்டின் ரகசியங்களையும், தாக்குதல் திட்டங்களையும் அறிந்து கொள்வதை ‘உளவு பார்த்தல்’ என்பார்கள். இப்படி அண்டை நாடுகளை உளவு பார்க்கும் பணிகளில் ஏறத்தாழ எல்லா நாடுகளுமே ஈடுபடுகின்றன.

உளவு வேலை பார்ப்பவர்கள் புத்திசாலிகளாகவும், தைரியசாலியாகவும் இருக்க வேண்டும். அப்படி இருந்தால்தான் அபாயம் நிறைந்த இந்தப் பணியை துணிச்சலுடன் செய்ய முடியும். கொஞ்சம் கவனக்குறைவாக இருந்தாலும் எதிரிகளிடம் சிக்கி உயிரிழக்கும் வாய்ப்பு அதிகம். போர்க்காலங்களிலும், போர் இல்லாத காலங்களிலும் உளவாளிகள் ரகசியமாக செயல்பட்டுக் கொண்டே இருப்பார்கள். உளவறியும் கலை மிகப் பழங்காலத்திலிருந்தே வழக்கத்தில் இருக்கிறது.

அமெரிக்க சுதந்திரப் போர் சமயத்தில் உளவாளிகள் நிறைய உலவினர். ராணுவ வீரர்கள் மட்டுமல்ல சாதாரணமானவர்களையும் உளவு பார்க்க அனுப்புவது உண்டு. அமெரிக்க உளவாளி நாதன் ஹேல், பள்ளியாசிரியராக இருந்தவர். சுதந்திரப் போர் நடந்தபோது அவர் தானாக முன்வந்து உளவுப் பணியை ஏற்றுக் கொண்டார். அதற்காக எதிரிகளின் முகாமிற்குள் நுழைந்தார். வெற்றிகரமாக செயல்பட்டு ரகசியங்களைக் கைப்பற்றி திரும்பும்போது இங்கிலாந்து படையிடம் மாட்டிக்கொண்டார். அவருக்கும் மரண தண்டனை விதித்தார்கள். அவர் தன் நாட்டிற்காக உயிர் துறப்பதை கவுரவமாகக் கருதினார். ‘என் நாட்டிற்காக பரிசளிக்க எனக்கு ஓருயிர் மட்டும் இருப்பதற்காக வருந்துகிறேன்’ என்று கூறி மரணதண்டனையை ஏற்றுக் கொண்டார். உளவுப் பணியில் பெண்களும் ஈடுபட்டுள்ளனர்.

இப்போதும் உலகம் முழுவதும் உளவு வேலை ரகசியமாக சுறுசுறுப்பாக நடந்து கொண்டுதான் இருக்கிறது. உளவு வேலைக்கு முன்பு புத்திசாலித்தனம் மட்டுமே மூலதனமாக இருந்தது. இப்போது அப்படியில்லை. அவர்கள் தங்கள் கைவசம் எதையும் வைத்துக் கொள்ள வேண்டியதில்லை. படம் பிடிக்க, உடனே தகவலை கடத்திவிட வாய்ப்புகள் பெருகிவிட்டன. ஸ்கேன் செய்து பார்க்கும்போது கண்டுபிடிக்க முடியாத எத்தனையோ தொழில்நுட்ப சாதனங்களை உளவாளிகள் பயன்படுத்துகிறார்கள். அவற்றில் ஒன்று மைக்ரோபிலிம். இதை சட்டை காலரில் மறைத்துக்கூட கடத்திச் சென்றுவிடலாம். அதேபோல ‘மைக்ரோ டாட்’ எனப்படும் நுட்பத்தில் புகைப்படம் எடுத்தால் அதை ஒரு புள்ளி அளவாக சுருக்கிக் கொள்ளலாம். தேவையானபோது பெரிதாக்கிப் பார்க்கலாம். இன்னும் ரகசியமான யுத்திகள் பலவற்றின் மூலமாக உளவுப் பணிகள் பரமரகசியமாக நடந்து கொண்டுதான் இருக்கிறது.

Next Story