பஸ்– மோட்டார் சைக்கிள் மோதல்: மாணவர் உள்பட 2 பேர் தலைசுங்கி சாவு கோவில்பட்டி அருகே கோர சம்பவம்


பஸ்– மோட்டார் சைக்கிள் மோதல்: மாணவர் உள்பட 2 பேர் தலைசுங்கி சாவு கோவில்பட்டி அருகே கோர சம்பவம்
x
தினத்தந்தி 26 Jan 2018 2:30 AM IST (Updated: 25 Jan 2018 9:11 PM IST)
t-max-icont-min-icon

கோவில்பட்டி அருகே பஸ்– மோட்டார் சைக்கிள் மோதிய கோர விபத்தில் 9–ம் வகுப்பு மாணவர் உள்பட 2 பேர் தலை நசுங்கி பலியாகினர்.

கோவில்பட்டி,

கோவில்பட்டி அருகே பஸ்– மோட்டார் சைக்கிள் மோதிய கோர விபத்தில் 9–ம் வகுப்பு மாணவர் உள்பட 2 பேர் தலை நசுங்கி பலியாகினர்.

பள்ளிக்கூட மாணவர்

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே உள்ளது கல்லூரணி. இங்குள்ள காலனி தெருவைச் சேர்ந்தவர் வேலுச்சாமி. இவர் மத்திய ரிசர்வ் போலீஸ் படையில் போலீஸ்காரராக உள்ளார்.

இவருடைய மனைவி வளர்மதி. இவர்களது மகன் விசுவா (வயது 15). இவன் கோவில்பட்டியில் உள்ள தனியார் பள்ளிக்கூடத்தில் 9–ம் வகுப்பு படித்து வந்தான்.

பஸ் மோதியது

நேற்று மாலையில் அதே பகுதியைச் சேர்ந்த விவசாயி செல்லத்துரை என்பவர், கதிர் அடிக்கும் எந்திரத்துக்கு டீசல் வாங்குவதற்காக கழுகுமலைக்கு மோட்டார் சைக்கிளில் புறப்பட்டார். அப்போது விசுவாவையும் தன்னுடன் மோட்டார் சைக்கிளில் அழைத்து சென்றார்.

கல்லூரணி ஊருக்கு வெளியே காட்டுப்பகுதியில் மோட்டார் சைக்கிள் சென்று கொண்டிருந்தது. எதிரே தென்காசியில் இருந்து கோவில்பட்டிக்கு தனியார் பஸ் ஒன்று வந்து கொண்டிருந்தது. கண் இமைக்கும் நேரத்தில் பஸ், மோட்டார் சைக்கிள் மீது பயங்கரமாக மோதியதாக தெரிகிறது.

2 பேர் பலி

மோட்டார் சைக்கிளில் இருந்த செல்லத்துரையும், விசுவாவும் தூக்கி சாலையில் வீசப்பட்டனர். அவர்கள் இருவர் மீதும் பஸ்சின் சக்கரங்கள் ஏறி இறங்கியது.

 ஆகியோர் மீது பஸ்சின் டயர் ஏறி இறங்கியது. இந்த விபத்தில் அவர்கள் 2 பேரும் சம்பவ இடத்திலேயே தலை நசுங்கி ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து பரிதாபமாக உயிரிழந்தனர். இதுகுறித்து நாலாட்டின்புத்தூர் போலீஸ் நிலையத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

உடனே கோவில்பட்டி துணை போலீஸ் சூப்பிரண்டு ஜெபராஜ், நாலாட்டின்புத்தூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜூடி மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர். விபத்தில் இறந்த செல்லத்துரை, விசுவா ஆகிய 2 பேரின் உடல்களையும் போலீசார் கைப்பற்றி, பரிசோதனைக்காக கோவில்பட்டி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

டிரைவர் கைது

இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து, பஸ் டிரைவரான நெல்லை மாவட்டம் சங்கரன்கோவில் தாலுகா ஆள்கொண்டார்குளத்தைச் சேர்ந்த வள்ளிகண்ணு மகன் முருகனை (25) கைது செய்தனர். விபத்தில் இறந்த செல்லத்துரைக்கு மாலதி என்ற மனைவியும், மாரிசெல்வம் (4) என்ற மகனும் உள்ளனர்.

விபத்தில் இறந்தவர்களின் உடல்களைப் பார்த்து உறவினர்கள் கதறி அழுதது கல் நெஞ்சையும் கரைய வைப்பதாக இருந்தது. இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.

Next Story