கோவைக்கு விமானத்தில் சிங்கப்பூரிலிருந்து கடத்தி வந்த ரூ.90½ லட்சம் மதிப்புள்ள தங்கம் பறிமுதல், சென்னை வாலிபர் கைது


கோவைக்கு விமானத்தில் சிங்கப்பூரிலிருந்து கடத்தி வந்த ரூ.90½ லட்சம் மதிப்புள்ள தங்கம் பறிமுதல், சென்னை வாலிபர் கைது
x
தினத்தந்தி 26 Jan 2018 3:45 AM IST (Updated: 26 Jan 2018 12:12 AM IST)
t-max-icont-min-icon

சிங்கப்பூரிலிருந்து கோவைக்கு விமானத்தில் கடத்தி வரப்பட்ட ரூ. 90½ லட்சம் மதிப்புள்ள தங்கத்தை நூதன முறையில் கொண்டு வந்த சென்னை வாலிபர் கைது செய்யப்பட்டார்.

கோவை,

சிங்கப்பூரிலிருந்து நேற்று முன்தினம் கோவைக்கு வந்த விமானத்தில் தங்கம் கடத்தி வரப்படுவதாக கோவையில் உள்ள மத்திய வருவாய் புலனாய்வு பிரிவுக்கு(டி.ஆர்.ஐ.) ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில் வருவாய் புலனாய்வு பிரிவு அதிகாரிகள் கோவை விமான நிலையத்திற்கு வெளியே சிங்கப்பூர் விமானத்திற்காக காத்திருந்தனர். அந்த விமானம் 24-ந் தேதி அதிகாலையில் தரையிறங்கியதும் அதிரடியாக உள்ளே புகுந்த வருவாய் புலனாய்வு பிரிவு அதிகாரிகள் பயணிகளிடம் சோதனை நடத்தினார்கள். அவர்கள் கொண்டு வந்த உடைமைகள் மற்றும் பொருட்களை அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.

அப்போது ஒரு பயணி கொண்டு வந்த குடிநீர் குளிர் சாதனபெட்டி வழக்கமான எடையை விட அதிகமாக இருந்தது. இதனால் சந்தேகம் அடைந்த அதிகாரிகள் அதை பிரித்து பார்த்து ஆய்வு செய்தனர். இதில் குடிதண்ணீர் குளிர்சாதன பெட்டியின் பின் பகுதியில் உள்ள கம்பிரசருக்குள் தங்க கட்டிகள் சிறிய துகள்களாக மாற்றி மறைத்து வைக்கப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. மேலும் தங்க துகள்களை ஒருவித எண்ணையில் கலந்து வைத்திருந்தனர். அவற்றை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

இதுதொடர்பாக சென்னை சேப்பாக்கத்தை சேர்ந்த இஜாஸ் கான் (வயது 24) என்பவரை வருவாய்புலனாய்வு பிரிவு அதிகாரிகள் பிடித்து விசாரித்தனர். விசாரணையில் அவர் துபாயில் உள்ள கடையில் வேலை பார்த்துள்ளார். அதன்பின்னர் அந்த வேலையை விட்டு விட்டார். பிறகு அவர் கோவைக்கு விமானத்தில் தங்கம் கடத்தி வந்துள்ளார். இது தொடர்பாக குடிதண்ணீர் குளிர்சாதன பெட்டியில் கடத்தி வரப்பட்ட 2 ஆயிரத்து 920 கிராம் எடையுள்ள தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது. இதன் மதிப்பு ரூ. 90 லட்சத்து 52 ஆயிரம் ஆகும். அந்த தங்கம் அனைத்தும் 24 கேரட் சுத்தமான தங்கம் ஆகும்.

இதுகுறித்து இஜாஸ் கானிடம் விசாரணை நடத்தியதில், கடத்தல் தங்கத்தை கோவை விமான நிலையத்துக்கு வெளியே காத்திருந்த ஒரு நபரிடம் கொடுப்பதற்காக கொண்டு வந்ததாக கூறினார். இதனைத் தொடர்ந்து இஜாஸ்கானை வருவாய் புலனாய்வு பிரிவு அதிகாரிகள் கைது செய்தனர். 

Next Story