ராமநாதபுரத்தை வறட்சி மாவட்டமாக அறிவிக்க வலியுறுத்தி விவசாய சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்


ராமநாதபுரத்தை வறட்சி மாவட்டமாக அறிவிக்க வலியுறுத்தி விவசாய சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 26 Jan 2018 3:45 AM IST (Updated: 26 Jan 2018 12:19 AM IST)
t-max-icont-min-icon

ராமநாதபுரம் மாவட்டத்தை வறட்சி மாவட்டமாக அறிவிக்க வலியுறுத்தி விவசாய சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

நயினார்கோவில்,

ராமநாதபுரம் மாவட்டத்தை வறட்சி மாவட்டமாக அறிவிக்கவேண்டும், ஏற்கனவே விடுபட்ட விவசாயிகளுக்கு இழப்பீட்டுதொகை வழங்கவேண்டும் என்பது போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி விவசாய சங்கம் சார்பில் பரமக்குடி தாலுகா நயினார்கோவில் பஸ் நிலையம் அருகில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்துக்கு வேடமுத்து தலைமை தாங்கினார். விவசாய சங்க தாலுகா செயலாளர் கார்த்திகைராஜா, மதுரைவீரன், ரத்தின சபாபதி ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் தி.மு.க. ஒன்றிய துணை செயலாளர் லட்சுமணன், அக்கிரமேசி முருகேசன் உள்பட ஏராளமான விவசாயிகள், அனைத்து கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

அதனை தொடர்ந்து விவசாய சங்க தாலுகா செயலாளர் கார்த்திகைராஜா கூறும்போது, விவசாயிகள் அதிக கடன் பெற்று விவசாயம் செய்ய பாடுபடுகின்றனர். கடந்த 2 வருடமாக மழை கைகொடுக்காததால் பயிர்கள் கருகி விட்டன. இதன் காரணமாக விவசாயிகள் கடும் நஷ்டத்தை சந்தித்து வருவதுடன் தற்கொலை செய்துகொள்ளும் நிலைக்கு தள்ளப்பட்டுஉள்ளனர். நாட்டின் முதுகெலுப்பாக செயல்படும் விவசாயத்தையும், விவசாயிகளையும் காப்பாற்றவேண்டும் என்பதை வலியுறுத்தவே இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

எனவே தொடர்ந்து விவசாயம் பாதிக்கப்பட்டு வரும் ராமநாதபுரம் மாவட்டத்தை வறட்சி மாவட்டமாக தமிழக அரசு அறிவித்து உரிய நிவாரணம் வழங்க வேண்டும். எங்களின் கோரிக்கை நிறைவேறவில்லை என்றால் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபடுவோம்.

இவ்வாறு அவர் கூறினார். 

Next Story