அதிகரிக்கும் நகை பறிப்பு சம்பவங்களால் பொதுமக்கள் பீதி


அதிகரிக்கும் நகை பறிப்பு சம்பவங்களால் பொதுமக்கள் பீதி
x
தினத்தந்தி 26 Jan 2018 3:30 AM IST (Updated: 26 Jan 2018 12:23 AM IST)
t-max-icont-min-icon

சிவகங்கை மாவட்டத்தில் அதிகரிக்கும் நகை பறிப்பு சம்பவங்களால் பொதுமக்கள் பீதியில் உள்ளனர். இதனை தடுக்க சம்பந்தப்பட்ட மாவட்ட காவல் துறை நடவடிக்கை எடுக்க வலியுறுத்தப்பட்டுள்ளது.

சிவகங்கை,

பல வரலாற்று சிறப்புகளை கொண்டது சிவகங்கை மாவட்டம். தமிழகத்தில் பின்தங்கிய மாவட்டம் என்றழைக்கப்படும் சிவகங்கையில் விவசாயமே பிரதான தொழிலாக உள்ளது. இதுபோக மாவட்டத்தில் செட்டிநாட்டு பகுதிகளான காரைக்குடி, பள்ளத்தூர், செட்டிநாடு உள்ளிட்ட பகுதிகள் சுற்றுலா தலமாக விளங்குகிறது.

இங்குள்ள வீடுகளின் கட்டிட கலையை பார்ப்பதற்காக வெளி மாநிலங்கள் மட்டுமின்றி வெளிநாட்டில் இருந்து ஏராளமானோர் வருகின்றனர். அடுத்தாற்போல் திருப்பத்தூர் அருகே உள்ள வேட்டங்குடி பறவைகள் சரணாலயம் மற்றும் திருக்கோஷ்டியூர் சவுமிய நாராயண பெருமாள் கோவில், தாயமங்கலம் மற்றும் காரைக்குடி முத்துமாரியம்மன் கோவில், மடப்புரம் பத்ரகாளியம்மன் கோவில் என பிரசித்தி பெற்ற கோவில்களும் மாவட்டத்தில் உள்ளன. இதனால் சிவகங்கை மாவட்டத்திற்கு தொழில் நிமித்தமாகவும், மற்ற தேவைகளுக்கும் ஆயிரக்கணக்கானோர் வந்து செல்கின்றனர்.

சமீப காலமாக மாவட்டத்தில் தனியாக செல்லும் பெண்களை குறிவைத்து நகை பறிக்கும் சம்பவங்களில் மர்ம ஆசாமிகள் ஈடுபட்டு வருகின்றனர். வேலைக்கு செல்லும் பெண்கள், கோவிலுக்கு தனியாக செல்லும் பெண்கள், வெளியூர்களில் இருந்து இங்கு வரும் பொதுமக்கள் ஆகியோரே மர்ம ஆசாமிகளின் இலக்கு. அவர்களிடம் முகவரி கேட்பது போன்றும், உதவுவது போன்றும் நகை பறிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். சில நேரங்களில் அவர்கள் பொதுமக்களை தாக்குவதுடன், கத்தி முனையில் நகை மற்றும் பணத்தை பறித்து வருகின்றனர். இதனால் மாவட்டத்தில் வேலைக்கு செல்லும் பெண்கள், குடும்ப தலைவிகள் என பலரும் பீதியில் உள்ளனர். இதுகுறித்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டுக்கு அவர்கள் புகார் அளித்துள்ளனர்.

இந்தநிலையில் தற்போது கார்களில் வலம் வந்து மர்ம ஆசாமிகள் நகை பறிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். முன்பு சாலைகளில் நடந்து செல்லும் பெண்கள் மற்றும் வயல்களில் வேலை செய்பவர்கள், வீடுகளில் தனியாக இருப்பவர்களிடம் மோட்டார் சைக்கிளில் வந்து நகைகளை திருடினர். கடந்த சில தினங்களுக்கு முன்பு கல்லலை அடுத்த திருத்திப்பட்டியை சேர்ந்த அருள்பாஸ்கர் மனைவி அரசி(வயது 35) என்பவர் பனங்குடி ரெயில் நிலையத்தில் இருந்து திருத்திபட்டிக்கு நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது காரில் வந்த 3 மர்மநபர்கள் அரசியை வழிமறித்து 9 பவுன் நகைகளை பறித்துச்சென்றனர். இதுகுறித்து கல்லல் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர்.

இதேபோல் கடந்த 3 தினங்களுக்கு முன்பு காரைக்குடியில் தனியாக சென்ற பெண்ணை தாக்கி 6 பவுன் நகைகளையும், இளையான்குடியில் ஒரு பெண்ணிடம் 8 பவுன் நகையையும் பறித்து சென்றுள்ளனர்.

குறிப்பாக மாவட்டத்தில் காரைக்குடி, சிவகங்கை, திருப்பத்தூர் ஆகிய பகுதிகளில் நகை பறிப்பு சம்பவங்கள் அதிகரித்துள்ளன. இதிலும் காரைக்குடியில் நாளைக்கு ஒரு நகை பறிப்பு சம்பவம் வீதம் நடைபெற்று வருகின்றது. எனவே இதுதொடர்பாக மாவட்ட காவல் துறை உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். 

Next Story