ஊராட்சி நிர்வாகத்தை கண்டித்து கிராம மக்கள் முற்றுகை போராட்டம்


ஊராட்சி நிர்வாகத்தை கண்டித்து கிராம மக்கள் முற்றுகை போராட்டம்
x
தினத்தந்தி 26 Jan 2018 3:30 AM IST (Updated: 26 Jan 2018 12:33 AM IST)
t-max-icont-min-icon

அடிப்படை வசதிகள் செய்து தராததால், ஊராட்சி நிர்வாகத்தை கண்டித்து கிராம மக்கள் முற்றுகை போராட்டம் நடத்தினர்.

திருப்பரங்குன்றம்,

திருப்பரங்குன்றம் ஊராட்சி ஒன்றியத்துக்கு உள்பட்ட பெருங்குடி ஊராட்சியை சேர்ந்தது பரம்புபட்டி கிராமம். இங்கு குடிதண்ணீர், தெருவிளக்கு உள்ளிட்ட அடிப்படை வசதிகள் ஏதுவும் செய்யப்படவில்லை. மேலும் தங்களின் வாழ்வாதாரமான தேசிய ஊரக வேலை வாய்ப்பு திட்டத்தில் பணிகள் வழங்கப்படுவதில்லை.

இதுபோன்று இந்த கிராமமக்களுக்கு கிடைக்க வேண்டிய பல்வேறு அரசு நலத்திட்டங்கள் வழங்கப்படுவதில்லை, மொத்தத்தில் பரம்புபட்டியை பாராமுகமாக ஊராட்சி நிர்வாகம் வைத்துள்ளது என்று அந்த கிராமமக்கள் புகார் கூறினர். மேலும் இதுதொடர்பாக பல முறை ஊராட்சி நிர்வாகத்திடம் முறையிட்டும், அதற்கு எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லையாம்.

இந்தநிலையில் அந்த கிராமமக்கள் நேற்று காலை பரம்புபட்டியில் இருந்து ஒன்றாக திரண்டு திருப்பரங்குன்றம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்திற்கு வந்தனர். அவர்கள் தங்களுக்கு அடிப்படை வசதிகளை செய்து கொடுக்க வேண்டும் என்று கோஷமிட்டனர். பின்னர் அவர்கள் வட்டார வளர்ச்சி அலுவலர் (ஊராட்சி) அலுவலகம் முன்பு முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.

தகவலறிந்து வந்த அதிகாரிகள் போராட்டம் நடத்தியவர்களிடம் சமரச பேச்சுவார்த்தை நடத்தினர். அதில் விரைவில் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறியதை தொடர்ந்து கிராம மக்கள் கலைந்து சென்றனர். 

Next Story