கோபி அருகே பட்டாசு தொழிற்சாலையில் திடீர் தீ விபத்து, உரிமையாளர் உள்பட 10 பேர் உடல் கருகினர்


கோபி அருகே பட்டாசு தொழிற்சாலையில் திடீர் தீ விபத்து, உரிமையாளர் உள்பட 10 பேர் உடல் கருகினர்
x
தினத்தந்தி 26 Jan 2018 4:00 AM IST (Updated: 26 Jan 2018 1:02 AM IST)
t-max-icont-min-icon

கோபி அருகே பட்டாசு தொழிற்சாலையில் திடீர் தீ விபத்து ஏற்பட்டது. இதில் உரிமையாளர் உள்பட 10 பேர் உடல் கருகினர்.

கடத்தூர்,

கோபி அருகே எலத்தூரை சேர்ந்தவர் பிரான்சிஸ் (வயது 30). இவர் செம்மாண்டம்பதியில் பட்டாசு தொழிற்சாலை வைத்து நடத்தி வருகிறார். இங்கு உள்ளூர் திருவிழாவுக்கு தேவையான பட்டாசு, வாணவேடிக்கை தயார் செய்யப்பட்டு வருகிறது. பட்டாசு தொழிற்சாலையில் எலத்தூர், பெரியகள்ளிப்பட்டியை சேர்ந்த தொழிலாளர்கள் வேலை பார்த்து வருகிறார்கள்.

நேற்று காலை வழக்கம்போல் பட்டாசு தொழிற்சாலையை திறந்து தொழிலாளர்கள் வேலை பார்த்து கொண்டிருந்தார்கள். அப்போது திடீரென தீ விபத்து ஏற்பட்டது. பின்னர் அங்கிருந்த வெடி பொருட்கள் மீது தீ பட்டு படபடவென்று வெடித்து சிதறியது. இதனால் தீப்பொறிகள் பறந்து விழுந்ததால் மளமளவென தீ கொழுந்துவிட்டு எரிந்தது.

இந்த தீ விபத்தில் பட்டாசு தொழிற்சாலை உரிமையாளர் பிரான்சிஸ், அவருடைய மனைவி பிரேமா, தொழிலாளர்கள் செல்லப்பன் (60), முருகன் (40), ஆராயி (60), குருசாமி (55), குமாரசாமி (24), அமுதா (32), சிவபிரகாஷ் (48), கதிர்வேல் (48) ஆகியோர் உடல் கருகினர்.

இதுகுறித்து உடனே தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் கொடுக்கப்பட்டது. அதைத்தொடர்ந்து கோபி தீயணைப்பு நிலைய அதிகாரி ஜெகதீசன் தலைமையில் சத்தியமங்கலம், புஞ்சைபுளியம்பட்டி, நம்பியூர், காசிபாளையம் ஆகிய தீயணைப்பு நிலையங்களில் இருந்து தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து தண்ணீரை பீய்ச்சி அடித்து தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டார்கள். சுமார் 1 மணி நேரத்துக்கு பிறகு தீ முழுமையாக அணைக்கப்பட்டது. ஆனால் பட்டாசு தொழிற்சாலை எரிந்து நாசம் ஆனது. தீ விபத்துக்கான காரணம் உடனடியாக தெரியவில்லை.

இதுகுறித்து கோபி போலீஸ் இன்ஸ்பெக்டர் பாலமுரளிசுந்தரம் விசாரணை நடத்தி வருகிறார்.

தகவல் அறிந்ததும் நம்பியூர் தாசில்தார் ராணி, நிலவருவாய் ஆய்வாளர் சத்தியபாமா ஆகியோர் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று பார்வையிட்டார்கள். இதில் பலத்த தீக்காயம் அடைந்த 10 பேரையும் மீட்டு சிகிச்சைக்காக கோபி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். இதில் ஆராயி, குருசாமி, குமாரசாமி, அமுதா, சிவபிரகாஷ், கதிர்வேல் ஆகிய 6 பேர் மேல்சிகிச்சைக்காக கோவை மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்கள். அங்கு அவர்களுக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகிறார்கள். மற்ற 4 பேரும் கோபி அரசு ஆஸ்பத்திரியில் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகிறார்கள். 

Next Story