விழுப்புரம், கள்ளக்குறிச்சியில் அனைத்து தொழிற்சங்கத்தினர் மறியல்


விழுப்புரம், கள்ளக்குறிச்சியில் அனைத்து தொழிற்சங்கத்தினர் மறியல்
x
தினத்தந்தி 26 Jan 2018 3:15 AM IST (Updated: 26 Jan 2018 1:19 AM IST)
t-max-icont-min-icon

பஸ் கட்டண உயர்வை கண்டித்து விழுப்புரம், கள்ளக்குறிச்சியில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட அனைத்து தொழிற்சங்கத்தினர் 149 பேர் கைது செய்யப்பட்டனர்.

விழுப்புரம்,

விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த வேண்டும், பஸ் கட்டண உயர்வை திரும்ப பெற வேண்டும், சில்லரை வணிகத்தில் அன்னிய மூலதனத்தை அனுமதிக்கக்கூடாது, குறைந்தபட்சம் மாத ஊதியம் ரூ.18 ஆயிரம் வழங்க வேண்டும், விவசாய விளைபொருட்களுக்கு கட்டுப்படியான விலையை வழங்க வேண்டும் என்பன உள்பட 12 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி நேற்று தமிழகம் முழுவதும் தொ.மு.ச., சி.ஐ.டி.யு., ஏ.ஐ.டி.யு.சி., எச்.எம்.எஸ்., ஐ.என்.டி.யு.சி. உள்ளிட்ட மத்திய தொழிற்சங்கங்கள் சார்பில் மறியல் போராட்டம் நடைபெற்றது.

விழுப்புரத்தில் மாவட்ட கலெக்டர் அலுவலக பெருந்திட்ட வளாகம் எதிரே அனைத்து தொழிற்சங்கத்தினர் கோரிக்கைகளை வலியுறுத்தி மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்த போராட்டத்திற்கு தொ.மு.ச. மாவட்ட கவுன்சில் தலைவர் ஞானப்பிரகாசம் தலைமை தாங்கினார். மாநில துணைத்தலைவர் சண்முகம், சி.ஐ.டி.யு. பொதுச்செயலாளர் முத்துக்குமார், ஏ.ஐ.டி. யு.சி. பொதுச்செயலாளர் சவுரிராஜன், நிர்வாகி அனவரதன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் தொ.மு.ச. பொதுச்செயலாளர் சேகர், நிர்வாக பணியாளர் சங்க பொதுச்செயலாளர் மணி உள்பட பலர் கலந்துகொண்டனர். உடனே விழுப்புரம் துணை போலீஸ் சூப்பிரண்டு சங்கர் தலைமையிலான போலீசார் விரைந்து சென்று மறியலில் ஈடுபட்ட 2 பெண்கள் உள்பட 115 பேரை கைது செய்து போலீஸ் வேனில் ஏற்றிச்சென்று அருகில் உள்ள திருமண மண்டபத்தில் தங்க வைத்தனர்.

இதேபோல் கள்ளக்குறிச்சியில் சி.ஐ.டி.யு. மாநிலக்குழு உறுப்பினர் உதயகுமார் தலைமையில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட ஒரு பெண் உள்பட 34 பேரை போலீசார் கைது செய்தனர். கைதான இவர்கள் அனைவரும் மாலையில் விடுவிக்கப்பட்டனர். 

Next Story