கோவிலுக்குள் மாற்றுத்திறனாளி தம்பியுடன் அக்காள்- தங்கை தற்கொலை: 3 பேரின் உயிரை குடித்த கந்துவட்டி கொடுமை


கோவிலுக்குள் மாற்றுத்திறனாளி தம்பியுடன் அக்காள்- தங்கை தற்கொலை: 3 பேரின் உயிரை குடித்த கந்துவட்டி கொடுமை
x
தினத்தந்தி 26 Jan 2018 3:30 AM IST (Updated: 26 Jan 2018 1:33 AM IST)
t-max-icont-min-icon

பழனி கோவிலுக்குள், கந்து வட்டி கொடுமையால் மாற்றுத்திறனாளி தம்பியுடன் அக்காள்-தங்கை தற்கொலை செய்தது தெரியவந்துள்ளது. இது தொடர்பாக போலீசார் ஒருவரை கைது செய்துள்ளனர். உருக்கமான கடிதம் சிக்கியது.

பழனி,

திண்டுக்கல் மாவட்டம் பழனி அடிவாரம் அருள்ஜோதி வீதியை சேர்ந்த கந்தசாமி மகன்கள் பாலு (வயது 54), வேலுச்சாமி (32). மகள்கள் சீதாலட்சுமி (56), தனலட்சுமி (52), ஜெயலட்சுமி (48), சந்திரா (36). இவர்களில் சீதாலட்சுமியும், தனலட்சுமியும் திருமணமாகி தனியாக வசிக்கின்றனர்.

கணவரை பிரிந்த ஜெயலட்சுமி, தந்தை வீட்டில் வசித்து வந்தார். பாலு மலைக்கோவிலில் ஸ்டோர் கீப்பராக உள்ளார். வேலுச்சாமி மாற்றுத்திறனாளி ஆவார். இவர், பழனி-பாலசமுத்திரம் ரோட்டில் பெட்டிக்கடை நடத்தி வந்தார்.

இந்த நிலையில் வேலுச்சாமி, ஜெயலட்சுமி, சந்திரா ஆகியோர் நேற்று முன்தினம் பழனி பெரியாவுடையார் கோவில் பிரகாரத்தில் விஷம் குடித்து தற்கொலை செய்துகொண்டனர்.

தற்கொலை செய்து கொள்வதற்கு முன்னதாக வேலுச்சாமி உருக்கமான கடிதத்தை எழுதி, தனது சட்டைப்பையில் வைத்துள்ளார். அதனை போலீசார் கைப்பற்றினர். அந்த கடிதத்தில் வேலுச்சாமி கூறியிருப்பதாவது:-

நாங்கள் புதிதாக வீடு கட்டுவதற்காக பழனி அருகே உள்ள கோதைமங்கலத்தை சேர்ந்த ராஜேந்திரன் (55), பழனியை சேர்ந்த அய்யப்பன் (40), முருகேசன் (50) ஆகியோரிடம் இருந்து வட்டிக்கு பணம் வாங்கினோம். ஆனால் எங்களால் குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் அந்த தொகையை திரும்ப செலுத்த முடியவில்லை.

மேலும் வீட்டின் கட்டுமான பணியும் பாதியில் நின்று போனது. இந்த நிலையில் வட்டிக்கு பணம் கொடுத்த 3 பேரும் எங்களையும், எங்கள் அண்ணன் பாலுவையும் தொடர்ந்து கந்துவட்டி கேட்டு தொந்தரவு செய்து வந்தனர். எங்கள் வீட்டு பெண்களையும் தரக்குறைவாக பேசினர். இதனால் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளானோம்.

சில நாட்கள், நாங்கள் தலைமறைவு வாழ்க்கை வாழ வேண்டிய அவல நிலைக்கு தள்ளப்பட்டோம். ஆனாலும் எங்களை எப்படியோ கண்டுபிடித்து ராஜேந்திரன் உள்பட 3 பேரும் தொல்லை கொடுத்து வந்தனர். எங்களின் பிரச்சினைகள் குறித்து ஒவ்வொரு கோவிலாக சென்று முறையிட்டோம். ஆனால் எங்களின் வேண்டுதலுக்கு கடவுளும் செவிசாய்க்கவில்லை.

எனவே பழனி பெரியாவுடையார் கோவில் வளாகத்திலேயே எங்கள் வாழ்க்கையை முடித்துக்கொள்ள தீர்மானித்தோம். இதற்காக விஷத்தையும் வாங்கி வைத்துள்ளோம். எங்கள் மரணத்துக்கு பின்னர் எனது அண்ணன் பாலுவை கந்துவட்டிக்காரர்கள் கொடுமை படுத்தலாம். எனவே எனது அண்ணனை போலீசார் தான் காப்பாற்ற வேண்டும். மேலும் ராஜேந்திரன் உள்பட 3 பேர் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டிருந்தது.

அதன்பேரில் புகார் கூறப்பட்ட ராஜேந்திரன் உள்பட 3 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். இதில் முருகேசன் கைது செய்யப்பட்டார். உடல்நலம் பாதிக்கப்பட்டிருப்பதாக கூறி, பழனியில் உள்ள தனியார் மருத்துவமனையில் ராஜேந்திரன் அனுமதிக்கப்பட்டுள்ளார். தலைமறைவான அய்யப்பனை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர். 

Next Story