கர்நாடகாவில் முழு அடைப்பு: தமிழக அரசு பஸ்கள் ஓசூரில் நிறுத்தம்


கர்நாடகாவில் முழு அடைப்பு: தமிழக அரசு பஸ்கள் ஓசூரில் நிறுத்தம்
x
தினத்தந்தி 26 Jan 2018 4:30 AM IST (Updated: 26 Jan 2018 2:50 AM IST)
t-max-icont-min-icon

கர்நாடகாவில் நடந்த முழு அடைப்பு போராட்டம் காரணமாக நேற்று தமிழக அரசு பஸ்கள் ஓசூரில் நிறுத்தப்பட்டன. மேலும் மாநில எல்லையில் கன்னட அமைப்பினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

ஓசூர்,

கர்நாடக மாநில மக்களின் குடிநீர் பிரச்சினைக்கு தீர்வு காணும் வகையில் மகதாயி நதிநீர் இணைப்பு திட்டத்தை செயல்படுத்த வலியுறுத்தி கர்நாடகாவில் நேற்று முழு அடைப்பு போராட்டம் நடந்தது. இதனால் அங்கு போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதன் காரணமாக கர்நாடகாவுக்கு நேற்று பாதுகாப்பு கருதி தமிழக அரசு பஸ்கள் இயக்கப்படவில்லை. தமிழக அரசு பஸ்கள் அனைத்தும் ஓசூரில் நிறுத்தப்பட்டன.

இதே போல கர்நாடக மாநில அரசு பஸ்களும் இயக்கப்படவில்லை. இதனால் ஓசூரில் இருந்து கர்நாடகாவுக்கு பல்வேறு பணிகள் காரணமாக செல்ல கூடிய தொழிலாளர்களும், பள்ளி, கல்லூரிகளுக்கு செல்லும் மாணவ, மாணவிகளும் பாதிக்கப்பட்டனர். மேலும் ஓசூர் பஸ் நிலையத்தில் கர்நாடக மாநில அரசு பஸ்கள் நிற்கும் இடம் வெறிச்சோடி காணப்பட்டது.

ஓசூரில் இருந்து கர்நாடக மாநிலத்துக்கு செல்லக்கூடிய லாரிகளும், ஓசூரில் ரிங் ரோடு, ஜூஜூவாடி மற்றும் மாநில எல்லை பகுதிகளில் நிறுத்தப்பட்டன. மகதாயி நதிநீர் திட்டத்தை நிறைவேற்ற வலியுறுத்தி ஓசூர் அருகே கர்நாடக மாநில எல்லையான அத்திப்பள்ளியில் கன்னட ஜாக்குருதி வேதிகே அமைப்பு சார்பில் சாலை மறியல் போராட்டம் நடந்தது. இதற்கு அந்த அமைப்பின் மாநில தலைவர் மஞ்சுநாத் தேவா தலைமை தாங்கினார். இதில் 100-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். கர்நாடகாவில் முழு அடைப்பு போராட்டம் நடைபெற்றதை முன்னிட்டு ஓசூர் அருகே ஜூஜூவாடியில் ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணிகளில் ஈடுபட்டனர்.


Next Story