கோவையில் பஸ் கட்டண உயர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து சாலை மறியல்- ஆர்ப்பாட்டம்


கோவையில் பஸ் கட்டண உயர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து சாலை மறியல்- ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 26 Jan 2018 3:30 AM IST (Updated: 26 Jan 2018 2:51 AM IST)
t-max-icont-min-icon

கோவையில், பஸ் கட்டணத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து சாலை மற்றும் ஆர்ப்பாட்டம் நடந்தது.

கோவை,

தமிழக அரசு பஸ் கட்டணத்தை பல மடங்கு உயர்த்தியதற்கு தமிழகம் எங்கும் கடும் எதிர்ப்பு கிளம்பி வருகிறது. கோவை மாவட்டத்தில் இந்திய மாணவர் சங்கம் மற்றும் கல்லூரி மாண வர்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த நிலையில் இந்திய மாணவர் சங்கத்தினர் கோவை காந்திபுரம் பகுதியில் நேற்று சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதைத் தொடர்ந்து அங்கு வந்த போலீசார் மாணவர்களின் போராட்டத்திற்கு அனுமதி மறுத்து கைது செய்ய முயன்றனர்.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்து மாணவர்கள் காந்திபுரம் பஸ் நிலையம் அருகில் உள்ள பிரதான சாலையில் அமர்ந்து தமிழக அரசுக்கு எதிரான முழக்கங்களை எழுப்பினர். இதைத் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர் சங்க மாவட்ட தலைவர் தினேஷ், செயலாளர் பிரபு உள்ளிட்ட 50 மாணவர்களை போலீசார் குண்டுக்கட்டாக தூக்கி போலீசார் வேனில் ஏற்றினார்கள். அதன் பின்னர் மறியலில் ஈடுபட்டவர்களை போலீசார் கைது செய்தனர்.

பஸ் கட்டண உயர்வை கண்டித்தும், உயர்த்தப்பட்ட கட்டண உயர்வை வாபஸ் பெற கோரியும் கோவை மாவட்ட பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் தெற்கு தாசில்தார் அலுவலகம் முன்பு நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது.

இதற்கு மாநில துணை பொதுச் செயலாளர் ஆ.தங்கவேல் பாண்டியன் தலைமை தாங்கி பேசினார். ஆர்ப்பாட்டத்தில் நிர்வாகிகள் குமார், கோவை ரவிச்சந்திரன், ராமு, வெங்கடேசன், வேங்கை ராமசாமி, பார்த்தசாரதி, பாபு பழனிசாமி, ரவி, முகமது அலி, கணேசன், ராஜேஷ், முனுசாமி உள்பட பலர் கலந்து கொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர்.

இதே கோரிக்கையை வலியுறுத்தி விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் கோவை தெற்கு தாசில்தார் அலுவலகம் முன்பு நேற்று மாலை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்துக்கு மாநகர செயலாளர் இலக்கியன் தலைமை தாங்கினார். இதில் ஏராளமானோர் கலந்து கொண்டு பஸ் கட்டண உயர்வை திரும்ப பெறக்கோரி கோஷங்கள் எழுப்பினர்.

இதேபோல் புரட்சிகர இளைஞர் முன்னணி மற்றும் மாணவர் முன்னணி ஆகிய அமைப்புகள் சார்பில் காந்திபுரம் திருவள்ளுவர் பஸ் நிலையம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதற்கு ஜெகன், மலரவன் ஆகியோர் தலைமை தாங்கினர். இதில் ஏராளமான இளைஞர்கள் கலந்து கொண்டு வியாபாரிகள், தொழிலாளர்கள் உள்ளிட்டோரை பாதிக்கும் வகையில் தமிழக அரசு பஸ் கட்டணத்தை உயர்த்தி உள்ளது. இதனை உடனடியாக ரத்து செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரி கோஷங்கள் எழுப்பினர். 

Next Story