அதிகாரி போல் நடித்து கடைகளில் கைவரிசை காட்டிய பெண்
அதிகாரிபோல் நடித்து கடைகளில் கைவரிசை காட்டிய பெண்ணை பொதுமக்கள் மடக்கி பிடித்தனர்.
வானூர்,
விழுப்புரம் மாவட்டம் வானூர் தாலுகா வி.பரங்கனி கிராமத்தில் மளிகை கடை நடத்தி வருபவர் முருகன். நேற்று மாலை 6 மணி அளவில் இவரது கடைக்கு ஒரு பெண் வந்தார். தன்னை உணவு பாது காப்பு அதிகாரி என அறிமுகம் செய்துகொண்ட அவர், காலாவதியான பொருட்களை விற்பதாக உங்கள் மீது தொடர்ந்து புகார்கள் வந்துள்ளன எனகூறி கடையில் இருந்த பொருட்களை ஆய்வு செய்ய தொடங்கினார்.
இதனால் அதிர்ச்சி அடைந்த வியாபாரி முருகன் அவரிடம் வாக்குவாதம் செய்தார். உங்கள் அடையாள அட்டையை காட்டுங்கள் எனகூறினார்.மேலும் உடனடியாக தனது கடையில் இருந்து போன் மூலம் வானூர் உணவு பாதுகாப்பு அதிகாரி சந்திர சேகருக்கு தகவல் கொடுத்தார்.இதற்குள் அங்கு கூட்டம் கூடி விட்டது. வானூர் அதிகாரிகளும் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர்.
நிலைமை மோசமாவதை அறிந்த அந்த பெண் உடனடியாக அங்கிருந்து நழுவமுயன்றார். ஆனால் பொது மக்கள் அந்த பெண்ணை மடக்கி பிடித்தனர்.வானூர் போலீசாரும் சம்பவ இடத்துக்கு வந்து சேர்ந்தனர்.
போலீசார் அந்த பெண்ணிடம் விசாரணை நடத்திய போது அவரது பெயர் மீனா(வயது27) கொஞ்சமங்கலத்தை சேர்ந்த சின்னையன் என்பவரது மகள் என தெரியவந்தது. மேலும் இவர் திண்டிவனம்,புதுவை, மற்றும் பல்வேறு இடங்களில் இதே போல் தன்னை அதிகாரி எனகூறி கைவரிசை காட்டிவிட்டு தப்பியதும் தெரியவந்தது.தொடர்ந்து அந்த பெண்ணிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.