புதுவையில் இன்று குடியரசு தினவிழா: கவர்னர் கிரண்பெடி தேசியக்கொடி ஏற்றுகிறார்


புதுவையில் இன்று குடியரசு தினவிழா: கவர்னர் கிரண்பெடி தேசியக்கொடி ஏற்றுகிறார்
x
தினத்தந்தி 26 Jan 2018 5:00 AM IST (Updated: 26 Jan 2018 4:53 AM IST)
t-max-icont-min-icon

புதுவை உப்பளம் மைதானத்தில் இன்று குடியரசுதின விழா கொண்டாடப்படுகிறது. இதையொட்டி கவர்னர் கிரண்பெடி தேசியக்கொடி ஏற்றுகிறார்.

புதுச்சேரி,

புதுவை உப்பளம் இந்திராகாந்தி மைதானத்தில் இன்று (வெள்ளிக்கிழமை) குடியரசு தினவிழா கொண்டாடப்படுகிறது. இதில் கலந்து கொள்வதற்காக காலை 8.29 மணிக்கு கவர்னர் கிரண்பெடி அங்கு வருகிறார். அவரை தலைமை செயலாளர் அஸ்வனிகுமார், போலீஸ் டி.ஜி.பி. சுனில்குமார் கவுதம் ஆகியோர் வரவேற்கின்றனர்.

இதன்பின் விழா மேடைக்கு வரும் கவர்னர் கிரண்பெடி தேசியக்கொடியேற்றி வைத்து மரியாதை செலுத்துகிறார். தொடர்ந்து திறந்த ஜீப்பில் சென்று போலீசாரின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக் கொள்கிறார்.

அதன்பின் விழா மேடைக்கு திரும்பும் கவர்னர் கிரண்பெடி பல்வேறு துறைகளில் சாதனைபடைத்தவர்களுக்கு விருதுகள், பதக்கங்கள், பரிசுகளை வழங்குகிறார். பின்னர் காவல் மற்றும் காவல்படை அல்லாதோர், மாணவ, மாணவிகளின் அணிவகுப்பு நடக்கிறது.

தொடர்ந்து பல்வேறு அரசுத்துறைகளின் அலங்கார வண்டிகளின் அணிவகுப்பு நடக்கிறது. பின்னர் மாணவ, மாணவிகளின் கலைநிகழ்ச்சிகள் இடம்பெறுகின்றன. கலைநிகழ்ச்சிகள் முடிந்ததும் சிறப்பாக அணிவகுப்பு நடத்தியவர்களுக்கு பரிசுகளை வழங்குகிறார். அதன்பின் அங்கிருந்து கவர்னர் மாளிகைக்கு கிரண்பெடி புறப்பட்டு செல்கிறார்.

புதுவை சட்டசபை வளாகத்தில் நடக்கும் குடியரசு தினவிழாவில் முதல்-அமைச்சர் நாராயணசாமி தேசியக்கொடியேற்றி வைக்கிறார். நிகழ்ச்சியில் அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள் முக்கிய பிரமுகர்கள் கலந்துகொள்கிறார்கள்.

குடியரசு தினத்தையொட்டி புதுவையில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. போலீசார் தீவிர வாகன சோதனையிலும் ஈடுபட்டுள்ளனர். கவர்னர் மாளிகை, சட்டசபை மற்றும் அரசு கட்டிடங்கள், தலைவர்களின் சிலைகளுக்கு மின்விளக்கு அலங்காரம் செய்யப்பட்டுள்ளது.

Next Story