முழு அடைப்பு போராட்டத்துக்கும், அரசுக்கும் எந்த தொடர்பும் கிடையாது


முழு அடைப்பு போராட்டத்துக்கும், அரசுக்கும் எந்த தொடர்பும் கிடையாது
x
தினத்தந்தி 26 Jan 2018 5:46 AM IST (Updated: 26 Jan 2018 6:13 AM IST)
t-max-icont-min-icon

முழு அடைப்பு போராட்டத்துக்கும், அரசுக்கும் எந்த தொடர்பும் கிடையாது என்று மந்திரி ராமலிங்கரெட்டி கூறினார்.

பெங்களூரு,

தேசிய வாக்காளர் தினத்தையொட்டி உறுதிமொழி ஏற்கும் நிகழ்ச்சி பெங்களூரு விதான சவுதாவில் நேற்று நடைபெற்றது. இதில் போலீஸ் மந்திரி ராமலிங்கரெட்டி கலந்து கொண்டு, உறுதிமொழியை வாசித்தார். அதை அதிகாரிகள் வாசித்து உறுதிமொழி ஏற்றனர். இந்த நிகழ்ச்சிக்கு பிறகு ராமலிங்கரெட்டி நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

மகதாயி பிரச்சினைக்காக கன்னட சங்கங்கள் முழு அடைப்பு நடத்துகின்றன. அவர்கள் எங்களிடம் இதுபற்றி அனுமதி எதுவும் கேட்கவில்லை. போக்குவரத்து ஊழியர் சங்கங்கள் போராட்டத்திற்கு ஆதரவு வழங்கின. அதனால் ஊழியர்கள் பணிக்கு வராததால் பஸ்கள் இயக்கப்படவில்லை. முழுஅடைப்பு போராட்டத்துக்கும், அரசுக்கும் எந்த தொடர்பும் கிடையாது. ஆனால் பா.ஜனதாவினர் பொய் குற்றச்சாட்டுகளை பரப்புகிறார்கள்.

பா.ஜனதா தேசிய தலைவர் அமித்ஷா, பிரதமர் மோடி பல முறை கர்நாடகத்திற்கு வந்து சென்றனர். அப்போது எல்லாம் முழு அடைப்பு நடத்தப்பட்டதா?. மகதாயி பிரச்சினையை விட பா.ஜனதா தேசிய தலைவரின் கூட்டம் முக்கியம் என்றால், இதுகுறித்து கன்னட சங்கங்களுடன் பேசி முழு அடைப்பை வாபஸ் பெற செய்திருக்க வேண்டும்.

கோவா முதல்-மந்திரி மற்றும் எடியூரப்பாவை அழைத்து அமித்ஷா தனது வீட்டில் ஆலோசனை நடத்தினார். கோவா முதல்-மந்திரி கடிதம் எழுதி இருப்பதாக எடியூரப்பா நாடகமாடுகிறார். பா.ஜனதாவினர் கர்நாடகம் பக்கம் இருக்கிறார்களா?, கோவாவுக்கு ஆதரவாக உள்ளார்களா? என்பதை தெளிவுபடுத்த வேண்டும்.

அசம்பாவித சம்பவங்களை நடைபெறாமல் தடுக்க மாநிலம் முழுவதும் 65 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர். முன்எச்சரிக்கையாக சமூக விரோத செயல்களில் ஈடுபடுபவர்களை போலீசார் கைது செய்தனர்.

இவ்வாறு ராமலிங்கரெட்டி கூறினார். 

Next Story