பட்டிவீரன்பட்டி அருகே ஓடும் காரில் தீப்பிடித்தது, 4 பேர் உயிர் தப்பினர்


பட்டிவீரன்பட்டி அருகே ஓடும் காரில் தீப்பிடித்தது, 4 பேர் உயிர் தப்பினர்
x
தினத்தந்தி 27 Jan 2018 3:30 AM IST (Updated: 27 Jan 2018 12:13 AM IST)
t-max-icont-min-icon

பட்டிவீரன்பட்டி அருகே ஓடும் காரில் திடீரென்று தீப்பிடித்ததால் பரபரப்பு ஏற்பட்டது. இதில் காரில் இருந்த 4 பேர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.

பட்டிவீரன்பட்டி,

திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலை சேர்ந்தவர் கோவிந்தன் (வயது 58). கொடைக்கானல் நகரசபை முன்னாள் தலைவர். இவர் திருச்சியில் நடைபெற உள்ள உறவினரின் திருமணத்துக்காக நேற்று கொடைக்கானலில் இருந்து காரில் தனது மனைவி ஆண்டாள், உறவினர் செல்லம்மாள் ஆகியோருடன் புறப்பட்டார். காரை கொடைக்கானலை சேர்ந்த டிரைவர் கணேசன் என்பவர் ஓட்டி வந்துள்ளார்.

இந்த கார் வத்தலக்குண்டு-திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலையில் பட்டிவீரன்பட்டியை அடுத்த சாலைப்புதூர் என்ற இடத்தின் அருகே வந்த போது காரின் முன்பகுதியில் இருந்து புகை வந்துள்ளது. உடனடியாக டிரைவர் நடுரோட்டிலேயே காரை நிறுத்தியுள்ளார். காரில் இருந்து அனைவரும் கீழே இறங்கி விட்டனர்.

காரில் தீ மளமளவென பரவியது. தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து நீண்ட நேரம் போராடி தீயை அணைத்தனர். ஆனால் இந்த விபத்தில் கார் முற்றிலும் எரிந்து எலும்புக் கூடாக மாறியது. காரில் இருந்த சில ஆவணங்களும், பணமும் எரிந்து விட்டன.

நடு ரோட்டில் கார் தீப்பிடித்து எரிந்ததால் ரோட்டின் இருபுறமும் வாகனங்கள் அணிவகுத்து நின்றன. இதனால் சுமார் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. 

Next Story