மோட்டார்சைக்கிளில் சென்ற போது மினி ஆட்டோவில் வளையம் சிக்கி வங்கி ஊழியர் கை துண்டானது


மோட்டார்சைக்கிளில் சென்ற போது மினி ஆட்டோவில் வளையம் சிக்கி வங்கி ஊழியர் கை துண்டானது
x
தினத்தந்தி 27 Jan 2018 4:00 AM IST (Updated: 27 Jan 2018 12:23 AM IST)
t-max-icont-min-icon

மோட்டார்சைக்கிளில் சென்றபோது வங்கி ஊழியரின் கையில் அணிந்திருந்த வளையம் மினிஆட்டோவின் கொக்கியில் சிக்கிக்கொண்டதில் அவருடைய கை துண்டானது. ஆஸ்பத்திரியில் அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது.

எடப்பாடி,

இளைஞர்கள் பலர் தங்கள் கைகளில் இரும்பு, எவர்சில்வர் உள்ளிட்ட உலோக வளையங்களை அணிந்து வலம் வருகின்றனர். இவ்வாறு அணியும் வளையங்கள் சிலநேரங்களில் விபத்துகளுக்கு காரணமாக அமைந்து விடுகிறது. சில நேரங்களில் உடல் உறுப்புகளை இழக்க நேரிடுகிறது. இதேபோல் ஒரு சம்பவம் எடப்பாடி பகுதியில் நிகழ்ந்து உள்ளது. உருக்கமான இந்த சம்பவம் பற்றிய விவரம் வருமாறு:-

 சேலம் மாவட்டம் எடப்பாடியை அடுத்த வீரப்பம்பாளையத்தை சேர்ந்தவர் தங்கவேல். அந்த பகுதியில் உள்ள மாரியம்மன் கோவிலில் பூசாரியாக உள்ளார். இவரது மகன் சதீஷ்குமார் (வயது 30). தனியார் வங்கியில் தற்காலிக ஊழியராக பணிபுரிந்து வருகிறார். இவர் மோட்டார் சைக்கிளில் எடப்பாடியில் இருந்து வீட்டிற்கு செல்ல எடப்பாடி-சங்ககிரி சாலையில் நெடுஞ்சாலைத்துறை கோட்டபொறியாளர் அலுவலகம் அருகே சென்று கொண்டிருந்தார்.

அப்போது எடப்பாடி நோக்கி ஒரு மினி ஆட்டோ வந்து கொண்டிருந்தது. அந்த மினி ஆட்டோ சதீஷ்குமார் அருகே வந்த போது அவரது வலது கை மினி ஆட்டோவில் உரசியது. அப்போது சதீஷ்குமாரின் வலதுகையில் அணிந்திருந்த சில்வர் வளையம் மினிஆட்டோவின் பின்புற கதவு கொக்கியில் மாட்டிக்கொண்டது. கண் இமைக்கும் நேரத்தில் சதீஷ்குமாரின் வலதுகை துண்டாகி சாலையில் விழுந்தது. இதனால் வலிதாங்க முடியாமல் அவர் அலறித்துடித்தார்.

இதைப்பார்த்ததும் அந்த வழியாக சென்றவர்கள் அவரை சிகிச்சைக்காக தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். துண்டான கையை ஒரு பிளாஸ்டிக் பையில் போட்டு எடுத்துச்சென்றனர். அந்த மருத்துவமனையில் கையை பொருத்தும் வசதி இல்லாததால் உடனடியாக சதீஷ்குமாரை கோயம்புத்தூருக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது.

 இதுகுறித்து எடப்பாடி போலீஸ் இன்ஸ்பெக்டர் சுரேஷ்குமார், சப்-இன்ஸ்பெக்டர் வெங்கடாஜலம் ஆகியோர் வழக்குப்பதிவு செய்து மினி ஆட்டோ டிரைவர் முனுசாமி மகன் வெங்கடேசனிடம் விசாரணை நடத்தினர். இதைத்தொடர்ந்து வெங்கடேசனை போலீசார் கைது செய்தனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது. 

Next Story