பெருங்களத்தூரில் வீட்டில் தனியாக இருந்த பெண் கழுத்தை அறுத்துக்கொலை


பெருங்களத்தூரில் வீட்டில் தனியாக இருந்த பெண் கழுத்தை அறுத்துக்கொலை
x
தினத்தந்தி 27 Jan 2018 4:00 AM IST (Updated: 27 Jan 2018 12:41 AM IST)
t-max-icont-min-icon

பெருங்களத்தூரில் வீட்டில் தனியாக இருந்த பெண் கழுத்தை அறுத்துக்கொலை செய்யப்பட்டார். இதுதொடர்பாக போலீசார் விசாரித்து வருகிறார்கள்.

தாம்பரம்,

தாம்பரத்தை அடுத்த புதுபெருங்களத்தூர் மோதிலால் தெருவை சேர்ந்தவர் பார்த்தசாரதி. அதே பகுதியில் உள்ள ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் காவலாளியாக வேலை பார்த்து வருகிறார். இவரது மனைவி காந்திமதி ( வயது54). வீட்டில் இருவர் மட்டும் வசித்து வந்தனர்.

நேற்று காலை பார்த்தசாரதி வேலைக்கு சென்று விட்டார். வீட்டில் சமையல் செய்த காந்திமதி, நேற்று மதியம் 2.30 மணி அளவில் கணவர் வேலை பார்க்கும் இடத்திற்கு சென்று மதிய உணவை கொடுத்து விட்டு வீட்டிற்கு திரும்பி வந்தார்.

இந்தநிலையில் நேற்று மாலை 6 மணிக்கு அதே பகுதியை சேர்ந்த ஜேம்ஸ் என்பவர் தனது மனைவியுடன் காந்திமதியின் வீட்டிற்கு சென்றார். அப்போது வீட்டின் கதவு திறந்து கிடந்தது. இருவரும் உள்ளே சென்று பார்த்தபோது, அங்கு கழுத்தை அறுத்து கொலை செய்யப்பட்ட நிலையில் காந்திமதி பிணமாக கிடந்தார். இதனை பார்த்து இருவரும் அதிர்ச்சி அடைந்தனர்.

தகவல் அறிந்ததும் பீர்க்கன்காரணை போலீஸ் இன்ஸ்பெக்டர் பொன்ராஜ் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று, பிணத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து மோப்பநாயை வரவழைத்தனர். வீட்டில் இருந்து சென்ற நாய், அதே பகுதியில் உள்ள செல்வவிநாயகர் கோவில் அருகே சென்று நின்றது. யாரையும் கவ்விப்பிடிக்கவில்லை.

காந்திமதி அணிந்திருந்த நகைகளும், வீட்டில் இருந்த பணமும் கொள்ளை போகவில்லை. எனவே பணம், நகைக்காக அவர் கொலை செய்யப்படவில்லை. காந்திமதி கொலை செய்யப்பட்டதற்கு வேறு என்ன காரணமாக இருக்கும் என்று போலீசார் தொடர்ந்து விசாரித்து வருகிறார்கள்.

Next Story