சாயர்புரம் அருகே வழி கேட்பது போல் நடித்து பெண்ணிடம் தங்க சங்கிலி பறிப்பு


சாயர்புரம் அருகே வழி கேட்பது போல் நடித்து பெண்ணிடம் தங்க சங்கிலி பறிப்பு
x
தினத்தந்தி 27 Jan 2018 3:15 AM IST (Updated: 27 Jan 2018 1:24 AM IST)
t-max-icont-min-icon

வழிகேட்பது போல் நடித்து மோட்டார் சைக்கிளில் வந்தவர்கள் பெண்ணிடம் தங்க சங்கிலி பறித்துச் சென்றனர். அவர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

சாயர்புரம்,

தூத்துக்குடி மாவட்டம் சாயர்புரம் அருகே உள்ள சிவத்தையாபுரம். இங்குள்ள தபால் அலுவலகம் தெருவை சேர்ந்தவர் தங்கராஜ். இவருடைய மனைவி திருமணிதங்கம் (வயது 60). இவர் நேற்று முன்தினம் மதியம் வீட்டுக்கு அருகில் உள்ள குளத்துக்கு சென்று குளித்து விட்டு வீட்டுக்கு நடந்து வந்தார்.

வீட்டின் முன்பு வந்து கேட்டை திறந்து கொண்டு இருந்த போது, மோட்டார் சைக்கிளில் 2 பேர் வந்தனர். அதில் ஒரு நபர், மோட்டார் சைக்கிளை விட்டு இறங்கி திருமணிதங்கத்திடம் இந்த வழி எங்கே செல்கிறது என்று கேட்டார். அதற்கு திருமணிதங்கம் பதில் கூறினார்.

அப்போது கண் இமைக்கும் நேரத்தில் அந்த நபர், திருமணிதங்கம் கழுத்தில் அணிந்து இருந்த 9 பவுன் தங்கசங்கிலியை பறித்தார். உடனே அங்கு மோட்டார் சைக்கிளில் நின்று கொண்டிருந்த தன்னுடைய கூட்டாளியுடன் மின்னல் வேகத்தில் தப்பிச் சென்றார். திருமணிதங்கம் திருடன் திருடன் என்று சத்தம் போட்டார். அந்த பகுதியில் உள்ளவர்கள் ஓடி வந்தனர், அதற்குள் மோட்டார் சைக்கிளில் சென்றவர்களை காணவில்லை.

இதுகுறித்த புகாரின் பேரில் சாயர்புரம் போலீஸ் சப்- இன்ஸ்பெக்டர் விமலா வழக்கு பதிவு செய்து அவர் களை வலைவீசி தேடி வருகின்றார். மோட்டார் சைக்கிளில் வந்து வழிகேட்பது போல் நடித்து பெண்ணிடம் தங்க சங்கிலி பறித்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

Next Story