திருச்செந்தூரில் கந்துவட்டி கேட்டு பெண்ணுக்கு மிரட்டல், 3 பேர் மீது வழக்கு


திருச்செந்தூரில் கந்துவட்டி கேட்டு பெண்ணுக்கு மிரட்டல், 3 பேர் மீது வழக்கு
x
தினத்தந்தி 27 Jan 2018 3:15 AM IST (Updated: 27 Jan 2018 1:26 AM IST)
t-max-icont-min-icon

திருச்செந்தூரில் கந்துவட்டி கேட்டு பெண்ணுக்கு மிரட்டல் விடுக்கப்பட்டது. இந்த பிரச்சினை தொடர்பாக பெண்ணின் கணவர் உள்பட 3 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

திருச்செந்தூர்,

திருச்செந்தூர் பிலோமி நகரைச் சேர்ந்தவர் சுப்பிரமணியம். இவருடைய மனைவி செல்வி. இவர் மாவு மில் தொடங்குவதற்காக, திருச்செந்தூர் மேல ரத வீதியைச் சேர்ந்த சுப்பையாவிடம் ரூ.10 லட்சம் கடன் கேட்டார்.

இதற்கு சுப்பையா 60 சதவீத வட்டிக்கு கடன் தருவதாகவும், சுப்பிரமணியத்தின் பெயரில் உள்ள ஒரு ஏக்கர் 13 சென்ட் நிலத்தை தனது அண்ணன் மகன் கந்தசாமியின் பெயரில் பத்திர பதிவு செய்ய வேண்டும் என்றும் கூறினார். அதன்படி நிலத்தை பத்திர பதிவு செய்தவுடன், வட்டியை கழித்து ரூ.8 லட்சத்து 94 ஆயிரத்தை செல்விக்கு சுப்பையா வழங்கினார்.

பின்னர் செல்வி பல்வேறு தவணைகளாக ரூ.9 லட்சத்தை சுப்பையாவுக்கு வழங்கினார். ஆனாலும் சுப்பையா நிலத்தை திருப்பி கொடுக்காமல் அதிக வட்டி கேட்டு செல்வியை மிரட்டியதாக கூறப்படுகிறது. இதுகுறித்து செல்வி போலீசில் புகார் செய்தார். புகாரின் பேரில் போலீசார் நடவடிக்கை எடுக்கவில்லை என்று கூறப்படுகிறது.

இதுகுறித்து நடவடிக்கை எடுக்க உத்தரவிடக்கோரி செல்வி, திருச்செந்தூர் கோர்ட்டில் மனு தாக்கல் செய்தார். மனுவை விசாரித்த மாஜிஸ்திரேட்டு தினேஷ்குமார், செல்வி புகார் மனு மீது விசாரணை நடத்தி வழக்குப்பதிவு செய்ய திருச்செந்தூர் தாலுகா போலீசாருக்கு உத்தரவிட்டார்.

இதையடுத்து திருச்செந்தூர் தாலுகா போலீசார் செல்வி கொடுத்த புகார் மனு மீது விசாரணை நடத்தினர். அதன்பேரில், சுப்பையா, கந்தசாமி ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. மேலும் இந்த பிரச்சினையில் சுப்பையாவுக்கு உடந்தையாக இருந்ததாக செல்வியின் கணவர் சுப்பிரமணியம் மீதும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். சுப்பிரமணியம், மனைவி செல்வியை பிரிந்து வாழ்ந்து வருவதாக கூறப்படுகிறது. 

Next Story