நடிகர் உபேந்திரா, 3-வது தேர்தல் அறிக்கை வெளியிட்டார்


நடிகர் உபேந்திரா, 3-வது தேர்தல் அறிக்கை வெளியிட்டார்
x
தினத்தந்தி 27 Jan 2018 4:15 AM IST (Updated: 27 Jan 2018 2:35 AM IST)
t-max-icont-min-icon

நடிகர் உபேந்திரா 3-வது தேர்தல் அறிக்கையை வெளியிட்டார். அதில், 52 லட்சம் மாணவர்களுக்கு ‘டேப்லெட்‘ வழங்கப்படும் என்று கூறப்பட்டு உள்ளது.

பெங்களூரு,

கன்னட நடிகர் உபேந்திரா, பிரக்ஞாவந்தா ஜனதா கட்சியை தொடங்கியுள்ளார். அவரது கட்சி வருகிற சட்டசபை தேர்தலில் போட்டியிடுகிறது. தற்போது அவர் கட்சியை பலப்படுத்தும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார். இதற்கிடையே, சமீபத்தில் கட்சியின் செயல்பாடு-ஆட்சி முறை தொடர்பாகவும், கிராம வளர்ச்சி தொடர்பாகவும் 2 தேர்தல் அறிக்கைகளை நடிகர் உபேந்திரா வெளியிட்டார்.

இந்த நிலையில், 2017-18-ம் ஆண்டில் மாநில அரசு கல்வித்துறைக்காக ஒதுக்கிய ரூ.22 ஆயிரத்து 662 கோடியில் இருந்து கல்வித்துறை தொடர்பாக உபேந்திரா 3-வது தேர்தல் அறிக்கையை வெளியிட்டுள்ளார். அதன் விவரம் வருமாறு:-

அரசு மற்றும் உறைவிட பள்ளிகளில் 3-ம் வகுப்பு முதல் 10-ம் வகுப்பு வரை பயிலும் மாணவ-மாணவிகளுக்கு நோட்டு புத்தகங்களுடன் ‘டேப்லெட்‘ வழங்கப்படும். ‘ஸ்மார்ட்‘ வகுப்பறை திட்டத்தை தொடங்கும் வகையில் இந்த முயற்சி மேற்கொள்ளப்படுகிறது. ரூ.2,600 கோடி செலவில் மொத்தம் 52 லட்சம் பேருக்கு ‘டேப்லெட்‘ வழங்கப்படும்.

6 மாதத்துக்கு ஒருமுறை பல்வேறு வகைகளில் மாணவர்களின் திறமைகள் சோதனை செய்யப்படும். பி.யூ.சி. படிப்புக்கு பின்னர் பயில வேண்டிய தொழில் கல்விகளை எஸ்.எஸ்.எல்.சி. படிப்புக்கு பின்னரே மாணவர்கள் கற்று கொள்ள வழிவகை செய்யப்படும். இதன்மூலம் விரைவில் மாணவர்கள் வேலைகளுக்கு செல்ல வாய்ப்பு உருவாகும்.

எஸ்.எஸ்.எல்.சி.யில் அதிக மதிப்பெண் பெறும் 15 சதவீத மாணவர்களுக்கு பி.யூ.சி. 2-ம் ஆண்டு படிப்பதற்கான செலவையும், சி.இ.டி. தேர்வு எழுதி என்ஜினீயரிங் பயிலும் 15 சதவீத மாணவர்கள், மருத்துவம் பயிலும் 30 சதவீத மாணவர்கள் மற்றும் பிற டிகிரிகளை படிக்கும் 20 சதவீத மாணவர்களுக்கான படிப்பு செலவு முழுவதையும் அரசு ஏற்றுக்கொள்ளும்.

ஆசிரியர்களுக்கான பதவி உயர்வு மாணவர்கள் மற்றும் அவர்களின் பெற்றோர் வழங்கும் மதிப்பெண்கள் மூலம் அளிக்கப்படும். மேலும் தனியார் பள்ளி-கல்லூரிகள் வசூலிக்கும் கட்டணமும் முறைப்படுத்தப்படும்.

இதுபோன்ற பல்வேறு அறிவிப்புகள் அந்த அறிக்கையில் இடம்பெற்றுள்ளன.

Next Story