நாகர்கோவில் அண்ணா விளையாட்டு அரங்கில் கோலாகலம்: குடியரசு தினவிழாவில் கலெக்டர் தேசிய கொடி ஏற்றினார்


நாகர்கோவில் அண்ணா விளையாட்டு அரங்கில் கோலாகலம்: குடியரசு தினவிழாவில் கலெக்டர் தேசிய கொடி ஏற்றினார்
x
தினத்தந்தி 27 Jan 2018 5:41 AM IST (Updated: 27 Jan 2018 5:41 AM IST)
t-max-icont-min-icon

நாகர்கோவில் அண்ணா விளையாட்டு அரங்கில் குடியரசு தினவிழா கோலாகலமாக நடந்தது. இதில் கலெக்டர் சஜ்ஜன்சிங் சவான் தேசியக்கொடியை ஏற்றி வைத்தார்.

நாகர்கோவில்,

நாடு முழுவதும் குடியரசு தினவிழா நேற்று கோலாகலமாக கொண்டாடப்பட்டது. இந்த விழாவை அரசுத்துறையினர், அரசுத்துறை நிறுவனங்கள், பள்ளி- கல்லூரிகள், தனியார் நிறுவனங்கள், தன்னார்வ அமைப்புகள், அரசியல் கட்சிகளைச் சேர்ந்தவர்கள், பொதுமக்கள் என அனைத்து தரப்பினரும் சீரும், சிறப்புமாக கொண்டாடி மகிழ்ந்தனர்.

குமரி மாவட்ட நிர்வாகம் சார்பில் கொண்டாடப்பட்ட குடியரசு தினவிழா நாகர்கோவில் அண்ணா விளையாட்டு அரங்கத்தில் நேற்று காலை கோலாகலமாக நடந்தது.

இதையொட்டி சரியாக காலை 8.05 மணிக்கு விளையாட்டு அரங்கத்தில் அமைக்கப்பட்டிருந்த கொடி கம்பத்தில் தேசிய கொடியை கலெக்டர் சஜ்ஜன்சிங் சவான் ஏற்றி வைத்து, கொடிக்கு வணக்கம் செலுத்தினார். பின்னர் தேசிய கொடி நிறத்தினாலான மூவர்ண பலூன்களை பறக்கவிட்டார்.

அதையடுத்து கலெக்டர் சஜ்ஜன்சிங் சவான் திறந்த ஜீப்பில் சென்று, போலீசாரின் அணிவகுப்பை பார்வையிட்டார். அவருடன் போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரீநாத்தும் உடன் சென்றார்.

மீண்டும் கொடிக்கம்பம் அமைந்துள்ள மேடைக்கு கலெக்டர் மற்றும் போலீஸ் சூப்பிரண்டு வந்து சேர்ந்ததும் படைகளின் அணிவகுப்பு மரியாதை நடந்தது. போலீஸ் பேண்டுவாத்தியக்குழுவினர் தேசபக்தி பாடலை இசைத்தவாறு முன்செல்ல படைகளின் அணிவகுப்பு நடந்தது. படைகளின் தலைவராக இருந்த ஆயுதப்படை இன்ஸ்பெக்டர் கிறிஸ்டோபர் தம்பிராஜ் படைகளை வழிநடத்த, ஆயுதப்படை முதல் அணி சப்-இன்ஸ்பெக்டர் அருண் தலைமையிலும், 2-வது அணி சப்-இன்ஸ்பெக்டர் செந்தில்வேல் தலைமையிலும், 3-வது அணி சப்-இன்ஸ்பெக்டர் ராமச்சந்திரன் தலைமையிலும், 4-வது அணி சப்-இன்ஸ்பெக்டர் ஜெயராமன் தலைமையிலும் அணிவகுத்தன.

தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் துறை அணிவகுப்புக்கு கன்னியாகுமரி நிலைய அலுவலர் துரை தலைமை தாங்கினார். லஸ்லி தலைமையில் நடைபெற்ற ஊர்க்காவல்படை அணிவகுப்பில் முதல் அணிக்கு வில்சனும், 2-வது அணிக்கு ஷைலாகுமாரியும் தலைமை தாங்கினர். என்.சி.சி. மாணவர்கள் அணிவகுப்புக்கு மாணவர் சிவரஞ்சித் தலைமை தாங்கினார். இந்த அணிவகுப்பின்போது போலீசாரும், தீயணைப்பு படையினர், ஊர்க்காவல் படையினர், என்.சி.சி. மாணவர்கள் மிடுக்கான தோற்றத்துடன் கம்பீர நடை நடந்து அணிவகுத்தது அனைவரையும் கவர்ந்தது. பின்னர் அணிவகுப்பில் பங்கேற்ற அணித் தலைவர்கள் அறிமுகம் செய்து வைக்கப்பட்டனர்.

பின்னர் போலீஸ் துறையினர் 41 பேருக்கு முதல்-அமைச்சர் பதக்கத்தை கலெக்டர் வழங்கினார்.

அதைத்தொடர்ந்து நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன. முன்னாள் படைவீரர் நலத்துறை சார்பில் 2 பயனாளிகளுக்கு ரூ.50 ஆயிரமும், வேளாண்மைத்துறை சார்பில் 9 பயனாளிகளுக்கு ரூ.1 லட்சத்து 35 ஆயிரத்து 780-ம், மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில் 3 பயனாளிகளுக்கு ரூ.35 ஆயிரமும், சமூக பாதுகாப்புத்திட்டத்தின்கீழ் 18 பேருக்கு ரூ.2 லட்சத்து 39 ஆயிரத்து 750-ம், அகஸ்தீஸ்வரம் தாலுகாவில் 17 பயனாளிகளுக்கு ரூ.4 லட்சத்து 27 ஆயிரத்து 125 மதிப்பிலான இலவச வீட்டுமனை பட்டாக்களும், கல்குளம் தாலுகாவில் 7 பயனாளிகளுக்கு ரூ.7 லட்சத்து 90 ஆயிரம் மதிப்பிலான இலவச வீட்டுமனை பட்டாக்களும், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை சார்பில் 10 பயனாளிகளுக்கு ரூ.40 ஆயிரத்து 680 மதிப்பிலான தையல் எந்திரங்களும், மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை சார்பில் 3 பயனாளிகளுக்கு ரூ.10 ஆயிரத்து 65 மதிப்பிலான தையல் எந்திரங்களும், மாவட்ட தாட்கோ அலுவலகம் மூலம் 5 பயனாளிகளுக்கு ரூ.14 லட்சத்து 96 ஆயிரத்து 684-ம் என மொத்தம் 74 பயனாளிகளுக்கு ரூ.32 லட்சத்து 25 ஆயிரத்து 84 மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.

தமிழில் சிறந்து விளங்கிய மாவட்ட பதிவாளர் அலுவலகத்துக்கு கேடயத்தையும், ஒகி புயலின்போது சிறப்பாக பணியாற்றிய வட்டார வளர்ச்சி அலுவலகங்களுக்கு கேடயங்களையும், விளையாட்டுப் போட்டியில் பயனடையும் விளையாட்டு வீரர்களுக்கு பதக்கங்களையும், ஒகி புயல் நிவாரணம் மற்றும் மறுவாழ்வு பணிகளில் சிறப்பாக பணிபுரிந்த அரசு அலுவலர்களுக்கு பாராட்டுச் சான்று மற்றும் கேடயங்களையும், தனித்திறமை கொண்ட நபர்கள் மற்றும் சிறப்பாக பொது தொண்டு புரிந்த சமூக பணியாளர்களை ஊக்குவிக்கும் வகையில் 13 பேருக்கு பாராட்டு சான்றிதழ்களையும் கலெக்டர் சஜ்ஜன்சிங் சவான் வழங்கினார்.

அதையடுத்து பள்ளி மாணவ- மாணவிகளின் கண்கவர் கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றன. இந்த கலைநிகழ்ச்சி தேசப்பற்றையும், தேசிய ஒருமைப்பாட்டைை-யும் பிரதிபலிக்கும் வகையில் அமைந்திருந்தன. இதில் 6 பள்ளிகளைச் சேர்ந்த 251 மாணவ- மாணவிகள் பங்கேற்று பலவண்ணம் மற்றும் தேசியக்கொடியின் மூவர்ண நிறத்தினாலான உடைகளை அணிந்து வந்த மாணவ- மாணவிகள் தேச பக்தி பாடலுக்கு ஏற்பவும், இசைகளுக்கு ஏற்ப வித்தியாசமான முறையில் கலைநிகழ்ச்சியை நடத்திக் காண்பித்தனர்.

தேச ஒற்றுமையை வலியுறுத்தும் விதமாக மாதவலாயம் அரசு மேல்நிலைப்பள்ளியைச் சேர்ந்த மாணவர்கள் மவுன நாடகத்தை தத்ரூபமாக நடித்துக்காண்பித்தனர். அப்போது இந்தியாவில் வாழும் மக்கள் மதங்களால் பிரிந்திருந்தாலும், தேசபக்தியில் ஒன்றுபட்டவர்கள் என்பதை மாணவர்கள் நடித்துக்காட்டி, அனைவரையும் வியக்க வைத்த மாதவலாயம் அரசு மேல்நிலைப்பள்ளி மாணவ- மாணவிகளுக்கு முதல் பரிசு வழங்கப்பட்டது. 2-வது பரிசு தோவாளை ராமலெட்சுமி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மாணவ- மாணவிகளுக்கும், 3-வது பரிசு கருங்கல் பெஸ்ட் சி.பி.எஸ்.இ. பள்ளி மாணவ- மாணவிகளுக்கும் வழங்கப்பட்டன.

விழாவில் சுரேஷ்ராஜன் எம்.எல்.ஏ., கூடுதல் கலெக்டர் ராகுல்நாத், மாவட்ட வருவாய் அதிகாரி இளங்கோ, பத்மநாபபுரம் உதவி கலெக்டர் ராஜகோபால் சுங்கரா, அரசு ரப்பர் கழக நிர்வாக இயக்குனர் ராகேஷ்குமார் டோக்ரா, போலீஸ் கூடுதல் சூப்பிரண்டு விஜயபாஸ்கர், உதவி சூப்பிரண்டுகள் ஸ்ரீஅபினவ் (தக்கலை), சாய்சரண் தேஜஸ்வி (குளச்சல்), ஜவகர் (பயிற்சி), துணை சூப்பிரண்டுகள் வேணுகோபால், கோபி, ராமராஜ், கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) பரிதாபானு, சுகாதார பணிகள் துணை இயக்குனர் டாக்டர் மதுசூதனன், நாகர்கோவில் கோட்டாட்சியர் ஜானகி, மின்வாரிய கண்காணிப்பு பொறியாளர் டேவிட் ஜெபசிங், ஆசாரிபள்ளம் அரசு மருத்துவக்கல்லூரி டீன் செல்வராஜ், துணை முதல்வர் லியோடேவிட் ஆஸ்பத்திரி கண்காணிப்பாளர் ராதாகிருஷ்ணன், உறைவிட மருத்துவ அதிகாரி ஆறுமுகவேலன், டாக்டர்கள் பீனா, அசோக்குமார், ரவீந்திரன், நகராட்சி ஆணையர் சரவணகுமார், உணவு பாதுகாப்பு அதிகாரிகள் குமாரபாண்டியன், சங்கரநாராயணன், மாவட்ட முதன்மைக் கல்வி அதிகாரி பாலா, கல்வி மாவட்ட அதிகாரி நடராஜன், தாசில்தார்கள் சஜித், கோலப்பன், துணை தாசில்தார் கண்ணன், தனிப்பிரிவு இன்ஸ்பெக்டர் இளங்கோ, ஊர்க்காவல்படை ஏரியா கமாண்டன்ட் டாக்டர் பிளாட்பின், துணை கமாண்டர் மைதிலி சுந்தரம், சாகித்ய அகாடமி விருது பெற்ற எழுத்தாளர் பொன்னீலன், முகைதீன் சாகுல்அமீது மற்றும் பல்வேறு துறைகளைச் சேர்ந்த அதிகாரிகள், போலீசார், மாணவ- மாணவிகள், பொதுமக்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

இந்த விழாவையொட்டி அண்ணா விளையாட்டு அரங்க உள்பகுதியிலும், வெளிப்பகுதியிலும் ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். 

Next Story