இந்து கோவில்களை மீட்க வேண்டும் மடத்துக்குளத்தில் நடந்த மாநாட்டில் ராம கோபாலன் பேச்சு


இந்து கோவில்களை மீட்க வேண்டும் மடத்துக்குளத்தில் நடந்த மாநாட்டில் ராம கோபாலன் பேச்சு
x
தினத்தந்தி 27 Jan 2018 5:56 AM IST (Updated: 27 Jan 2018 5:56 AM IST)
t-max-icont-min-icon

இந்து கோவில்களை மீட்க வேண்டும் என்று மடத்துக்குளத்தில் நடந்த மாநாட்டில் ராம கோபாலன் பேசினார்.

மடத்துக்குளம்,

இந்து முன்னணியின் கோவை கோட்ட 10-வது மாநாடு ‘காவியமயமாகும் தமிழகம்‘ என்ற தலைப்பில் திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளத்தில் நேற்று நடைபெற்றது. மாநாட்டிற்கு இந்து முன்னணியின் மாநில தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம் தலைமை தாங்கினார். மாநில அமைப்பாளர் பக்தன், மாநில பொதுச்செயலாளர் முருகானந்தம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இந்து முன்னணி நிறுவன அமைப்பாளர் ராம கோபாலன் கலந்துகொண்டார். அப்போது அவருக்கு வெள்ளி வீரவாள் பரிசாக வழங்கப்பட்டது.

இதைத்தொடர்ந்து அவர் பேசியதாவது:-

நமக்கு ஏற்படக்கூடிய உணர்ச்சிகளை முகநூலில் நல்லவிதமாக பயன்படுத்த வேண்டும். இப்போது செல்போன் இல்லாத ஆண்கள் இல்லை. முன்பெல்லாம் பெண்கள் வீட்டில் இருந்து வெளியே செல்லும் போது குழந்தையை தூக்கிச்செல்வார்கள். ஆனால் தற்போது குழந்தைக்கு பதிலாக செல்போனை தூக்கி செல்கிறார்கள். நமக்கு பயன்படக்கூடிய விதத்தில் அதை நாம் மாற்ற வேண்டும். மாற்றவும் முடியும். ஆண்டாளை பற்றி வைரமுத்து பேசியுள்ளார். அவ்வாறு பேச அவருக்கு நாக்கு கூசவில்லையா. வைரமுத்து இந்து கடவுள்களை அவமதிப்பது இது முதல் முறையல்ல. முதல்முறை பேசும் போதே இதுபோன்ற எழுச்சி இருந்திருந்தால் மறுபடியும் அவருக்கு பேசும் துணிச்சல் வந்திருக்காது.

ஆண்டாளை விமர்சித்ததற்கு தமிழகத்தில் ஏற்பட்டுள்ள எதிர்ப்பு ஒரே நாளில் ஏற்பட்டதல்ல. இந்து முன்னணி தொடங்கிய நாள் முதல் இந்து கோவில்களை, இலக்கியத்தை, கடவுள்களை, பண்பாட்டை யாராவது விமர்சித்தால் தமிழ்நாடு கொந்தளித்துள்ளது. இத்தனை ஆண்டுகளாய் நாம் செய்த கடுமையான வேலையால் தமிழகத்தில் இந்த மாற்றம் ஏற்பட்டுள்ளது. தமிழகத்தில் காவியை காலூன்ற விடமாட்டோம் என்று சிலர் அறிக்கை விடுகிறார்கள். எங்களை காலூன்ற விடுவதற்கு அவர்கள் தமிழகத்தை குத்தகைக்கு எடுத்துள்ளார்களா?. திருமாவளவன் சிறந்த ஆராய்ச்சியாளர். தமிழ்நாட்டு கோவில்களையெல்லாம் புத்த, சமண கோவில்களாக இருந்ததாம். அப்படியானால் நம் ஊர் மாரியம்மன், காளியம்மன் கோவில்கள் எல்லாம் புத்த கோவில்களாக இருந்ததா?.

புத்த மதம் தமிழ்நாட்டில் மட்டுமல்ல, இந்தியாவிலேயே காணாமல் போய்விட்டது. தமிழ்நாட்டில் தமிழை வைத்து பிழைப்பவர்கள் ஒரு கூட்டம். மதமாற்ற சக்திகள் அத்தனை பேரும் நம் வளர்ச்சியை கண்டு பயப்பட வேண்டும். மடத்துக்குளத்தில் இப்படிஒரு பிரமாண்ட மாநாட்டை நடத்தி காட்டியிருக்கிறோம். இது இன்னும் 10 மடங்காக பெருக வேண்டும். இந்து முன்னணியின் குறிக்கோள் இந்து கோவில்களை மீட்க வேண்டும் என்பது தான். இந்துக்களின் நிலப்பரப்பை மீட்போம். இந்துப்பெண்களை மீட்போம். பாரதத்தை இந்து நாடாக அறிவிக்க வைப்போம். வீரசிவாஜி என்ற சிறுவனால் மிகப்பெரிய மாற்றங்களை கொண்டுவர முடிந்த போது நம்மாலும் முடியும் என்ற உறுதியோடு அனைவரும் செயல்பட வேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார்.

இந்த மாநாட்டில் ஆண்டாளை இழிவுபடுத்திய வைரமுத்துவுக்கு கண்டனம் தெரிவிப்பது, கோவை மாவட்டம் சூலூர் தாலுகாவிலும், பொள்ளாச்சி தாலுகா நெகமம் மற்றும் கோமங்கலம் பகுதிகளிலும் அனுமதி பெறாமல் கட்டப்பட்ட கிறிஸ்தவ ஆலயங்களை நிரந்தரமாக மூட வேண்டும், மடத்துக்குளம் தாலுகாவில் வேடபட்டி மாரியம்மன் கோவிலுக்கு சொந்தமான நிலங்கள் மற்றும் சோழமாதேவி குங்குமவல்லி உடனமர் குலசேகரசாமி கோவிலுக்கு சொந்தமான நிலங்களை ஆக்கிரமிப்பாளர்களிடம் இருந்து மீட்க வேண்டும், பி.ஏ.பி. திட்டத்தில் உள்ளபடி ஆனைமலையாறு நல்லாறு திட்டத்தை நிறைவேற்றாமல் பி.ஏ.பி. திட்ட அணைகளில் இருந்து கேரளாவுக்கு தண்ணீர் திறக்கும் முடிவை தமிழக அரசு மாற்றிக்கொள்ள வேண்டும். திருவனந்தபுரத்தில் இருந்து மதுரை செல்லும் அமிர்தா விரைவு ரெயில் உடுமலையில் நின்று செல்ல வேண்டும், சினிமா துறையில் உள்ள சிலர் சீர்திருத்தம் என்ற பெயரில் இந்து விரோத கருத்துகளை பரப்புபவர்களை கண்டிப்பது என்பது உள்பட பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

இதில் இந்து முன்னணி மாநில செயலாளர் கிஷோர்குமார் மற்றும் திருப்பூர், ஈரோடு, கோவை, திண்டுக்கல், நீலகிரி ஆகிய மாவட்டங்களை சேர்ந்த 3 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் கலந்துகொண்டனர். முன்னதாக அனைவரும் மாநாட்டு பந்தலின் முகப்பு வாயிலில் மெட்டல் டிடெக்டர் கருவி மூலம் பரிசோதனை செய்த பின்னரே உள்ளே அனுமதிக்கப்பட்டனர். மாநாட்டையொட்டி உடுமலை போலீஸ் துணை சூப்பிரண்டு விவேகானந்தன் தலைமையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. 

Next Story