திண்டுக்கல்லில் பரிதாபம்: 2 குழந்தைகளை கிணற்றில் தள்ளி கொன்றுவிட்டு தாய் தற்கொலை


திண்டுக்கல்லில் பரிதாபம்: 2 குழந்தைகளை கிணற்றில் தள்ளி கொன்றுவிட்டு தாய் தற்கொலை
x
தினத்தந்தி 27 Jan 2018 5:45 AM IST (Updated: 27 Jan 2018 5:59 AM IST)
t-max-icont-min-icon

திண்டுக்கல்லில், 2 குழந்தைகளை கிணற்றில் தள்ளி கொன்றுவிட்டு தாய் தற்கொலை செய்து கொண்டார். இதுபற்றி போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

திண்டுக்கல்,

திண்டுக்கல் மலைக்கோட்டை அடிவாரத்தில் டி.வி.ஏ. நகர் உள்ளது. இந்த பகுதியை சேர்ந்த சிலர், நேற்று மாலை அங்குள்ள தனியாருக்கு சொந்தமான கிணற்றின் அருகே நடந்து சென்றனர். அப்போது, கிணற்றுக்குள் ஒரு பெண் மற்றும் 2 பெண் குழந்தைகள் பிணமாக மிதப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். உடனடியாக அவர்கள் நகர் தெற்கு போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.

மேலும், தீயணைப்பு படையினருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. உடனே அங்கு வந்த தீயணைப்பு படையினர் கிணற்றுக்குள் இறங்கி, கயிறு கட்டி 3 பேரின் உடல்களையும் மீட்டு மேலே கொண்டு வந்தனர்.

இதற்கிடையே சம்பவ இடத்துக்கு நகர் போலீஸ் துணை சூப்பிரண்டு சிகாமணி மற்றும் இன்ஸ்பெக்டர்கள் சபியுல்லா, சுரேஷ் ஆகியோர் விரைந்து வந்து விசாரணை நடத்தினர். மேலும் 3 பேரின் உடல்களையும் போலீசார் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

போலீசார் நடத்திய விசாரணையில், தனது 2 குழந்தைகளை கிணற்றில் தள்ளிவிட்டு அந்த பெண் தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது. மேலும் அந்த பெண் திண்டுக்கல் யூசுப்பியா நகரை சேர்ந்த சம்சுதீன் என்பவருடைய மனைவி தவுசிகா பேகம் (வயது 33) எனவும், அவருடைய குழந்தைகளின் பெயர்கள் ரசிபா (4), ரதிபா (2) என்றும் தெரியவந்தது.

சம்சுதீன் ஆட்டோ டிரைவராக உள்ளார். ரசிபா எல்.கே.ஜி. படித்து வந்தாள். குழந்தைகளை கொன்றுவிட்டு தாய் தற்கொலை செய்ததற்கான காரணம் என்ன என்பது பற்றி உடனடியாக தெரியவில்லை. இதுபற்றி போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.

2 குழந்தைகளை கிணற்றில் தள்ளி கொன்றுவிட்டு தாய் தற்கொலை செய்த சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. 

Next Story