போலீசார் தாக்கியதால் தீக்குளித்து தற்கொலை: நெல்லை கார் டிரைவரின் உடல் சொந்த ஊரில் தகனம்


போலீசார் தாக்கியதால் தீக்குளித்து தற்கொலை: நெல்லை கார் டிரைவரின் உடல் சொந்த ஊரில் தகனம்
x
தினத்தந்தி 28 Jan 2018 3:30 AM IST (Updated: 27 Jan 2018 7:32 PM IST)
t-max-icont-min-icon

போலீசார் தாக்கியதால் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்ட நெல்லை கார் டிரைவரின் உடல், அவரது சொந்த ஊரில் தகனம் செய்யப்பட்டது

பனவடலிசத்திரம்,

போலீசார் தாக்கியதால் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்ட நெல்லை கார் டிரைவரின் உடல், அவரது சொந்த ஊரில் தகனம் செய்யப்பட்டது. முன்னதாக, அவரது உடலுக்கு கிராமமக்கள் கண்ணீர் அஞ்சலி செலுத்தினர்.

‘கால்டாக்சி‘ டிரைவர்

நெல்லை மாவட்டம் சங்கரன்கோவில் தாலுகா பனவடலிசத்திரம் அருகே உள்ள ஆயாள்பட்டி கிராமத்தை சேர்ந்த பாபு என்பவருடைய மகன் மணிகண்டன் (வயது 28). இவர் சென்னை தாம்பரத்தில் தங்கி, கிண்டியில் உள்ள ஒரு தனியார் ‘கால்டாக்சி‘ நிறுவனத்தில் டிரைவராக வேலை பார்த்து வந்தார்.

கடந்த 24–ந் தேதி மாலை வேளச்சேரிக்கு சவாரிக்கு சென்றுவிட்டு காரில் கிண்டிக்கு திரும்பி வந்து கொண்டிருந்தார். அப்போது தரமணி பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்த வேளச்சேரி போக்குவரத்து போலீசார், அவரது காரை தடுத்து நிறுத்தினர். காரில் மணிகண்டன் ‘சீட் பெல்ட்‘ அணியாதை போலீசார் கண்டித்துள்ளனர். அப்போது அவர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதில் டிரைவர் மணிகண்டனை போலீசார் அவதூறாக பேசி தாக்கியதாகவும், அவரது டிரைவர் லைசென்ஸ் மற்றும் செல்போனையும் பறித்ததாகவும் கூறப்படுகிறது.

தீக்குளித்து தற்கொலை


பொதுஇடத்தில் போலீசார் தன்னை தாக்கியதால் அவமானம் அடைந்த மணிகண்டன், போலீசாரின் செயலை கண்டித்து தனது உடலில் பெட்ரோல் ஊற்றி தீக்குளித்தார். இதில் படுகாயம் அடைந்த அவரை மீட்டு, சென்னை கீழ்ப்பாக்கம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். இதுபற்றிய தகவல் அறிந்ததும் அதிர்ச்சி அடைந்த மணிகண்டனின் குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் ஆஸ்பத்திரிக்கு திரண்டு சென்று கண்ணீர் விட்டு கதறி அழுதார்கள்.

இந்தநிலையில் அங்கு சிகிச்சை பலன் அளிக்காமல் நேற்று முன்தினம் மணிகண்டன் பரிதாபமாக இறந்தார். மேலும் மணிகண்டனின் மரணம் குறித்து எழும்பூர் மாஜிஸ்திரேட்டு கோபிநாத், கீழ்ப்பாக்கம் ஆஸ்பத்திரிக்கு சென்று விசாரணை நடத்தினார்.

பின்னர் மணிகண்டனின் உடல் பிரேத பரிசோதனை முடிந்து குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்பட இருந்த நிலையில், சம்பந்தப்பட்ட போக்குவரத்து போலீசார் மீது நடவடிக்கை எடுக்கும் வரை உடலை வாங்க மாட்டோம் என மணிகண்டனின் குடும்பத்தினர் கண்ணீர் மல்க போலீசாரிடம் தெரிவித்தனர். மேலும் 300–க்கும் மேற்பட்ட ‘கால்டாக்சி‘ டிரைவர்களும் ஆஸ்பத்திரியின் முன்பு குவிந்தனர். போலீசார் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி அவர்கள் போராட்டத்திலும் ஈடுபட்டனர்.

சொந்த ஊரில் உடல் தகனம்


இதையடுத்து மணிகண்டனின் குடும்பத்தினரிடம் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர். பேச்சுவார்த்தையில், சம்பந்தப்பட்ட போலீசார் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என போலீசார் உறுதி அளித்ததை தொடர்ந்து, மணிகண்டனின் உடலை அவருடைய குடும்பத்தினர் பெற்றுக் கொண்டனர். பின்னர் அவரது உடல் போலீஸ் பாதுகாப்புடன், ஆம்புலன்சில் ஏற்றி சொந்த ஊருக்கு எடுத்துச் செல்லப்பட்டது.

நேற்று காலை அவரது சொந்த ஊரான நெல்லை மாவட்டம் பனவடலிசத்திரம் அருகே உள்ள ஆயாள்பட்டி கிராமத்துக்கு மணிகண்டன் உடல் கொண்டு வரப்பட்டது. அப்போது அங்கு திரண்டு நின்ற உறவினர்கள் கதறி அழுதபடி, ஆம்பலன்ஸ் வாகனத்தை நோக்கி ஓடி வந்தனர். அப்போது பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த பனவடலிசத்திரம் போலீசார், கூட்டத்தை ஒழுங்குபடுத்தினர். பின்னர் அவரது உடல் அஞ்சலிக்காக, ஆம்புலன்ஸ் வாகனத்தில் இருந்து இறக்கி வைக்கப்பட்டது. குடும்பத்தினர், உறவினர்கள் மற்றும் கிராமமக்கள் ஏராளமானோர் மணிகண்டனின் உடலுக்கு கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்தினர். பின்னர் அவரது உடல் மயானத்துக்கு எடுத்துச் செல்லப்பட்டு தகனம் செய்யப்பட்டது.


Next Story