சிவகாமிபுரம் பூ மார்க்கெட்டில் மல்லிகைப்பூ ஒரு கிலோ ரூ.7 ஆயிரத்து விற்பனை விவசாயிகள் மகிழ்ச்சி


சிவகாமிபுரம் பூ மார்க்கெட்டில் மல்லிகைப்பூ ஒரு கிலோ ரூ.7 ஆயிரத்து விற்பனை விவசாயிகள் மகிழ்ச்சி
x
தினத்தந்தி 28 Jan 2018 3:00 AM IST (Updated: 27 Jan 2018 8:33 PM IST)
t-max-icont-min-icon

பாவூர்சத்திரம் அருகே உள்ள சிவகாமிபுரம் பூ மார்க்கெட்டில் ஒரு கிலோ மல்லிகைப்பூ ரூ.7 ஆயிரத்துக்கு விற்பனை ஆனது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.

பாவூர்சத்திரம்,

பாவூர்சத்திரம் அருகே உள்ள சிவகாமிபுரம் பூ மார்க்கெட்டில் ஒரு கிலோ மல்லிகைப்பூ ரூ.7 ஆயிரத்துக்கு விற்பனை ஆனது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.

பூ மார்க்கெட்

 நெல்லை மாவட்டம் பாவூர்சத்திரம் அருகே உள்ள சிவகாமிபுரத்தில் பூ மார்க்கெட் அமைந்துள்ளது. இங்கு பாவூர்சத்திரம், கீழப்பாவூர், பட்டமுடையார்புரம், அடைக்கலப்பட்டனம், குறும்பலாபேரி, வெள்ளக்கால், ராஜபாண்டி, கல்லூரணி, அரியப்புரம், ஆவுடையானூர், அருணாப்பேரி, நாகல்குளம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து மல்லிகை, பிச்சி, கனகாம்பரம் உள்ளிட்ட பூ வகைகளும், ஓசூரில் இருந்து கேந்தி, ரோஜா உள்ளிட்ட பூக்களும் கொண்டு வரப்பட்டு ஏலம் விடப்படும். தென்காசி, ஆலங்குளம், சுரண்டை, அம்பை, பாவூர்சத்திரம் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து ஏராளமான பூ வியாபாரிகள் வந்து தங்கள் தேவைக்கேற்ப பூக்களை கொள்முதல் செய்வர். இதனால் எப்பொழுதும் சிவகாமிபுரம் பூ மார்க்கெட் களைகட்டியே காணப்படும்.

மல்லிகைப்பூ விலையேற்றம்

நேற்று சிவகாமிபுரம் பூ மார்க்கெட்டில் நடந்த ஏலத்தில் மல்லிகைப்பூ கிலோவுக்கு ரூ.7 ஆயிரம் வரை ஏலம் போனது. இதேபோல் பிச்சி பூ கிலோவுக்கு ரூ.2 ஆயிரம், கனகாம்பரம் ரூ.1000, கேந்தி ரூ.20, காக்கட்டான் ரூ.800, முல்லை ரூ.400, கொழுந்து ரூ.60, கேந்தி ரூ.30, துளசி ரூ.100, ரோஜா 100 எண்ணம் ரூ.120 வரை ஏலம் போனது. மல்லிகை பூ விலையேற்றம் பாவூர்சத்திரம் பகுதி விவசாயிகளிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இருப்பினும் பனிப்பொழிவு காரணமாக கடந்த ஆண்டுகளை காட்டிலும் இந்த ஆண்டு மகசூல் குறைந்ததாக தெரிவித்தனர்.

இதுகுறித்து பூ வியாபாரிகள் கூறுகையில், வழக்கமாக 100 கிலோ வரை வரத்து இருக்கும். மல்லிகை பூ சில நாட்களாக 40 கிலோ வரை மட்டுமே வந்துள்ளது. நாளை (அதாவது இன்று) முகூர்த்த நாள் என்பதாலும், வரத்து குறைந்த காரணத்தினாலும் நேற்று (அதாவது நேற்றுமுன்தினம்) கிலோவுக்கு ரூ.3 ஆயிரம் முதல் ரூ.4 ஆயிரம் வரையும் ஏலம் போனது. இன்று (அதாவது நேற்று) ரூ.7 ஆயிரம் வரை ஏலம் போனது. இவ்வாறு அவர்கள் கூறினர்.

Next Story