டெம்போவில் கடத்தி வரப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல் 2 பேர் கைது


டெம்போவில் கடத்தி வரப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல் 2 பேர் கைது
x
தினத்தந்தி 28 Jan 2018 4:45 AM IST (Updated: 28 Jan 2018 12:23 AM IST)
t-max-icont-min-icon

குன்றத்தூரில் மினி டெம்போவில் கடத்தி வரப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது.

பூந்தமல்லி,

குன்றத்தூரில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் அதிக அளவில் பதுக்கி விற்கப்படுவதாக வந்த தகவலையடுத்து போரூர் உதவி கமிஷனர் கண்ணன், இன்ஸ்பெக்டர் சார்லஸ் ஆகியோர் தலைமையில் தனிப்படைகள் அமைத்து தீவிரமாக கண்காணித்து வந்தனர். இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு போலீசார் வண்டலூர்- மீஞ்சூர் வெளிவட்ட சாலை, குன்றத்தூரில் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

அப்போது அந்த வழியாக சந்தேகத்திற்கு இடமாக வந்த மினி டெம்போவை மடக்கி சோதனை செய்தபோது அதில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் எடுத்து செல்வது தெரியவந்தது. இதையடுத்து அந்த மினி டெம்போ மற்றும் அதனை ஓட்டி வந்த இருவரையும் பிடித்து போலீஸ் நிலையம் அழைத்து வந்து விசாரணை மேற்கொண்டனர்.

இதில் பிடிபட்டவர்கள் சேலம், திருக்காவனூரை சேர்ந்த சதீஷ்குமார் (வயது 27), பூபதி (23) என்பது தெரியவந்தது. இவர்கள் இருவரும் பெங்களூருவில் இருந்து தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை மினி டெம்போவில் ஏற்றி கொண்டு தாம்பரத்திற்கு சென்று கொண்டிருந்தனர். அந்த பகுதியில் உள்ளவர்களுக்கு செல்போனில் தொடர்பு கொண்டால் அந்த நபர்கள் வேறு வாகனத்தை எடுத்து வந்து இந்த புகையிலை அவர்களது வாகனத்தில் ஏற்றிச்சென்று விடுவார்கள் என்பது தெரியவந்தது. தற்போது 1 டன் புகையிலை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

அதன் மதிப்பு ரூ.4 லட்சம் என்று போலீசார் தெரிவித்தனர். மேலும் இந்த புகையிலை பொருட்களை ஏற்றி அனுப்பியது யார்? அதை வாங்க முயன்றது யார்? என்பது குறித்து குன்றத்தூர் போலீசார் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story