அரசு டாக்டரின் கார் மீது 3 முறை மோதிய மாநகர பஸ்


அரசு டாக்டரின் கார் மீது 3 முறை மோதிய மாநகர பஸ்
x
தினத்தந்தி 28 Jan 2018 5:15 AM IST (Updated: 28 Jan 2018 12:30 AM IST)
t-max-icont-min-icon

அம்பத்தூர் பாடியில், அரசு மருத்துவமனை டாக்டரின் கார் மீது மாநகர பஸ் 3 முறை மோதியதால் கார் அப்பளம் போல் நொறுங்கியது. இதில் காயம் ஏதுமின்றி டாக்டர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார்.

அம்பத்தூர்,

சென்னை அம்பத்தூரை அடுத்துள்ள அயப்பாக்கம் பகுதியை சேர்ந்தவர் தமிழ்செல்வம்(வயது 55). டாக்டரான இவர், சென்னை ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனையின் பதிவாளராகவும், தசைவலி நீக்கு துறை தலைவராகவும் பணிபுரிந்து வருகிறார்.

நேற்று காலை டாக்டர் தமிழ்செல்வம், தனது காரில் மருத்துவமனைக்கு புறப்பட்டு சென்றார். அம்பத்தூர் பாடி மேம்பாலத்தில் சென்றபோது, அவரது காரை உரசுவது போல் வந்த மாநகர பஸ்(தடம் எண் 40) திடீரென காரின் பக்கவாட்டில் மோதி விட்டு நிற்காமல் சென்றது. இதில் காரின் பக்கவாட்டு பகுதியில் பலத்த சேதம் அடைந்தது.

இதனால் அதிர்ச்சி அடைந்த டாக்டர் தமிழ்செல்வம், மாநகர பஸ்சை முந்திச்சென்று காரை வழிமறித்து நிறுத்தினார். அப்போதும் பஸ்சை நிறுத்தாத டிரைவர், மீண்டும் டாக்டரின் கார் மீது மோதினார். இதில் காரின் முன்பக்க கண்ணாடி நொறுங்கியது.

இதை பார்த்த பஸ்சில் இருந்த பயணிகளும், சாலையில் சென்றவர்களும் பஸ்சை நிறுத்துமாறு கூச்சலிட்டனர். ஆனாலும் டிரைவர் பஸ்சை பின்புறமாக எடுத்து, மீண்டும் ஒட்டிச்சென்ற போது, 3-வது முறையாக காரின் பக்கவாட்டு பகுதியில் மோதியது. இதில் டாக்டரின் கார் அப்பளம் போல் நொறுங்கியது.

பொதுமக்கள் மற்றும் பஸ் பயணிகள் தொடர்ந்து கூச்சலிட்டதால் பஸ்சை நிறுத்திய டிரைவர், கீழே இறங்க மறுத்து விட்டார். காரின் பக்கவாட்டு பகுதி நொறுங்கியதால், டிரைவர் இருக்கையில் அமர்ந்து இருந்த டாக்டர் தமிழ்செல்வம் வெளியே வரமுடியாமல் இடிபாடுகளில் சிக்கித்தவித்தார்.

உடனடியாக அங்கிருந்த பொதுமக்கள், காரின் கதவை கடப்பாரையால் உடைத்து திறந்து காருக்குள் இடிபாடுகளில் சிக்கித்தவித்த டாக்டரை பத்திரமாக மீட்டனர். அதிர்ஷ்டவசமாக டாக்டர் தமிழ்செல்வம் காயம் ஏதுமின்றி உயிர் தப்பினார். காரின் முன்பகுதியில் வைத்து இருந்த அவரது 2 செல்போன்கள் மட்டும் நொறுங்கியது.

இதுபற்றி தகவல் அறிந்து வந்த வில்லிவாக்கம் போக்குவரத்து பிரிவு போலீசார், விபத்து ஏற்படுத்திய மாநகர பஸ் டிரைவரான ஆவடி தனலட்சுமி நகரைச்சேர்ந்த காளிதாசன்(34) என்பவரை கைது செய்து, வில்லிவாக்கம் போலீஸ் நிலையம் அழைத்துச்சென்று விசாரித்து வருகின்றனர்.

இந்த விபத்து குறித்து டாக்டர் தமிழ்செல்வம் கூறும்போது, “விபத்து ஏற்படுத்திய டிரைவர், குடிபோதையில் இருப்பதாக சந்தேகப்படுகிறேன். அவரை உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று பரிசோதனை செய்ய வேண்டும்” என போலீசாரிடம் கேட்டுக்கொண்டார்.

இதனால் அந்த பகுதியில் 20 நிமிடங்கள் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Next Story