சுவர் விளம்பரம் எழுதியதில் பிரச்சினை போலீசாருடன் டி.டி.வி.தினகரன் ஆதரவாளர்கள் வாக்குவாதம்


சுவர் விளம்பரம் எழுதியதில் பிரச்சினை போலீசாருடன் டி.டி.வி.தினகரன் ஆதரவாளர்கள் வாக்குவாதம்
x
தினத்தந்தி 28 Jan 2018 4:30 AM IST (Updated: 28 Jan 2018 2:12 AM IST)
t-max-icont-min-icon

கரூரில் சுவர் விளம்பரம் எழுதியதில் ஏற்பட்ட பிரச்சினை காரணமாக போலீசாருடன் டி.டி.வி. தினகரன் ஆதரவாளர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதைத்தொடர்ந்து போலீசாரை கண்டித்து போராட்டம் நடத்திய முன்னாள் அமைச்சர் செந்தில்பாலாஜி உள்பட 60 பேரை போலீசார் கைது செய்தனர்.

கரூர்,

டி.டி.வி.தினகரன் அணி சார்பில் கரூரில் திருவள்ளுவர் மைதானத்தில் எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழா நடத்த நகராட்சி நிர்வாகத்திடம் முன்னாள் அமைச்சர் செந்தில்பாலாஜி அனுமதி கேட்டிருந்தார். ஆனால் நகராட்சி நிர்வாகம் அனுமதி வழங்காததால் மதுரை ஐகோர்ட்டில் அவர் வழக்கு தொடர்ந்தார். இதில் ஜனவரி 27-ந் தேதி முதல் 29-ந் தேதி வரை எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழா கொண்டாட அனுமதி வழங்க வேண்டும் என நகராட்சி நிர்வாகத்திற்கு மதுரை ஐகோர்ட்டு உத்தரவிட்டது.

இதையடுத்து 29-ந்தேதி பொதுக்கூட்டம் நடைபெறும் என ஓரிரு தினங்களுக்கு முன்பு செந்தில்பாலாஜி தெரிவித்திருந்தார்.

பொதுக்கூட்டத்தை யொட்டி சுவர் விளம்பரம் எழுதும் பணியில் செந்தில்பாலாஜி தரப்பினர் ஈடுபட்டனர்.

கரூர் வெங்கமேடு ரெயில்வே மேம்பாலத்தில் 2 சுவர்களில் கடந்த 24-ந்தேதி விளம்பரம் எழுதி கொண்டிருந்தனர். அப்போது சுவர் விளம்பரம் எழுத போலீசார் அனுமதி வழங்கவில்லை. இதனால் போலீசாருடன் டி.டி.வி. தினகரன் ஆதரவாளர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

பொதுக்கூட்டத்திற்கு அனுமதி இல்லாததால் சுவர் விளம்பரம் எழுத கூடாது எனவும், மேலும் நெடுஞ்சாலை துறை அனுமதி பெற்ற பிறகு தான் சுவர் விளம்பரம் எழுத வேண்டும் எனவும் போலீசார் கூறினர். இதையடுத்து டி.டி.வி. தினகரன் ஆதரவாளர்கள் அனைவரும் கலைந்து சென்றனர்.

இந்நிலையில் வெங்கமேடு ரெயில்வே மேம்பாலத்தில் அதே சுவரில் விளம்பரம் எழுதும் பணியில் பெயிண்டர்கள் நேற்று மதியம் ஈடுபட்டிருந்தனர். அப்போது அங்கு வந்த டவுன் போலீஸ் இன்ஸ்பெக்டர் பிருத்விராஜ் மற்றும் போலீசார் பெயிண்டரான சேலம் அம்மாபேட்டையை சேர்ந்த கொளஞ்சி யுவராஜை (வயது28) தாக்கியதாக கூறப்படுகிறது. மேலும் சுவரில் விளம்பரம் எழுதும் பணியில் ஈடுபடக்கூடாது என போலீசார் எச்சரித்துள்ளனர்.

பெயிண்டர் தாக்கப்பட்ட சம்பவம் குறித்து தகவல் அறிந்ததும் முன்னாள் அமைச்சர் செந்தில்பாலாஜி மற்றும் அவரது ஆதரவாளர்கள் கரூர் வெங்கமேடு ரெயில்வே மேம்பாலத்திற்கு திரண்டு வந்தனர். மேலும் பெயிண்டரை தாக்கிய போலீசாரை கண்டித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இதுகுறித்து தகவல் அறிந்ததும் டவுன் துணை போலீஸ் சூப்பிரண்டு கும்மராஜா, இன்ஸ்பெக்டர் பிருத்விராஜ் மற்றும் போலீசார் விரைந்து வந்தனர்.

அப்போது சுவர் விளம்பரம் எழுத அனுமதி கிடையாது எனவும், அதற்கு நெடுஞ்சாலை துறையினரிடம் அனுமதி பெற்று வரவும் எனவும் இன்ஸ்பெக்டர் பிருத்விராஜ், செந்தில்பாலாஜியிடம் தெரிவித்தார். இதையடுத்து போலீசாருடன் செந்தில்பாலாஜி மற்றும் ஆதரவாளர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அப்போது சுவர் விளம்பரம் எழுதப்படும் எனவும், யாரிடமும் அனுமதி பெற தேவையில்லை எனவும் கூறி அவர்கள் கலைந்து செல்ல மறுத்தனர்.

இதனிடையே செந்தில்பாலாஜி நிருபர்களுக்கு பேட்டியளித்த போது கூறியதாவது:-

கரூர் பஸ் நிலையம் அருகே பொங்கல் விளையாட்டு விழாவுக்காக வைக்கப்பட்ட பதாகைகள் இன்னும் இருந்து கொண்டு தான் இருக்கிறது. அதனை அகற்ற போலீசாருக்கு தைரியம் உள்ளதா?. மாவட்டத்தில் பிற இடங்களில் அ.தி.மு.க.வினர் எழுதி உள்ள சுவர் விளம்பரங்களை அழிக்க வேண்டும். ஆட்சி அதிகாரத்தில் உள்ள ஒரு சிலர் தூண்டுதலின் பேரில் சுவர் விளம்பரம் எழுதவிடாமல் போலீசார் தடுக்கின்றனர். தொடர்ந்து சுவர் விளம்பரம் எழுதப்படும்.

பெயிண்டரை தாக்கிய போலீசார் மீது கோர்ட்டில் வழக்கு தொடரப்படும். கோர்ட்டு மூலம் நடவடிக்கை எடுக்கப்படும். எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழா நடத்த அனுமதிக்காத நகராட்சி ஆணையர் மீது கோர்ட்டு அவமதிப்பு வழக்கு மதுரை ஐகோர்ட்டில் தொடரப்பட்டுள்ளது. வருகிற 31-ந்தேதி நகராட்சி ஆணையர் நேரில் ஆஜராக கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது. நீதிமன்றம் மூலம் பொதுக்கூட்டம் நடத்த அனுமதி பெறப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

அப்போது செந்தில்பாலாஜியுடன் திரண்டு இருந்தவர்கள் டி.டி.வி. தினகரனுக்கு ஆதரவாக கோஷமிட்டனர். மேலும் முதல்-அமைச்சரை கண்டித்தும் கோஷமிட்டனர்.

இந்நிலையில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டதால் செந்தில்பாலாஜியிடம் மீண்டும் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தி கலைந்து செல்ல கூறினர். ஆனால் அவர் கலைந்து செல்ல மறுத்தார். இதனால் அனைவரையும் கைது செய்யப்போவதாக போலீசார் கூறினர். இதையடுத்து போலீஸ் வேன் வரவழைக்கப்பட்டது.

செந்தில்பாலாஜி மற்றும் ஆதரவாளர்களை போலீசார் கைது செய்து வேனில் ஏற்றினர். மொத்தம் 60 பேர் கைது செய்யப்பட்டனர். கைதானவர்கள் தாந்தோன்றிமலையில் உள்ள ஒரு திருமண மண்டபத்தில் தங்க வைக்கப்பட்டனர்.

இதற்கிடையில் செந்தில்பாலாஜி போராட்டம் நடத்துவது குறித்து தகவல் அறிந்ததும் அ.தி.மு.க. நகர செயலாளர் நெடுஞ்செழியன் தலைமையில் கீதா எம்.எல்.ஏ.வின் கணவர் மணிவண்ணன், மாணவர் அணி முன்னாள் மாவட்ட செயலாளர் தானேஷ் மற்றும் நிர்வாகிகளும், போக்குவரத்து துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கரின் ஆதரவாளர்களும் திரண்டு வந்தனர்.

இந்த சம்பவத்தால் வெங்கமேடு ரெயில்வே மேம்பாலத்தில் நேற்று மதியம் 2 மணி முதல் மாலை 3.15 மணி வரை போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. சாலையின் இருபுறமும் வாகனங்கள் அணிவகுத்து நின்றன. வாகன ஓட்டுனர்கள் கடும் அவதி அடைந்தனர். போலீசார் குவிக்கப்பட்ட பின் போக்குவரத்து ஒழுங்குபடுத்தப்பட்டன. அந்த பகுதியில் திரண்டிருந்தவர்களை போலீசார் கலைந்து போக செய்தனர். இந்த சம்பவத்தால் கரூரில் நேற்று பெரும் பரபரப்பு ஏற்பட்டது. கைது செய்யப்பட்ட அனைவரும் மாலையில் விடுவிக்கப்பட்டனர். 

Next Story