ரூ.15 லட்சம் செலவில் பால் உற்பத்தியாளர்கள் பயிற்சி அரங்க கட்டிடம் அமைச்சர்கள் திறந்து வைத்தனர்


ரூ.15 லட்சம் செலவில் பால் உற்பத்தியாளர்கள் பயிற்சி அரங்க கட்டிடம் அமைச்சர்கள் திறந்து வைத்தனர்
x
தினத்தந்தி 28 Jan 2018 4:30 AM IST (Updated: 28 Jan 2018 3:10 AM IST)
t-max-icont-min-icon

ராசிபுரம் அருகே ரூ.15 லட்சம் செலவில் கட்டப்பட்ட பால் உற்பத்தியாளர்கள் பயிற்சி அரங்க கட்டிடத்தை அமைச்சர்கள் பி.தங்கமணி, டாக்டர் சரோஜா ஆகியோர் திறந்து வைத்தனர்.

ராசிபுரம்,

ராசிபுரம் ஒன்றியம், குருக்கபுரம் கிராமம், சக்தி நகர் அருகில் ராசிபுரம் சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியின் கீழ் ரூ.15 லட்சம் செலவில் புதிதாக பால் உற்பத்தியாளர் பயிற்சி அரங்க கட்டிடம் கட்டப்பட்டுள்ளது. இதற்கான நிதியை ராசிபுரம் சட்டமன்ற தொகுதி உறுப்பினரான அமைச்சர் சரோஜா ஒதுக்கி இருந்தார். புதிதாக கட்டப்பட்ட பால் உற்பத்தியாளர் பயிற்சி அரங்க புதிய கட்டித் திறப்பு விழா நடந்தது.

விழாவிற்கு நாமக்கல் மாவட்ட கலெக்டர் மு.ஆசியா மரியம் தலைமை தாங்கினார். சேலம்-நாமக்கல் மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் ஒன்றியத்தின் பொது மேலாளர் டாக்டர் எஸ்.சாந்தா வரவேற்றார். பி.ஆர்.சுந்தரம் எம்.பி, ஆவின் தலைவர் ஆர்.சின்னுசாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர். விழாவில் சிறப்பு விருந்தினர்களாக அமைச்சர்கள் பி.தங்கமணி, டாக்டர் வெ.சரோஜா ஆகியோர் கலந்து கொண்டு அதற்கான கல்வெட்டை திறந்து வைத்தனர்.

விழாவில் அமைச்சர் பி.தங்கமணி பேசும்போது, பால் உற்பத்தியாளர்களுக்காக இந்த கட்டிடத்தின் மேல் தளத்தில் கூடுதலாக பயிற்சி அரங்கம் கட்ட நிதி ஒதுக்கீடு செய்து தரும்படி இங்கு கேட்கப்பட்டது. இந்த கூடுதல் கட்டிடம் கட்டித் தர நானும், அமைச்சர் சரோஜாவும் முதல் அமைச்சர் எடப்பாடி பழனிசாமியிடம் நிதி ஒதுக்கித் தரும்படி கோரிக்கை வைப்போம். அமைச்சர் சரோஜாவும், பி.ஆர்.சுந்தரம் எம்.பி.யும் முறையே ரூ.5 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்தால் இங்கு புதிய கட்டிடத்தை கட்டிவிடலாம். அதற்கு நிதி ஒதுக்குவார்கள் என்று நான் நம்புகிறேன் என்றார்.

விழாவில் அமைச்சர் சரோஜா பேசும்போது சேலம்-நாமக்கல் மாவட்டங்களில் நாமக்கல், ஆத்தூர், வேலூர் ஆகிய 3 பால் குளிரூட்டும் நிலையங்கள் மற்றும் 45 தொகுப்பு பால் குளிரூட்டும் நிலையங்கள் மூலம் 1154 சங்கங்களில் இருந்து நாள் ஒன்றுக்கு 5 லட்சத்து 37 ஆயிரத்து 938 லிட்டர் பால் கொள்முதல் செய்யப்பட்டு வருகிறது என்றார். இதில் ராசிபுரம் நகர அ.தி.மு.க. செயலாளர் பாலசுப்பிரமணியன், ஒன்றிய செயலாளர்கள் காளியப்பன் (ராசிபுரம்), வக்கீல் தாமோதரன் (வெண்ணந்தூர்), இ.கே.பொன்னுசாமி (நாமகிரிபேட்டை கிழக்கு), எல்.எஸ்.மணி (நாமகிரிபேட்டை மேற்கு), மசக்காளிப்பட்டி கூட்டுறவு சங்கத் தலைவர் பிரகாசம், ராசிபுரம் தாலுகா கிராம கூட்டுறவு வீட்டு வசதி சங்கத் தலைவர் ராஜா, ராசிபுரம் பால் சேகரிப்பு குழு உதவி பொது மேலாளர் டாக்டர் காமராஜ், மேலாளர் டாக்டர் திருமுருகன் உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் ஆவின் துணை பொது மேலாளர் ரமேஷ் நன்றி கூறினார். 

Next Story