ஜப்பான் வல்லுனர்கள் நாராயணசாமியுடன் சந்திப்பு


ஜப்பான் வல்லுனர்கள் நாராயணசாமியுடன் சந்திப்பு
x
தினத்தந்தி 28 Jan 2018 3:23 AM IST (Updated: 28 Jan 2018 3:23 AM IST)
t-max-icont-min-icon

ஜப்பான் தொழில்நுட்ப வல்லுனர்கள் முதல்-அமைச்சர் நாராயணசாமியை சந்தித்து பேசினார்கள். நவீன தொழில்நுட்பங்கள் குறித்து விளக்கம்

புதுச்சேரி,

ஜப்பான் நாட்டை சேர்ந்த தொழில்நுட்ப வல்லுனர்கள் ஹிரோகானே தலைமையில் புதுவை வந்து இருந்தனர். சட்டமன்ற அலுவலகத்தில் நேற்று முதல்-அமைச்சர் நாராயணசாமியை அவர்கள் சந்தித்து பேசினார்கள். அப்போது அமைச்சர்கள் மல்லாடிகிருஷ்ணாராவ், கமலக்கண்ணன், அரசு செயலாளர் அன்பரசு, மீன்வளத்துறை இயக்குனர் வின்சென்ட்ராயர், தேசிய மீனவர் பேரவை தலைவர் இளங்கோ மற்றும் அதிகாரிகள் உடனிருந்தார்.

அப்போது மீன்களை பாதுகாப்பாக வைத்திருப்பதற்கு ஐஸ் தயாரிப்பது, உணவுக்கூடத்துடன் நவீன மீன் மார்க்கெட் அமைப்பது குறித்து விளக்கம் அளித்தனர். அதைத்தொடர்ந்து ஜப்பான் குழுவினர் புதுவை பெரிய மார்க்கெட்டில் செயல்படும் மீன் மார்க்கெட், கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள நவீன மீன்அங்காடி, தேங்காய்த்திட்டு மீன்பிடி துறைமுகம் ஆகியவற்றை பார்வையிட்டனர்.

இதுகுறித்து முன்னாள் எம்.எல்.ஏ. இளங்கோ கூறியதாவது:-

மீன்பிடி தொழிலுக்கு முக்கிய தேவையாக ஐஸ் உள்ளது. மீன்களை பலமணி நேரம் கெடாமல் பாதுகாக்க ஐஸ் அத்தியாவசியமானதாகும். தற்போது ஐஸ் தயாரிக்கும் மையங்கள் நிலையான பெரிய இடத்தில்தான் உள்ளன. நல்லநீரும், அதிக மின்சாரமும் தேவைப்படுவதால் ஐஸ் தயாரிப்பதற்கு அதிக செலவாகிறது.

இதனை தவிர்க்கும் விதமாக ஜப்பானை சேர்ந்த தொழில் வல்லுனர்கள் உப்புநீரிலேயே குறைந்த மின்சாரத்தில் ஐஸ் தயாரிக்கும் தொழில்நுட்பத்துடன் கூடிய எந்திரத்தை கண்டுபிடித்துள்ளனர். இந்த எந்திரம் மூலம் கடல்நீரில் ஐஸ் தயாரிக்கலாம்.

இந்த திட்டம் குறித்து அவர்கள் முதல்-அமைச்சர், அமைச்சரிடம் விளக்கினார்கள். உணவுக்கூடத்துடன் கூடிய நவீன மீன் மார்க்கெட் அமைப்பது குறித்தும் விளக்கம் அளித்தனர். இந்த தொழில்நுட்பங்களை புதுச்சேரியிலும் பயன்படுத்த நடவடிக்கை எடுப்பதாக முதல்-அமைச்சர் உறுதி அளித்துள்ளார்.

அடுத்தகட்டமாக இன்று (ஞாயிற்றுக்கிழமை) தமிழக மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமாரை சந்தித்து பேச உள்ளோம். நாளை (திங்கட்கிழமை) மத்திய உணவு பதப்படுத்துதல் துறை இணை மந்திரி சாத்வி நிரஞ்சன் ஜோதியை சந்திக்க உள்ளோம். வருகிற 31-ந்தேதி கோவா மாநில முதல் மந்திரி மனோகர் பாரிக்கரை சந்தித்து விளக்கம் அளிக்கிறோம். இவ்வாறு இளங்கோ கூறினார்.

Next Story