மாநில அளவிலான துப்பாக்கி சுடும் போட்டி கலெக்டர் தொடங்கி வைத்தார்


மாநில அளவிலான துப்பாக்கி சுடும் போட்டி கலெக்டர் தொடங்கி வைத்தார்
x
தினத்தந்தி 28 Jan 2018 4:02 AM IST (Updated: 28 Jan 2018 4:02 AM IST)
t-max-icont-min-icon

புதுவை மாநில அளவிலான துப்பாக்கி சுடும் போட்டியை கலெக்டர் சத்யேந்திரசிங் துர்சாவத் தொடங்கிவைத்தார்.

புதுச்சேரி,

புதுவை துப்பாக்கி சுடும் சங்கம் சார்பில் மாநில அளவிலான துப்பாக்கி சுடும் போட்டிகள் 2-வது ஆண்டாக ரெட்டியார்பாளையம் அஜீஸ்நகரில் உள்ள வஜ்ரா அகாடமியில் 2 நாட்கள் நடக்கிறது. இதன் தொடக்க விழா நேற்று நடந்தது.

விழாவுக்கு புதுவை துப்பாக்கி சுடும் சங்கத்தின் தலைமை காப்பாளரான முதல்-அமைச்சரின் பாராளுமன்ற செயலாளர் லட்சுமி நாராயணன் எம்.எல்.ஏ. தலைமை தாங்கினார். செயலாளர் ரவீந்திரன் வரவேற்றுப் பேசினார்.

போட்டிகளை புதுவை கலெக்டர் சத்தியேந்திரசிங் துர்சாவத் தொடங்கி வைத்தார். அவர் பேசும்போது, இந்தியாவை பொறுத்தவரை பெரும்பாலானவர்கள் கிரிக்கெட்டில் மட்டுமே ஆர்வமாக உள்ள நிலையில் துப்பாக்கி சுடுவதிலும் ஆர்வமாக உள்ள மாணவர்களை பாராட்டுவதாக தெரிவித்தார்.

லட்சுமிநாராயணன் எம்.எல்.ஏ.விடம், உப்பளம் இந்திராகாந்தி விளையாட்டு மைதானத்தில் துப்பாக்கி சுடும் பயிற்சிக்கும் இடம் ஒதுக்கி தர அரசை வலியுறுத்த வேண்டும் என்று துப்பாக்கி சுடும் சங்கத்தினர் வலியுறுத்தினார்கள்.

போட்டிகளில் 36 பேர் கலந்துகொண்டனர். ரைபிள், பிஸ்டல், புரோன் 50 மீட்டர் என 3 பிரிவுகளில் போட்டிகள் நடக்கின்றன.

9 வயது முதல் 18 வயது வரையிலானவர்கள் ஒரு பிரிவாகவும், 19 வயது முதல் 55 வயது வரை உள்ளவர்கள் மற்றொரு பிரிவாகவும், 55 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு தனியாகவும் போட்டிகள் நடக்கின்றன. இந்த போட்டிகள் இன்றும் (ஞாயிற்றுக்கிழமை) நடக்கிறது.

போட்டிகளில் வெற்றிபெற்றவர்களுக்கு அடுத்த மாதம் (பிப்ரவரி) நடக்கும் விழாவில் பரிசளிக்கப்பட உள்ளது.


Next Story