பஸ் கட்டண உயர்வை திரும்ப பெறக்கோரி திருப்பூரில் தி.மு.க. கூட்டணி கட்சிகள் சார்பில் ஆர்ப்பாட்டம்


பஸ் கட்டண உயர்வை திரும்ப பெறக்கோரி திருப்பூரில் தி.மு.க. கூட்டணி கட்சிகள் சார்பில் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 28 Jan 2018 5:28 AM IST (Updated: 28 Jan 2018 5:28 AM IST)
t-max-icont-min-icon

பஸ் கட்டண உயர்வை திரும்ப பெறக்கோரி திருப்பூரில் தி.மு.க. கூட்டணி கட்சிகள் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.

திருப்பூர்,

தமிழகம் முழுவதும் பஸ் கட்டணத்தை அரசு திடீரென உயர்த்தி அறிவிப்பு வெளியிட்டது. இதற்கு பல்வேறு அமைப்புகள், கட்சிகள், பொதுமக்கள், மாணவர்கள் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இதே கோரிக்கையை வலியுறுத்தி தி.மு.க. மற்றும் கூட்டணி கட்சிகள் சார்பில் தமிழகம் முழுவதும் நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது. அந்த வகையில் திருப்பூர் குமரன் சிலை அருகில் தி.மு.க.மற்றும் கூட்டணி கட்சியினர் நேற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டத்துக்கு ம.தி.மு.க.வின் மாநில அவைத்தலைவர் துரைசாமி தலைமை தாங்கினார்.

தி.மு.க.வின் திருப்பூர் வடக்கு மாவட்ட செயலாளர் செல்வராஜ் முன்னிலை வகித்தார். தொ.மு.ச. மாநில துணை செயலாளர் டி.கே.டி.மு.நாகராஜன், துணை தலைவர் கோவிந்தசாமி, தி.மு.க. மாநகர பொறுப்பாளர் மேங்கோ பழனிசாமி, மாவட்ட அவைத்தலைவர் திருமூர்த்தி, காங்கிரஸ் மாநகர் மாவட்ட தலைவர் கிருஷ்ணன், இந்திய கம்யூனிஸ்டு கட்சி மாவட்ட செயலாளர் ரவி, உழவர் உழைப்பாளர் கட்சி தலைவர் செல்லமுத்து, ம.தி.மு.க. மாநகர செயலாளர் சிவபாலன், கொ.ம.தே.க. நிர்வாகி ரோபோ ரவிசந்திரன் உள்ளிட்ட கட்சிகளை சேர்ந்தவர்கள் கலந்து கொண்டு கோரிக்கைகள் குறித்து பேசினார்கள்.

ஆர்ப்பாட்டத்தில், பஸ் கட்டணம் திடீரென உயர்த்தப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்தும், உடனடியாக இந்த உத்தரவை திரும்ப பெறக்கோரியும், பொதுமக்களுக்கு எதிரான நடவடிக்கையில் தொடர்ந்து ஈடுபட்டு வரும் மத்திய, மாநில அரசுகளுக்கு எதிர்ப்பு தெரிவித்தும் கோஷங்கள் எழுப்பப்பட்டன.

இதில், தி.மு.க., காங்கிரஸ், ம.தி.மு.க., இந்திய கம்யூனிஸ்டு, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு, விடுதலை சிறுத்தைகள் கட்சி, மனிதநேய மக்கள் கட்சி, இந்திய யூனியன் முஸ்லிம் லீக், திராவிடர் கழகம், மூவேந்தர் முன்னணி கழகம், பெருந்தலைவர் மக்கள் கட்சி, ஆதித்தமிழர் பேரவை, ஆம் ஆத்மி கட்சி உள்ளிட்டவற்றின் நிர்வாகிகள் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டு தங்கள் எதிர்ப்பை தெரிவித்தனர். 

Next Story