பெருந்துறையில் 2 வீடுகள் தீப்பிடித்து எரிந்தது; கணவன்- மனைவி உடல் கருகி சாவு


பெருந்துறையில் 2 வீடுகள் தீப்பிடித்து எரிந்தது; கணவன்- மனைவி உடல் கருகி சாவு
x
தினத்தந்தி 28 Jan 2018 5:39 AM IST (Updated: 28 Jan 2018 5:39 AM IST)
t-max-icont-min-icon

பெருந்துறையில் நள்ளிரவில் 2 வீடுகள் தீப்பிடித்து எரிந்தது. இதில் கணவனும், மனைவியும் உடல் கருகி பரிதாபமாக இறந்தனர்.

பெருந்துறை,

மேற்கு வங்காளம் பிங்கர் காங் மாவட்டம் ஷாம் நகரை சேர்ந்தவர் வர்ஷினமேன்டோல் (வயது 46). அவருடைய மனைவி மமிதா (40). இவர்கள் ஈரோடு மாவட்டம் பெருந்துறை பணிக்கம்பாளையம் பகுதியில் வாடகைக்கு வீடு எடுத்து தங்கியிருந்தார்கள். இருவரும் அந்த பகுதியில் உள்ள தனியார் ஆயத்த ஆடை நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தார்கள். நேற்று முன்தினம் இரவு சாப்பிட்டு விட்டு 2 பேரும் வீட்டில் தூங்கி கொண்டிருந்தார்கள்.

இந்தநிலையில் நள்ளிரவு 1 மணி அளவில் இவர்கள் தங்கியிருந்த குடிசை வீடு தீப்பிடித்தது. ஓலையால் கூரை வேயப்பட்டு இருந்ததால் தீ மளமளவென பரவி அருகே உள்ள புல்புல்மெண்டேல் (56) என்பவரது குடிசை வீட்டுக்கும் பரவியது. இதை பார்த்த அக்கம் பக்கத்தினர் ஓடிவந்தார்கள்.

உடனே இதுகுறித்து பெருந்துறை தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் கொடுக்கப்பட்டது. ஆனால் 2 வீடுகளிலும் இருந்த வர்ஷினமேன்டோலும், அவருடைய மனைவி மமிதா மற்றும் புல்புல்மெண்டேல், அவருடைய மனைவி பாருதி 4 பேரும் வெளியே ஓடி வரமுடியாமல் உள்ளே சிக்கிக்கொண்டார்கள்.

அதைத்தொடர்ந்து தீயணைப்பு வீரர்கள் அங்கு விரைந்து சென்று தண்ணீரை பீய்ச்சியடித்து தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டர்கள். சுமார் ½ மணி நேர போராட்டத்துக்கு பிறகு தீ முழுமையாக அணைக்கப்பட்டது. எனினும் இந்த தீ விபத்தில் 2 வீடுகளும் எரிந்து சாம்பல் ஆனது.

தீயில் சிக்கிய வர்ஷினமேன்டோல் அவருடைய மனைவி மமிதா ஆகியோர் பிணமாக மீட்கப்பட்டார்கள். அவர்களுடைய உடல்கள் தீயில் எரிந்து கரிக்கட்டையாக காணப்பட்டது. புல்புல்மெண்டேல், அவருடைய மனைவி பாருதி (50) இருவரும் தீக்காயங்களுடன் மீட்கப்பட்டார்கள்.

இதுபற்றிய தகவல் கிடைத்ததும் பெருந்துறை போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று இறந்த 2 பேரின் உடல்களையும் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பெருந்துறை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தார்கள். தீக்காயம் அடைந்த புல்புல்மெண்டேலும், பாருதியும் ஈரோடு அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளார்கள். அங்கு அவர்களுக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகிறார்கள். தீ விபத்தில் கணவன்-மனைவி இறந்த சம்பவம் அந்த பகுதியில் உள்ளவர்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

இந்த தீ விபத்து குறித்து தீயணைப்பு வீரர்கள் கூறும்போது, மின்கசிவினால் இந்த தீ விபத்து ஏற்பட்டிருக்கலாம்’ என்று தெரிவித்தார்கள். 

Next Story