தென்மாவட்டங்களில் பனை மரத்தில் நீராபானம் இறக்க அனுமதிக்க வேண்டும், எர்ணாவூர் நாராயணன் பேட்டி


தென்மாவட்டங்களில் பனை மரத்தில் நீராபானம் இறக்க அனுமதிக்க வேண்டும், எர்ணாவூர் நாராயணன் பேட்டி
x
தினத்தந்தி 28 Jan 2018 5:40 AM IST (Updated: 28 Jan 2018 5:40 AM IST)
t-max-icont-min-icon

தென்மாவட்டங்களில் பனைமரத்தில் இருந்து நீராபானம் இறக்க அனுமதிக்க வேண்டும் என்று சமத்துவ மக்கள் கழகத்தின் தலைவர் எர்ணாவூர் நாராயணன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

ராமநாதபுரம்,

ராமநாதபுரத்தில் சமத்துவ மக்கள் கழகத்தின் தலைவரும் எர்ணாவூர் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் நாராயணன் நிருபர்களிடம் கூறியதாவது:- தமிழக அரசு பஸ் கட்டணத்தை உயர்த்தியது கண்டிக்கதக்கது. ஏழை மக்களுக்கு இன்றியமையாத போக்குவரத்திற்கு அரசு பஸ்களே உள்ளன. பஸ் கட்டணத்தை கடுமையாக உயர்த்தி உள்ளதால் அன்றாடம் வேலைக்கு செல்பவர்கள் பெரும் பாதிப்புக்கு உள்ளாகி உள்ளனர்.

தமிழக அரசின் மக்கள் விரோத போக்கை இது காட்டுகிறது. தமிழக அரசு நிர்வாக திறமையின்மையால் நிதி நெருக்கடியில் சிக்கி தவிக்கிறது. ரூ.5 லட்சம் கோடி கடன் உள்ளது. ஆனால் அமைச்சர்களோ அதிகாரிகளுடன் கூட்டு சேர்ந்து போட்டிபோட்டு ஊழல் புரிந்து சம்பாதிப்பதிலேயே குறியாக உள்ளனர். தேனி மாவட்டத்தில் ரூ.12 கோடிக்கு சாலை பணியே நடைபெறாமல் பணத்தை எடுத்துள்ளதாக கூறப்படுகிறது. நிலக்கரி இறக்குமதியில் ரூ.420 கோடி ஊழல் நடந்துள்ளது. காமராஜர் கொண்டுவந்த நீர்பாசன திட்டங்கள், கல்வித்திட்டங்களால் தான் இன்றளவும் தமிழக மக்கள் பயனடைந்து வருகின்றனர். அனைத்து துறைகளிலும் தமிழகம் பின்தங்கி உள்ளது. நீட் தேர்வால் கிராமப்புற மாணவர்கள் பெரும் பாதிப்புக்கு உள்ளாகி உள்ளனர்.

அம்மா உணவகம் திட்டம் தமிழக அரசின் அலட்சிய போக்கால் தோல்வி அடைந்து விட்டது. இந்த நிலையில் மானிய விலையில் இருசக்கர வாகனம் வழங்குவதாக கூறி மீண்டும் மக்களை இந்த அரசு ஏமாற்றி வருகிறது. தமிழக அரசை கண்டித்து மிகப்பெரிய மக்கள் போராட்டம் விரைவில் வெடிக்கும். ஒவ்வொரு அமைச்சரும் ஒவ்வொரு விதமாக பேசி மக்களை குழப்பி வருகின்றனர். ஆர்.கே.நகரில் அப்பாவி ஏழை மக்களுக்கு பணம் வழங்குவதாக ஆசைவார்த்தை கூறி டி.டி.வி.தினகரன் வெற்றி பெற்றுள்ளார். கொங்கு மண்டலத்தில் தென்னையில் இருந்து நீராபானம் இறக்க அரசு அனுமதி வழங்கியது போல ராமநாதபுரம் உள்ளிட்ட தென்மாவட்டங்களில் பனைமரத்தில் இருந்து நீராபானம் இறக்க அனுமதி வழங்க வேண்டும். இவ்வாறு கூறினார்.

இதனை தொடர்ந்து சமத்துவ மக்கள் கழகத்தின் 3-ம் ஆண்டு தொடக்க விழா ராமநாதபுரம் மாவட்ட நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு, மாவட்ட செயலாளர் அப்துல்ஹமீது தலைமையில் நடைபெற்றது. திருவள்ளுர் மாவட்ட இளைஞர் அணி செயலாளர் மாடசாமி முன்னிலை வகித்தார். மாவட்ட அவைத்தலைவர் ஜெகநாதன் வரவேற்று பேசினார். இதில், சமத்துவ மக்கள் கழக நிறுவனர்தலைவர் எர்ணாவூர் நாராயணன் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்.

இந்த கூட்டத்தில், 2.31 கோடி வாசகர்களை கொண்ட தினத்தந்தி நாளிதழ் மற்றும் 30 லட்சத்து 74 ஆயிரம் வாசகர்களை கொண்ட மாலைமலர் நாளிதழ் ஆகியவற்றை பாராட்டியும், பஸ் கட்டண உயர்வை கண்டித்தும், உள்ளாட்சி தேர்தலை உடனடியாக நடத்த வலியுறுத்தியும், பொது விநியோக திட்டத்தின்கீழ் ரேஷன்கடைகளில் தங்குதடையின்றி பொருட்கள் விநியோகிக்க வலியுறுத்தியும், குடிநீர் பிரச்சனைக்கு தீர்வு காண கோரியும், இலங்கை அரசால் சிறைபிடிக்கப்பட்ட 108 தமிழக மீனவர்கள், 165 படகுகளை விடுவிக்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

தமிழக மீனவர்களின் மீன்பிடி உரிமையை பாதிக்கும் வகையிலான இலங்கை அரசின் புதிய சட்ட மசோதாவை தடுத்து நிறுத்த மத்திய அரசை வலியுறுத்தியும், ஹஜ் பயண மானியத்தை மீண்டும் வழங்கவேண்டும் என்பது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. கூட்டத்தில் மாவட்ட துணை செயலாளர்கள் சக்திவேல், சேக்அப்துல்லா, ஒன்றிய செயலாளர்கள் நம்பிராஜன், ராஜா, பால்ச்சாமி, நகர்செயலாளர் அசோக், துணை செயலாளர் ஆலம்பாதுஷா, இளைஞரணி செயலாளர் கேசவன் உள்பட பலர் கலந்து கொண்டனர். 

Next Story