தமிழகத்தை நடிகர்கள் தான் ஆள வேண்டும் என்பது மூடநம்பிக்கை - தமிமுன் அன்சாரி எம்.எல்.ஏ. பேட்டி


தமிழகத்தை நடிகர்கள் தான் ஆள வேண்டும் என்பது மூடநம்பிக்கை - தமிமுன் அன்சாரி எம்.எல்.ஏ. பேட்டி
x
தினத்தந்தி 28 Jan 2018 5:50 AM IST (Updated: 28 Jan 2018 5:50 AM IST)
t-max-icont-min-icon

தமிழகத்தை நடிகர்கள்தான் ஆளவேண்டும் என்பது மூடநம்பிக்கை என்று ஈரோட்டில் தமிமுன் அன்சாரி எம்.எல்.ஏ. கூறினார்.

ஈரோடு,

மனிதநேய ஜனநாயக கட்சி சார்பில் இலவச மருத்துவ முகாம் ஈரோடு பி.பி.அக்ரஹாரத்தில் நேற்று நடைபெற்றது. கட்சியின் பொதுச்செயலாளர் தமிமுன்அன்சாரி எம்.எல்.ஏ. முகாமை தொடங்கி வைத்து பார்வையிட்டார். பின்னர் அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தபோது கூறியதாவது:-

பாரதீய ஜனதா கட்சியின் தேசிய செயலாளர் எச்.ராஜா தமிழர்களின் உணர்வையும், கலாசாரத்தையும் இழிவுபடுத்தி பேசுகிறார். இது கிறிஸ்தவர்கள், முஸ்லிம்கள் போன்ற சிறுபான்மையினரின் மனதை காயப்படுத்துகிறது. ஆண்டாள் விவகாரத்தில் கவிஞர் வைரமுத்து வருத்தம் தெரிவித்தும் அவரை தகாத வார்த்தையால் விமர்சனம் செய்து வருகிறார். எனவே தமிழகத்தில் அமைதியை சீர்குலைக்கும் வகையில் செயல்படும் எச்.ராஜாவை தேசிய பாதுகாப்பு சட்டத்தில் கைது செய்ய வேண்டும்.

கருணாஸ் எம்.எல்.ஏ., தனியரசு எம்.எல்.ஏ. ஆகியோருடன் நான் பொதுக்கூட்டம் மற்றும் விழாவில் கலந்துகொள்கிறேன்.

இது தேர்தலுக்கு அப்பாற்பட்டது. தேர்தல் வரும்போது கூட்டணி நிலைப்பாடு குறித்து கட்சி தலைமை முடிவு எடுக்கும்.

தமிழக ஆட்சியில் வெற்றிடம் ஏற்பட்டதாக நினைத்து நடிகர்கள் பலரும் அரசியலுக்கு வருகிறார்கள்.

அரசியலுக்கு யார் வேண்டுமானாலும் வரலாம். நடிகர்கள், டாக்டர்கள், வக்கீல்கள், பலதுறையை சேர்ந்தவர்களும் வரலாம். ஆனால் களத்தில் வேலை செய்து மக்கள் ஆதரவை பெறுபவர்கள் தான் ஆட்சியை பெற முடியும். ஆட்சியாளர்களை மக்கள் திரையில் தேடாமல் களத்தை பார்த்து தேர்ந்து எடுக்க வேண்டும். தமிழகத்தை நடிகர்கள் ஆளவேண்டும் என்பது மூடநம்பிக்கை.

அரசு போக்குவரத்துக்கழகம் மக்கள் சேவைக்காக செயல்பட்டாலும், அதிகமான நஷ்டம் ஏற்பட்டதால் பஸ் கட்டணம் உயர்த்தப்பட்டது என்று தமிழக அரசு விளக்கம் அளித்து உள்ளது.

இது பொதுமக்களை பாதிக்கும் வகையில் இருப்பதால் மனிதநேய ஜனநாயக கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. எனவே பஸ் கட்டண உயர்வை குறைந்தபட்சம் பாதியாக குறைப்பதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

உள்ளாட்சி அமைப்புகளில் மக்கள் பிரதிநிதிகள் இருந்தால்தான் அடிப்படை பிரச்சினைகளுக்கு தீர்வு காண முடியும்.

எனவே உள்ளாட்சி தேர்தலை தமிழக அரசு விரைவில் நடத்தும் என்று எதிர்பார்க்கிறோம்.

இவ்வாறு தமிமுன் அன்சாரி எம்.எல்.ஏ. கூறினார். 

Next Story