ரெயில்வே மேம்பால பணியை விரைந்து முடிக்க வேண்டும்


ரெயில்வே மேம்பால பணியை விரைந்து முடிக்க வேண்டும்
x
தினத்தந்தி 29 Jan 2018 4:15 AM IST (Updated: 28 Jan 2018 10:57 PM IST)
t-max-icont-min-icon

கிடப்பில் போடப்பட்டுள்ள ரெயில்வே மேம்பால பணியை விரைந்து முடிக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

திருவள்ளூர்,

திருவள்ளூரை அடுத்த வேப்பம்பட்டில் ரெயில் நிலையம் உள்ளது. வேப்பம்பட்டு, பெருமாள்பட்டு மற்றும் சுற்றுவட்டார பகுதியை சேர்ந்த ஏராளமானோர் இந்த ரெயில் நிலையத்தை பயன்படுத்தி வருகின்றனர். வேப்பம்பட்டு ரெயில் நிலையம் அருகே மேம்பாலம் இல்லாததால் பொதுமக்கள் ஆபத்தான நிலையில் ரெயில்வே தண்டவாளத்தை கடந்து சென்றார்கள். அவ்வாறு செல்லும்போது அந்த வழியாக வரும் ரெயில்களில் அடிபட்டு சிலர் இறந்துள்ளனர். இதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக ரெயில்வே தண்டவாளத்தை கடக்க வசதியாக மேம்பாலம் அமைத்து தர வேண்டும் என பொதுமக்கள் சார்பாக கோரிக்கை விடுக்கப்பட்டது.

கடந்த 2011–ம் ஆண்டு சென்னை பெருநகர வளர்ச்சி திட்டத்தின்கீழ் ரூ. 14 கோடியே 60 லட்சம் மதிப்பில் 27 தூண்களுடன் புதிய மேம்பாலம் அமைப்பதற்காக முடிவு செய்யப்பட்டது.  15 மாதங்களில் இந்த மேம்பாலம் அமைக்க திட்டமிடப்பட்டது. 2011– ம் ஆண்டு தொடங்கப்பட்ட இந்த பணியின் போது ரெயில் நிலையத்தின் இரு புறங்களிலும் தூண்கள் அமைக்கப்பட்டது. பின்னர் அந்த பணி மேற்கொண்டு நடைபெறாமல் பாதியில் விடப்பட்டது.

 இதனால் ரெயில்வே மேம்பால பணிக்காக போடப்பட்ட பிரமாண்ட தூண்கள் வெற்று தூண்களாக இன்று வரை காட்சியளிக்கிறது. இவ்வாறாக இந்த  ரெயில்வே மேம்பாலம் அமைக்கும் பணி கிடப்பில் போடப்பட்டு உள்ளது. ஆனால் வேப்பம்பட்டு ரெயில் தண்டவாளத்திற்கு மேல்பகுதியில் ரெயில்வே துறையினர் மேம்பாலப்பணியை முடித்து தயார் நிலையில் வைத்துள்ளனர். வேப்பம்பட்டு ரெயில் நிலையத்தின் இருபுறமும் மேற்கொண்டு பணிகள் நடைபெறாததால் வெற்றுத்தூண்களாக காட்சியளிக்கிறது.

 மேலும் மேம்பாலப்பணிக்காக 4 எல்லைகள் அமைக்கப்பட்டது. அதில் 4–வது எல்லை தேர்ந்தெடுக்கப்பட்டு பணிகள் தொடங்க ஒப்பந்தம் விடப்பட்டது. ஆனால் அந்த பகுதியை சேர்ந்த ஒருவர் பாலப்பணி இடத்தை மாற்றியமைக்க வேண்டும் என்று புகார் அளித்தார். அதனைத்தொடர்ந்து இடம் மாற்றம் செய்யப்பட்டு 1–வது எல்லையில் பணிகள் தொடங்கப்பட்டது.

பின்னர் அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் வல்லுனர் குழு நிராகரித்த பகுதியில் மேம்பால பணிகள் தொடங்குவதாக குற்றம் சாட்டினார்கள். இது பற்றி அவர்கள் புகார் அளித்தார்கள். அதன் அடிப்படையில் சென்னை ஐகோர்ட்டில் தற்போது வழக்கு நடந்து வருகிறது. இந்த நிலையில் கடந்த டிசம்பர் மாதம் சென்னை  ஐகோர்ட்டு ஆணையர் பக்வத் கிருஷ்ணன் வேப்பம்பட்டில் கிடப்பில் போடப்பட்டு இருந்த மேம்பாலப்பணியை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது அங்கிருந்த பொதுமக்கள் மேம்பாலம் அமைக்கும் பணியை விரைந்து முடிக்க நடவடிக்கை எடுக்குமாறு அவரிடம் வேண்டுகோள் விடுத்தனர். இருப்பினும் இதுவரை மேம்பாலம் அமைக்கும் பணி நடைபெறவில்லை. எனவே வேப்பம்பட்டு ரெயில் நிலையத்தில் கடந்த 2011–ம் ஆண்டு தொடங்கப்பட்டு கிடப்பில் போடப்பட்டுள்ள ரெயில்வே மேம்பாலம் அமைக்கும் பணியை அதிகாரிகள் இனிமேலும் காலதாமதம் செய்யாமல் விரைந்து முடிக்க வேண்டும் என பொதுமக்கள், ரெயில் பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Next Story