மகளிர் போலீஸ் நிலைய கட்டிடத்தை திறக்க கோரிக்கை


மகளிர் போலீஸ் நிலைய கட்டிடத்தை திறக்க கோரிக்கை
x
தினத்தந்தி 29 Jan 2018 4:00 AM IST (Updated: 28 Jan 2018 11:02 PM IST)
t-max-icont-min-icon

புதிதாக கட்டப்பட்டுள்ள மகளிர் போலீஸ் நிலைய கட்டிடத்தை உடனடியாக திறக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

கும்மிடிப்பூண்டி,

திருவள்ளூர் மாவட்டம்  கும்மிடிப்பூண்டியில் தமிழக அரசால்  கடந்த 2012–ம் ஆண்டு அனைத்து மகளிர் போலீஸ் நிலையம் கும்மிடிப்பூண்டி போலீஸ் நிலைய கட்டிடத்தின் ஒரு பகுதியில் தொடங்கப்பட்டது. இதனையடுத்து தனியார் உள்பட பல்வேறு கட்டிடங்களுக்கு இடமாற்றம் செய்யப்பட்டது.

 குடும்ப பிரச்சினை தொடர்பாக மகளிர் போலீஸ் நிலையம் வருவோரும், அங்கு பணியாற்றும் பெண் போலீசாரும் இத்தகைய அடிக்கடி இடமாற்ற சூழலால் பெரும் அவதிப்பட்டு வந்தனர்.

தற்போது கும்மிடிப்பூண்டி போலீஸ் குடியிருப்பில் சப்–இன்ஸ்பெக்டருக்காக ஒதுக்கப்பட்ட ஒரு  வீட்டில் மேற்கண்ட அனைத்து மகளிர் போலீஸ் நிலையம் இயங்கி வருகிறது. இந்த மகளிர் போலீஸ் நிலையத்தில் இதுவரை போதிய பெண் போலீசார் நியமிக்கப்படவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

தமிழ்நாட்டின் முதல் சட்டமன்ற தொகுதி என்ற பெருமைக்குரிய கும்மிடிப்பூண்டியில் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தை அதற்கென ஒரு தனியொரு கட்டிடத்தில் அமைத்து அதில் தேவைக்கு ஏற்ப போதிய பெண் போலீசாரை நியமிக்க வேண்டும் என பொதுமக்கள் சார்பில்  தமிழக அரசுக்கு தொடர்ந்து கோரிக்கை முன் வைக்கப்பட்டு வந்தது.

இதனையடுத்து ரெட்டம்பேடு சாலையில் உள்ள கும்மிடிப்பூண்டி துணை போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்திற்கு அருகே  அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்திற்கான இடம் ஒதுக்கீடு செய்யப்பட்டு அதற்கான கட்டிட பணிகள் கடந்த 2016–ம் ஆண்டு தொடங்கப்பட்டது.  கீழ்தளம் மற்றும் முதல் தளம் என மொத்தம் 2 ஆயிரத்து 559 சதுர அடியில் அமைக்கப்பட்டு உள்ள புதிய கட்டிட பணிகள் அனைத்தும் முடிவடைந்து 10 மாதங்கள் ஆகிறது. ஆனால் இதுவரை இந்த புதிய கட்டிடம் பயன்பாட்டுக்கு வரவில்லை. போதிய பெண் போலீசாரை நியமித்து புதிதாக கட்டி முடிக்கப்பட்ட அனைத்து மகளிர் போலீஸ் நிலைய கட்டிடத்தை உடனடியாக திறக்க வேண்டும் என்பது இந்த பகுதி மக்களின் கோரிக்கையாக உள்ளது.

Next Story