பஸ் கட்டணம் குறைப்பு என்பது கண் துடைப்பு நடவடிக்கை


பஸ் கட்டணம் குறைப்பு என்பது கண் துடைப்பு நடவடிக்கை
x
தினத்தந்தி 29 Jan 2018 5:15 AM IST (Updated: 29 Jan 2018 1:52 AM IST)
t-max-icont-min-icon

பஸ் கட்டணம் குறைப்பு என்பது கண் துடைப்பு நடவடிக்கை என்று சரத்குமார் கண்டனம் தெரிவித்துள்ளார்.

தூத்துக்குடி,

தூத்துக்குடியில் நடந்த ஒரு விழாவில் கலந்து கொள்வதற்காக அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார், ராதிகா சரத்குமார் ஆகியோர் நேற்று காலை விமானம் மூலம் தூத்துக்குடிக்கு வந்தனர்.

பின்னர் கட்சியின் வடக்கு மாவட்ட செயலாளர் வில்சன் வீட்டில் வைத்து நிருபர்களுக்கு சரத்குமார் பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

தமிழகத்தில் பஸ் கட்டணம் குறைப்பு என்பது கண்துடைப்பு நடவடிக்கையாகும். இது கண்டிக்கத்தக்கது. அடித்தட்டு மக்கள்தான் அதிக அளவில் பஸ்சில் பயணம் செய்து வருகின்றனர். இதனால் கட்டணம் உயர்த்துவது என்பது தேவையில்லாதது. தற்போது எல்லோரும் போராட்டம் நடத்துகின்றார்களே என்று கட்டணத்தை குறைத்து இருப்பதாக தெரிகிறது. மக்களை பற்றி சிந்தித்து கட்டணத்தை குறைத்ததாக தெரியவில்லை. ஆகையால் நாளை (செவ்வாய்க்கிழமை) நடைபெற இருக்கும் போராட்டம் தொடரும்.

கடந்த ஆட்சியில் கடன் வைத்தால், அதனை அடைப்பதற்கு தற்போது கட்டண உயர்வு தான் வழியா?. வளர்ச்சிக்கு என்ன செய்து உள்ளார்கள். விவசாயம் தான் வருங்காலத்தில் மிகப்பெரிய பொருளாதாரத்தை உயர்த்தும். அதனை நம்பிதான் இருக்க முடியும். அதனை லாபகரமாக உருவாக்குவது அனைவரின் கடமை. தங்க தட்டு இருந்தாலும், சாப்பிட உணவு இல்லாத நிலை உருவாகி கொண்டு இருக்கிறது. இதனை மாநிலம் மட்டும் இன்றி, இந்தியா முழுவதும் உள்ள ஆட்சியாளர்கள் சிந்தித்து பார்க்க வேண்டும்.

அரசியலுக்கு தகுதி கிடையாது. யார் வேண்டுமானாலும் வரலாம். ஜனநாயக நாட்டில் அனைவருக்கும் தகுதி இருக்கிறது. அதனால் ரஜினிகாந்த் அரசியலுக்கு வருவது எனக்கு சிறப்பான ஒன்றாக தெரியவில்லை. எல்லோரும் அரசியலுக்கு வரட்டும், மக்களை சந்திக்கட்டும். கொள்கையை மக்களுக்கு சொல்லட்டும். எல்லோரும் அரசியலுக்கு வரவேண்டும் என்றுதான் நான் ஆசைப்படுகிறேன். உள்ளாட்சி தேர்தலில் நாங்கள் தனித்து போட்டியிடுவோம். இவ்வாறு அவர் கூறினார்.

அப்போது தென்மண்டல செயலாளர் சுந்தர், மாவட்ட செயலாளர் வில்சன் மற்றும் நிர்வாகிகள் உடன் இருந்தனர்.

Next Story