அனைத்து பள்ளிக்கூடங்களிலும் நூலகங்களை உருவாக்க வேண்டும்


அனைத்து பள்ளிக்கூடங்களிலும் நூலகங்களை உருவாக்க வேண்டும்
x
தினத்தந்தி 29 Jan 2018 3:30 AM IST (Updated: 29 Jan 2018 2:06 AM IST)
t-max-icont-min-icon

மாணவர்களின் வாசிப்பு திறனை மேம்படுத்த அனைத்து பள்ளிக்கூடங்களிலும் நூலகங்களை உருவாக்க வேண்டும் என்று பாளையங்கோட்டையில் நடந்த சைவ சமய மாநாட்டில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டன.

நெல்லை,

பாளையங்கோட்டை சைவ சபையின் சார்பில் சைவ சமய மாநாடு பாளையங்கோட்டை நேருஜி சிறுவர் கலையரங்கத்தில் நேற்று முன்தினம் தொடங்கியது. 2-வது நாளான நேற்று காலையில் நடந்த மொழி அரங்கத்தை செங்கோல் ஆதீனம் சிவபிரகாச தேசிக சத்திய ஞான பரமாச்சாரிய சுவாமி தலைமை தாங்கி தொடங்கி வைத்தார்.

அவ்வையின் தமிழ் அமுதம் என்ற தலைப்பில் இலங்கை ஜெயராஜ், பெரியபுராணத்தில் பெண்கள் என்ற தலைப்பில் பேராசிரியை விசாலாட்சி சுப்பிரமணியன், வள்ளுவர் காட்டும் வாழ்வியல் நெறி என்ற தலைப்பில் நீதிபதி மகாதேவன், யாமறிந்த புலவரிலே பாரதியை போல் என்ற தலைப்பில் நீதிபதி ராமசுப்பிரமணியன் ஆகியோர் பேசினார்கள். தொடர்ந்து மணிவண்ணன், மதிவேலாயுதம், ஊரன் அடிகள் ஆகியோர் பேசினார்கள்.

மாநாட்டில், இந்தியாவில் உள்ள சில மாநிலங்களில் எல்லா வகையான பள்ளிகளிலும் பள்ளி இறுதி வகுப்பு வரை அந்தந்த மாநில மொழிகளிலேயே கல்வி கற்பிக்கப்படுகிறது. அதேபோல் தமிழ்நாட்டிலும் தமிழ் மொழியிலேயே கல்வி கற்பதை தமிழக அரசு கட்டாயமாக்க வேண்டும். தமிழகத்தில் உள்ள அனைத்து பள்ளிக்கூடங்களிலும் நூலகங்களை உருவாக்கி மாணவர்களின் வாசிப்பு திறனை மேம்படுத்த ஆவணம் செய்யவேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

Next Story